FIVE VIEW DREAM SCREEN சார்பில் K. சரவணன் தயாரித்துள்ள புதிய படம் ‘பார்க்கலாம் பழகலாம்’.
இந்தப் படத்தின் மூலமாக தெலுங்குலகில் 20 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் தணீஷ் தமிழுக்கு அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனிஷா சேவியர் நடிக்கிறார். மேலும் சக்தி, மாறன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
கேமராமேன் – சிவசங்கரன், இசை – சாதிக் ஹாசன், படத் தொகுப்பு – சரண் சண்முகம், சண்டைப் பயிற்சி – புயல் சேகர், நடனம் – ரவிதேவ், சந்திரிகா, ஜோஸப் மனோஜ், பாடல்கள் – இளைய கம்பன், பா.நிகரன், கதை, திரைக்கதை, வசனம் – இயக்கம் – ஏ.எம். பாஸ்கர்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் பாஸ்கர், “இந்தப் படத்தின் ஹீரோவான தணீஷ் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக பல முன்னனி ஹீரோக்களுடன் நடித்த பிறகு, 20 படங்கள் ஹீரோவாக நடித்து தற்போது முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் உள்ளார். வந்தாரை வாழவைக்கும் நம் தமிழ் சினிமா, இவரையும் அறிமுகம் செய்கிறது.
கதாநாயகி அனிஷா சேவியர் பல விளம்பரப் படங்களில் மாடலாக நடித்தவர். பெங்களூர் அழகி. கதையின் வில்லனாக சக்தி நடிக்கிறார். காமெடிக்கு ஒரு பட்டாளமே இருக்கிறது. முக்கியமாக காமெடியன் மாறன் அடுத்த வடிவேலுவாக வருவார் என்று நினைக்கிறேன்.
இது ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. கதாநாயகன் ஒரு ஓவியன். இவர் ஓவியக் கூடம் வைத்திருக்கும் இடம் ஒரு பஸ் ஸ்டாப்பின் அருகில்.
அந்த வழியாக வரும் கல்லூரி பேருந்தில் கதாநாயகி தினமும் வரும்போது ஹீரோ வரையும் படங்களை தினமும் பார்ப்பது உண்டு. இதை அதே பேருந்தில் பயணிக்கும் ஹீரோவின் நண்பர்கள் கவனித்து ஹீரோவிடம் ஹீரோயின் உன்னை லவ் பண்ணுவதாக கதை விடுகின்றனர்.
இதை நம்பி ஹீரோ, ஹீரோயினை, பாலோ பண்ண, ஒரு கட்டத்தில் ஹீரோயின் மீது ஹீரோ காதல் கொள்ள, பிரச்சனை ஆரம்பம் ஆகிறது.
ஹீரோயின் தாய் மாமன் ஜெயிலில் இருந்து விடுதலை ஆக, அவருக்கும் ஹீரோயினுக்கும் திருமணம் ஏற்பாடு நடக்கிறது. ஹீரோ ஹீரோயினிடம் தன் காதலைச் சொல்ல… ஹீரோயினோ, ‘நான் உன்னைக் காதலிக்கவில்லை உன் பெயிண்டிங்கைதான் விரும்பினேன்’ என்று சொல்ல.. ஹீரோ அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு நண்பர்களும் உண்மையைச் சொல்ல கதையில் திருப்பம் ஏற்படுகிறது. இறுதியில் ஹீரோவின் காதல் வெற்றி பெற்றதா..? இல்லையா..? என்பதே இதன் திரைக்கதை.
இதன் படப்பிடிப்பு முழுவதும் நாகை மாவட்டம், சீர்காழி, திருக்காவூர், சிதம்பரம் பகுதிகளில் நடத்தப்பட்டது. விரைவில் படம் திரைக்கு வரவுள்ளது..” என்றார்.









