L.S.தியான் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் S.நட்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன்பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘படைப்பாளன்’.
இந்த படத்தில் L.S.பிரபு ராஜா நாயகனாக நடித்துள்ளார். மற்றும் மனோபாலா, இயக்குநர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், ‘காக்கா முட்டை’ ரமேஷ் – விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – வேல்முருகன், இசை – கிருபாகரன், பாடல்கள் – கு.கார்த்திக், கலை இயக்கம் – ஸ்ரீமன் பாலாஜி, படத் தொகுப்பு – எஸ்.பி.அகமது, மக்கள் தொடர்பு – மணவை புவன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கம் – L.S.பிரபு ராஜா. இவர் இயக்குநர் தருண் கோபியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
திரைப்படத் துறையில் சமீப காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் கதைத் திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில், திருச்சி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான சு.திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சிப் பிரமுகரான திருச்சி வேலுச்சாமி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் ஜாக்குவார் தங்கம், நடிகர் மனோபாலா மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநர் பிரபு ராஜா சினிமாவிற்கு முயற்சி செய்தபோதெல்லாம் நான் கோபப்பட்டிருக்கேன். ‘நீ ஏன் இந்தத் துறைக்கு வருகிறாய்?’ என்று சத்தம் போட்டிருக்கேன். ஆனால் இன்று தம்பியைப் பார்த்து நான் வெட்கித் தலை குனிகிறேன். இந்தப் படத்தை தம்பி பிரபு ராஜா அவ்வளவு சிறப்பாக எடுத்திருக்கிறார். அவருக்கு சினிமாவில் பெரிய இடம் கிடைக்க வாழ்த்துகள்…” என்றார்.
இசை அமைப்பாளர் கிருபாகரன் பேசும்போது, “நான் வேலையை விட்டுட்டு சினிமாவிற்கு வந்தவன். இந்தப் பீல்டில் பத்து வருடமாக இருக்கிறேன். கன்னடத்தில் நான்கு படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் தமிழில் சரியான படம் வரலியே என்று ஏங்கினேன். அதற்கான பலன் இப்போது கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கிறது. இரண்டு வாரம் உழைத்து உருவாக்கிய ஒரு பாடலை சரியில்லை என்பதற்காக தூக்கிப் போட்டோம். இதுவரை நான் பாடல் வரிகளுக்கு ட்யூன் போட்டதில்லை.. முதன்முதலாக இந்தப் படத்தில்தான் வரிகளுக்கு இசை அமைத்தேன். தமிழ் வரிகளுக்குள் ஒரு இசை இருக்கும் என்பதை இப்போதுதான் உணர்ந்தேன்” என்றார்.
இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது, “வள்ளல் தன்மைக்கு கடவுள் தந்த மனித உருவம்தான் எம்.ஜி.ஆர். அந்த எம்.ஜி.ஆருக்கு மகன் போல இருந்தவர் திருநாவுக்கரசர். அவர் ஒரு படத்தின் கதாநாயகனும்கூட. அவரை இந்த மேடையில் சந்தித்தது சந்தோஷம். இந்தப் படத்தின் ட்ரைலரில் ஒளிப்பதிவு எனக்கு மிகவும் பிடித்தது. அது படத்தின் தரத்தை கூட்டி இருக்கிறது.
இந்தப் படைப்பாளன் படம் கதைத் திருட்டு சம்பந்தப்பட்ட கதை. ஒருமுறை பத்திரிகையாளர் தேனி கண்ணன் ‘நான் ஒரு கதை சொல்றேன்.. படம் எடுக்கிறீங்களா?’ என்று கேட்டார். நான் ‘முதலில் அந்தக் கதையைப் பதிவு செய்துவிட்டு வா தம்பி’ என்றேன்.
ஏனென்றால் கதை என்பது ஒருவனின் அறிவு. அதனால் அதை பாதுகாப்பாக வைக்க வேண்டியது நமது கடமை. ‘இடம் பொருள் ஏவல்’ என்று ஒரு படம் எடுத்தேன். அக்கதையை எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னார். அந்தக் கதைக்கு நான் தயாரிப்பாளரிடம் அழைத்துச் சென்று பத்து லட்சம் ரூபாய் வாங்கிக் கொடுத்தேன். ஏன் என்றால் கதை என்பது அவ்வளவு முக்கியம். இந்த வாழ்வை மிக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்பவன்தான் படைப்பாளி. இந்தப் படைப்பாளன் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்…” என்றார்.
பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, “இந்த மேடையை நான் மிக நெகிழ்வாகப் பார்க்கிறேன். அண்ணன் திருநாவுக்கரசர் உடன் மேடையில் தஞ்சையில் அமர்ந்த நிகழ்வு ஞாபகம் வருகிறது. அந்த வகையில் படைப்பாளன் படக் குழுவிற்கு நன்றி.
உதவி இயக்குநர்கள் பற்றி ஒரு பாடல் கேட்டார்கள். இங்கு வியாபாரத்தனமான பாடல்களுக்குத்தான் வரவேற்பு கிடைக்கிறது. இங்கு மனதறிந்து பாராட்டும் குணம் யாருக்கும் இல்லை. உதவி இயக்குநர்களின் வாழ்க்கையை நான் நிறைய பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு வந்த பின் மற்றவர்களை கண்டுகொள்வதில்லை.
