D.K புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் V.துரைராஜ் தயாரிக்கும் முதல் திரைப்படம் ’பைரி‘.
கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்று ‘நாளைய இயக்குநர் சீஸன்-3’-ல் முதல் பரிசு வென்ற ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ உட்பட பல குறும் படங்களை, நண்பர்களின் வளர்ச்சிக்காக தயாரித்து, 25-க்கும் மேற்பட்ட குறும் படங்களில் கதாநாயகனாக நடித்த சையத் மஜீத், இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகியாக, மேக்னா, சரண்யா ரவிச்சந்திரன், நடிக்கிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் விஜி சேகர், S.R.ஆனந்த குமார், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், கார்த்திக் பிரசன்னா, தினேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாகர்கோவில் நகரைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் சிறு கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஏ.வி. வசந்த், படத் தொகுப்பு – R.S சதீஸ் குமார், இசை – அருண் ராஜ், பாடல்கள் – பிரான்சிஸ் கிருபா, கவித்ரன். ஆக்ஷன் – விக்கி, ஒலிப்பதிவு – ராஜா. நடனம் – சிவ கிரிஷ், தயாரிப்பு மேற்பார்வை – மாரியப்பன், விசு. பி.ஆர்.ஓ.– சக்தி சரவணன்.
‘நாளைய இயக்குநர் சீஸன்-5’-ல் கலந்து கொண்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, ‘நெடுஞ்சாலை நாய்கள்’ என்ற குறும் படத்திற்காக ‘சீஸன்-5’-ன் ‘சிறந்த வசனகர்த்தா’ விருது பெற்ற ‘ஜான் கிளாடி’ இத்திரைப்படத்தை இயக்குகிறார். இவர் திரு. சஞ்சீவ், மற்றும் சில இயக்குநர்களிடமும் உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார்.
புறா பந்தயத்தை மையமாக வைத்து, இந்திய சினிமாவில் சில திரைப்படங்கள் வந்திருந்தாலும், புறா பந்தயத்தின் தீவிரத்தையும், அதில் ஈடுபடுபவர்களின் வாழ்வியலையும் குறித்தும் முழுமையாகப் பேசும் ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது இந்த ‘பைரி’ திரைப்படம்.
குமரி மாவட்டத்தின் தலைநகரமான, நாகர்கோவிலும், அதன் சிறப்புகளும் அனைவரும் அறிந்ததே. ஆனால் 100 ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கோவில் நகரில், நடந்த புறா பந்தயங்கள் பற்றிய பெரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், பலருக்கும் இது குறித்து தெரியாமலேயே இருந்து வருகிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை, நாகர்கோவில் நகரில் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்த புறா பந்தயத்தை மையமாக வைத்து, நடந்த பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், உருவாகி வரும் திரைப்படமே ‘பைரி’.
இப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு, நாகர்கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வேகமாக நடந்து வருகிறது.