full screen background image

பாசக்காரப் பய – சினிமா விமர்சனம்

பாசக்காரப் பய – சினிமா விமர்சனம்

காயன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் விக்னேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்க காயத்ரி ரெமா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகனாக பிரதாப் நடிக்க கஞ்சா கருப்பு, தேனி முருகன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு. கே.வி மணி, இசை – சௌந்தர்யன், பாடல்கள்-அறிவுமதி. டாக்டர். கிருதியா, செங்கதிர்வாணன், வசனம் – பி.சேதுபதி, இசை – செளந்தர்யன், படத் தொகுப்பு – எஸ்.பி.அஹமத், கலை இயக்கம் – டி.எம்.சாமி, சண்டை பயிற்சி இயக்கம் – லயன் சாரா, நடனப் பயிற்சி இயக்கம் – சாய் சரவணா, கோபால்ஜி, கதை, திரைக்கதை, இயக்கம் – விவேகபாரதி.

இதுவொரு கிராமத்துக் காதல் கதை. நாம் ஏற்கெனவே பார்த்த, கேட்ட கதையைத்தான் பழைய கள் புதிய மொந்தை பாணியில் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் நாயகனான குணா ஒரு கொலையை செய்துவிட்டு சிறையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். வெளியிலோ அவனுடைய அக்காள் மகளான தேன்மொழி குணா மீது காதல் பைத்தியமாக இருக்கிறாள்.

ஊரிலேயே டெய்லர் கடை வைத்துப் பிழைப்பை ஓட்டி வருகிறாள் தேன்மொழி. தனது மாமனுக்காக அவள் காத்துக் கொண்டிருக்க.. இன்னொரு பக்கம் அதே ஊரை சேர்ந்த பிரதாப், தேன்மொழியை தான் காதலிப்பதாக அவளிடம் சொல்கிறான்.

ஆனால் தோன்மொழி அதையேற்க மறுத்து ‘மணந்தால் மகாதேவன்; இல்லையேல் மரணதேவன்’ என்பதைப் போல் “என்னுடைய கழுத்து தன் மாமன் குணா கட்டும் தாலிக்காக மட்டுமே காத்துக் கொண்டிருக்கிறது” என்கிறாள்.

தண்டனைக் காலம் முடிவடைந்து வெளியில் வருகிறான் குணா. மாமனை ஆசை தீர வரவேற்று பாடுகிறாள் தேன்மொழி. ஆனால் மாமன் குணாவுக்கோ தேன்மொழி மீது காதல் இல்லை.. அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்விக்க முனைகிறான். தேன்மொழியோ இதை ஏற்க மறுக்கிறாள்.

இன்னொரு பக்கம் அதே ஊரில் இருக்கும் மைனர் ஒருவனும் தேன்மொழி மீது கண் வைக்கிறான். பிரதாப்பும் இன்னொரு பெண்ணுடன் திருமணத்திற்காக நிச்சயத்தார்த்தம் செய்து கொள்கிறான்.

அனைத்து வழிகளும் அடைபட்ட பின்பும் தேன்மொழி, மாமன் நினைப்பாகவே இருக்கிறாள். குணாவோ இவளை அறவே வெறுக்கிறான். இதன் முடிவென்ன..? குணா தேன்மொழியை வெறுப்பதன் காரணம் என்ன..? கடைசியில் யார், யாரை திருமணம் முடிக்கிறார்கள்..? என்ற கேள்விகளுக்கான விடைதான் இந்தப் படம்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் விக்னேஷ் இதைவிடவும் சிறப்பாகவே நடிக்கக் கூடியவர்தான். நடித்தவர்தான். அன்பு, பாசம், நேசம், வீரம் என்று அனைத்து வகையான நடிப்பையும் படத்தில் காண்பித்திருந்தாலும் இயக்குதலின் போதாமையால் அது சரிவர பதிவாகவில்லை.

இது போன்ற கிராமத்து படங்களின் நாயகியாகவே கருதப்படும் காயத்ரி ரெமா தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இவருடைய நடிப்புக்கு தாராளமாக பாஸ் மார்க் கொடுக்கலாம். தன்னுடைய அனுபவ நடிப்பை வைத்தே இந்தப் படத்திலும் பாஸாகியிருக்கிறார் காயத்ரி.

இன்னொரு நாயகனான சுப்ரமணியும் ஒரு காதலனாக நடித்திருக்கிறார். மதுர பாண்டி’ என்ற திருட்டு புத்தி கொண்டவராக கஞ்சா கருப்புவின் காட்சிகள் அவரும் படத்தில் இருப்பதைக் காட்டுகிறது. வில்லனாக நடித்திருக்கும் ராஜசேதியின் நடிப்பும் ஓகே ரகம்தான்.

மீடியம் பட்ஜெட் மற்றும் சின்ன பட்ஜெட் படங்களின் ஒளிப்பதிவு நாயகனான கே.வி.மணியின் ஒளிப்பதிவு குறையில்லாதது. முடிந்த அளவுக்கு மொத்தப் படத்தினையும் அழகுற காண்பித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் செளந்தர்யனின் இசையில் ஐந்து பாடல்களுமே லட்டு, லட்டாக கிடைத்திருக்கிறது. நெஞ்செல்லாம் தித்திக்குது’, ‘ஒருத்தர ஒருத்தர் பார்த்து’, ‘நிலவுக்கு சுகமா’, ‘சிஞ்சனக்கன செனச்சனக்கன கிழிஞ்சது வேட்டி’… என்று அனைத்து பாடல்களுமே காதுகளை குளிர வைத்திருக்கின்றன. பாராட்டுக்கள் ஸார்..!

சண்டை இயக்குநர் இன்னும் சற்று உழைத்திருக்க வேண்டும். பட்ஜெட் குறைவு என்பதாலேயே சண்டைப் பயிற்சியை ஏனோ, தானோவென்று செய்திருக்கிறார்கள். அதேபோல் ஜெயில் செட்டுகளுக்காக அதிகமாக மெனக்கெடாமல், ஏதோ ஒரு பொட்டல் காட்டில் படம் பிடித்துள்ளார்கள்.

இந்தக் காலத்திலும் இது போன்று படமெடுத்து வைத்துவிட்டு ரசிகர்களை பாருங்கள் என்றால் அவர்கள் எப்படி பார்ப்பார்கள்..? பட்ஜெட்டுக்கேற்ற.. படத்துக்கேற்ற எதிர்வினைகள்தான் கிடைக்கும். இதில் தவறில்லையே..!

குடும்ப உறவுகள் நீடிக்க வேண்டும். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அனுசரணையுடன்,. நட்புடன் நடந்து கொண்டால் கிராமத்து உறவுகள் மேம்படும் என்பதை மையமாகக் கொண்டுதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். ஆனால் படத்தின் முடிவை மட்டும் கவிதை வடிவில் முடித்திருக்கிறார்.

பேப்பரில் எழுதியிருக்கும் கதை, திரைக்கதை, வசனத்தை உயிர்ப்புடன் கொடுக்க வேண்டிய இயக்கத்தில் போதாமை அதிகமாக இருப்பதால், படம் முழுமையாக ரசிக்கும்படியாக இல்லை.

RATING : 2 / 5

Our Score