அண்ணன் சீனு ராமசாமி உதவி இயக்குநர்களின் வலிகளை சொல்லும் பாடலை இவ்வளவு சோகமாக சொல்ல வேண்டாம் என்றார். ஆனால், இங்கு கண்ணீரையும் சில சமயம் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. உதவி இயக்குநர்களின் கண்ணீர் உண்மையானது. அதை இந்தப் ‘படைப்பாளன்’ படம் செய்திருக்கும் என்று நம்புகிறேன்…” என்றார்.
நடிகர் மனோபாலா பேசும்போது, “சிநேகன் சார் பேசும்போது இப்படத்தின் கதை தெரியாது என்றார். நான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். எனக்கும்தான் கதை தெரியாது. ஏன் இந்த இயக்குநருக்காவது தெரியுமான்னு தெரியல. இப்பலாம் வாயில் இருந்தே கதையை திருடுகிறார்கள். இந்த தீபாவளிக்கு மட்டும் எத்தனை கேஸ் வரப் போகுதுன்னு பாருங்க. ஏன்னா நிறைய பேர் தீபாவளிக்கு கோர்ட்லதான் நிப்பாங்க. இந்தப் ‘படைப்பாளன்’ நிச்சயமாக வெற்றி பெறுவான்…” என்றார்.
இயக்குநர் பிரபு ராஜா பேசும்போது, “இந்தப் படத்தைப் பற்றி நிறைய பேர் பேசி இருக்கிறார்கள். இங்கு கதைத் திருட்டு இல்லை என்று சில ஜாம்பவான்கள் சொல்கிறார்கள். அதெல்லாம் சும்மா.
இந்தப் படத்தை தயாரிக்க ஆறுமுகம் என்பவர் முன் வந்தார். திடீரென அவர் ‘கதையை ரெடி பண்ண நீங்கள்தான் பணம் கொண்டு வர வேண்டும்’ என்றார். ஆனால் அவர் இடையில் ஓடிவிட்டார். சில பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிக்காரர்கள் யாருமே கதை கேட்க மாட்டார்கள். அங்குள்ள இடைத்தரகர்கள் கதை கேட்டு முடிவு செய்கிறார்கள். அதில் நிறைய திருட்டு நடக்கிறது. ஒரு பெரிய இயக்குநர் உதவி இயக்குநரின் கதையை எடுக்கும்போது அவங்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்கணும். இந்தப் படத்தில் பல உண்மைகளை சொல்லி இருக்கிறோம். யாரையும் காயப்படுத்தணும்னு இந்தப் படத்தை எடுக்கவில்லை. இந்தப் படம் வெற்றியடைய பத்திரிகையாளர்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
எஸ்.திருநாவுக்கரசர் பேசும்போது, “எனக்கும் சினிமாவில் சில அனுபவங்கள் உண்டு. சில படங்களில் தயாரிக்க, நடிக்க என்று இருந்தேன். திரைக்கதையும் எழுதியுமிருக்கிறேன். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சில நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். அவருக்கும் எனக்கும் பிரச்சனை என்பதால் யாரும் நடிக்க வரவில்லை.
இந்தப் படத்தின் இயக்குநர் தம்பி பிரபு ராஜா மிகவும் துடிப்பான இளைஞன். அவரை எனக்கு லயோலா காலேஜில் படிக்கும்போதே தெரியும். அவரை எப்போது பார்த்தாலும் ஊக்கப்படுத்துவேன். மிகவும் மன உறுதியோடு செயல்படக் கூடியவர். இந்தப் படத்தை முழுமையாக பிரபு ராஜா முடித்து விட்டார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
பிரபு ராஜா உதவி இயக்குநராக ரொம்ப கஷ்டப்பட்டவர். நிறைய பேரிடம் கதைகளைச் சொல்லியும் இருக்கிறார். அதனால் அவரது அனுபவம்தான் இந்தப் படம். ஆனால் பிரபு ராஜா மிகவும் சிரமப்பட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.
சில பேருக்குத்தான் கேமரா லுக் அமையும். பிரபுராஜாவுக்கு அது நல்லா அமைஞ்சிருக்கு. பெரிய பந்தா எதுவும் இல்லாமல் இயல்பா நடிச்சிருக்கார். ஆக எல்லா வகையிலும் இந்தப் படம் நல்லா வரும். மற்றபடி என் தம்பி பிரபுவால் எல்லாம் முடியும்.
கதையின் கரு ரொம்பவும் சிறப்பாக இருக்கு. அது தற்போது சினிமாவில் நடைபெற்று வரும் விசயம் என்பதால் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும். ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதைதான் முதல் முக்கியம். கதைதான் ஹீரோ. நடிகர்கள் எல்லாம் இரண்டாவதுதான். எம்.ஜி.ஆருக்குகூட தோற்ற படங்கள் உண்டு. ஆக கதைதான் எப்பவும் முக்கியம். அதேபோல் திரைக்கதையும் பெரிய சுவாரசியத்தை தர வேண்டும்.
படத்தின் இசை சிறப்பாக இருக்கிறது. பாடல்களை கவிஞர்கள் நன்றாக எழுதி இருக்கிறார்கள். கேமராமேன் சூப்பரா பண்ணிருக்கார்.
சினிமா நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கக் கூடிய தொழில் இது. இப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு. ஏன் இந்தியாவே ரொம்ப கஷ்டத்துலதான் இருக்கு. சினிமா என்பதே பிரசவ வலி மாதிரிதான். பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும். சம்பளங்களை குறைச்சா சினிமா இன்னும் சுகாதாரமா இருக்கும். ஹெல்த்தியா இருக்கும். அதனால் இந்த விசயத்தை பண்ணலாம்..” என்றார்.

















