full screen background image

“பாயும் புலி தலைப்புதான் படத்தின் பலம்…” – நடிகர் விஷாலின் நம்பிக்கை

“பாயும் புலி தலைப்புதான் படத்தின் பலம்…” – நடிகர் விஷாலின் நம்பிக்கை

விஷால், காஜல் அகர்வால் நடிப்பில் வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் படம் ‘பாயும் புலி’. இபடத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ‘சிலுக்கு மரமே’ என்கிற பாடலின் வெளியீடு பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று மாலை நடைபெற்றது. இயக்குநர் என். லிங்குசாமி பாடலை வெளியிட்டார். இயக்குநர்கள் பாண்டிராஜும், திருவும்  பெற்றுக் கொண்டனர்.

IMG_8325

விழாவில் விஷால் பேசும்போது, ”இது என் வாழ்க்கையில் முக்கியமான படம் என்று  நினைக்கிறேன். இது நான் நடித்த போலீஸ் சம்பந்தப்பட்ட 3-வது கதை. எப்போதும் என்னை இயக்கும் இயக்குநர்கள் அந்தப் படத்தை அவரது  பெஸ்டான சிறந்த படமாக கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அந்த இயக்குநர்களிடம் சிறந்ததெல்லாம் எனக்கே கிடைக்க வேண்டும் என்று நினைப்பேன். குறிப்பாக க்ளைமாக்ஸ் சிறப்பாக வர வேண்டும் என்று நினைப்பேன். அதுதான் பார்ப்பவர் மனதில் தங்குவது. படத்தின் தன்மையை ரசிகர்கள் மனதில் தங்க வைப்பதும் அதுதான். இதில் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு அமைத்திருக்கும் க்ளைமாக்ஸ் சண்டை காட்சி நிச்சயம் பேசப்படும்.

‘பாண்டிய நாடு’ எனக்கு பெரிய திருப்பு முனை. கிட்டத்தட்ட மறுபிரவேசம் போல உணர வைத்தது. இந்தப் படமும் சுசீயின் சிறந்த படைப்புதான். இமானின் சிறந்த படைப்பு என்றும் பேச வைக்கும். இன்றைக்கு ‘சிலுக்கு மரமே’ பாடல் வெளியாகியுள்ளது. இதைவிட எனக்குப் பிடித்தது இந்தப் படத்தில் வரும் ‘யாரந்த முயல் குட்டி’ பாடல்தான்.

வேந்தர் மூவிஸில் நடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இவர்களை மாதிரியான தயாரிப்பாளர்கள்தான் எங்களை மாதிரியான நடிகர்களுக்கு  கண்டிப்பாகத் தேவை. வேந்தர் மூவிஸில் நடிக்க எனக்கு ஆரம்பத்தில் பயம் இருந்தது. தயக்கம் இருந்தது, சந்தேகம் இருந்தது. அந்த பயத்தோடுதான் படத்தை தொடங்கினோம்.. போகப் போக எங்கள் இருவருக்குள்ளும் நல்லதொரு புரிதல் ஏற்பட்டது. நான் நினைத்தது தவறு என்று புரிந்தது. இனிமேல் இவர்களுடன் தொடர்ந்து பயணம் செய்யலாம் என நம்பிக்கை வந்திருக்கிறது. வெளிப் படங்களில் நடிக்கலாம் என்கிற நம்பிக்கையும் வந்திருக்கிறது. 

இது காஜலுடன் எனக்கு முதல் படம். சூரியும் நன்கு பழகினார். எங்கள் வீட்டிலிருந்து ஒரே கேரியரில் அவருக்கும் சாப்பாடு அனுப்பும் அளவுக்கு சூரி பழகினார். நானும் திருவும் மீண்டும் இணைய இருக்கிறோம்.

‘பாயும் புலி’ பற்றிப் பலரும் பலவிதமாகக் கேட்கிறார்கள். இந்தத் தலைப்பை கேட்டபோது தயாரிப்பாளர் ஏவி.எம். பாலசுப்ரமணியம் அவர்கள், மறுப்பு கூறாமல் உடனே கொடுத்தார். இந்தப் ‘பாயும் புலி’ தலைப்பு, படத்திற்கு மிகப் பெரிய பலம். சக்தியும், ஊக்கமும் தரும் தலைப்பு இது. இது எதை நோக்கிப் பாயுது என்பது படத்தின் க்ளைமாக்ஸில்தான் புரியும். 

இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதல்ல. ஆனால், உண்மைச் சம்பவத்தின் சாயல் தெரியலாம் இதே சாயலில் சில சம்பவங்கள் மதுரையில் நடந்துள்ளன.

பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு போகத் திட்டமிட்டோம். ஆனால் செலவு அதிகமாகிவிட்டதால் இங்கேயே ஷூட்டிங்கை முடித்து விட்டோம் எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொண்டோம். ஆகஸ்ட்-2-ம் தேதி, படத்தின் இசை வெளியீடு நடைபெறவுள்ளது. செப்டம்பரில்-4-ம் தேதி ‘பாயும் புலி’ தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது…” என்றார்.

IMG_8402

விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது, ”சுசீந்திரன் நிச்சயமாக தயாரிப்பாளர்களின் இயக்குநர்தான். அவரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகவே பாராட்டுகிறேன். 80 நாளில் முடிப்பதாகக் கூறிவிட்டு 74 நாளில் முடித்துள்ளார். தயாரிப்பாளர்களின் நடிகர்களாக பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் போன்ற நட்சத்திரங்கள் இருந்தார்கள். இப்போது விஷால் இருக்கிறார். இந்தப் படக் குழுவே தயாரிப்பாளர்களின் படக் குழுதான்.” என்றார்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்:பேசும் போது  ”சுசீந்திரன் நியூசிலாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப் போவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் கடைசியில் இங்க பக்கத்துல காரைக்குடில நடத்தி எங்களையெல்லாம் ஏமாற்றிவிட்டார்..” என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, ”நான் மகான் அல்ல’ படத்துக்குப் பிறகு எனக்குப் பிடித்த படம் என் மனசுக்கு நெருக்கமான படம் இது. மதன் சார் இந்தப் படம் பிரமாண்டமாக வருவதற்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார். அவருக்கு என் நன்றி..” என்றார்.

இசையமைப்பாளர் டி.இமான் பேசும்போது, ”இது எனக்கு ஸ்பெஷலான படம். ‘பாண்டியநாடு’, ‘ஜீவா’வுக்குப் பிறகு  சுசீயுடன் இணையும் 3 வது படம். வேந்தர் மூவிசுக்கான முதல் படம். இதில் 5 பாடல்களை வைரமுத்து சார் அருமையாக எழுதியுள்ளார்…” என்றார்.

IMG_8386

இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, ”பாயும் புலி’யின் ஓசையே ‘பாகுபலி’ என்று கேட்பது  போல் தெரிகிறது. அதே போல வெற்றியும் தொடரட்டும். விஷால் என் கதாநாயகன். அவர் நடிப்பில் ‘சண்டக்கோழி பார்ட் 2’ உருவாகவுள்ளது. செப்டம்பர் 9-ல் அந்தப் படத்தின் ஷூட்டிங்கும் தொடங்குகிறது.” என்றார்.

நடிகர் ஜெயபிரகாஷ் பேசும்போது, விஷால் படத்தில் நான் ஒரு ஓரமாகக்கூட நிற்பேன். சுசீயும் அப்படி வாய்ப்பு கொடுப்பார். இஷ்டப்பட்டு வேலை பார்த்தோம். எனவே இப்படத்தில் எதுவும் கஷ்டமாகத் தெரியலை..” என்றார்.

தயாரிப்பாளர் மதன் பேசும்போது,  ”விஷாலுடன் நாங்கள் இணையும் 4-வது படம் இது. படம் ஆரம்பித்த முதல் நாள் போனதுதான். அப்புறம் போகவில்லை. சொன்னபடி சொன்ன நாட்களுக்குள் படத்தை முடித்துக் கொடுத்து விட்டார்  இயக்குநர்..” என்றார்.

விழாவில்   கலை இயக்குநர் ராஜீவன், நடிகர் சூரி, இயக்குநர்கள் பாண்டிராஜ், திரு,  வி.மியூசிக் ஐஸ்வர்யா, உடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

Our Score