full screen background image

“பாலியல் குற்றங்களின் பின்னணியை பாப்பிலோன் வெளிப்படுத்தும்” – இயக்குநர் ஆறு ராஜா ஆவேசம்

“பாலியல் குற்றங்களின் பின்னணியை பாப்பிலோன் வெளிப்படுத்தும்” – இயக்குநர் ஆறு ராஜா ஆவேசம்

ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆறு ராஜா தயாரித்துள்ள படம் ‘பாப்பிலோன்’. இந்த படத்தை தயாரித்துள்ளதுடன், படத்தில் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா.

கதாநாயகியாக சுவேதா ஜோயல் நடிக்க, மறைந்த குணச்சித்திர நடிகர் கிருஷ்ணமூர்த்தி, பூ ராமு, வினோத், அபிநயா, சவுமியா, ரேகா சுரேஷ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இசை – ஷாம் மோகன், ஒளிப்பதிவு – அருள்செல்வன், படத் தொகுப்பு – சுதர்சன், பாடல்கள் – மோகனராஜன், பாடகர்கள் – குரு அய்யாத்துரை, ஜெகதீஷ், ரியா சுஷ்மா, நடன இயக்கம் – பாபி ஆண்டனி, அர்ச்சனா, சண்டை இயக்கம் – பில்லா ஜெகன், மக்கள் தொடர்பு – A.ஜான்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நக்கீரன் கோபால், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், மதியழகன், டாக்டர் தாயப்பன், தயாரிப்பாளர்கள் சங்க (கில்டு) செயலாளர் ஜாக்குவார் தங்கம், நடிகைகள் மதுமிதா, கோமல் சர்மா, ஸ்ருதி ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் ஆறு ராஜா பேசும்போது, “இளம்பெண்கள் கயவர்கள் சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார் என அவ்வப்போது செய்திகள் வெளியாவதுண்டு.. குறிப்பாக தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம்.. இது போன்ற நிகழ்வுகள் எதனால் அதிக இடங்களில் நடக்கிறது.  இதற்கு என்ன காரணம், இதற்கு என்னதான் முடிவு என, பல கேள்விகளை உள்ளடக்கி நிஜ சம்பவங்களை கருவாக வைத்து, அதேசமயம் அதில் சில மாற்றங்களோடு இந்த படத்தை உருவாக்கியுள்ளேன்…” என கூறினார்.

பெரிய தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே ஓடிடி ஆதரவு கிடைக்கிறது”

எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் மதியழகன் பேசும்போது, “இப்போதெல்லாம் பெரும்பாலும்  ஒரு படத்தில் நடித்த நடிகர் நடிகைகளே அவர்களது பட விழாவிற்கு வருவது இல்லை. அவர்கள் எல்லாம், வேறு ஏதோ உலகத்தில் இருக்கிறார்கள்.

இன்றைய சூழலில் தமிழ் திரையுலகில் ஹீரோக்கள் பற்றாக்குறையா அல்லது அவர்களது டாமினேஷனா என்று சொல்ல முடியாத நிலையில், ஒரு ஹீரோவை சந்தித்து கதை சொல்வதற்குள் பாதி உயிர் போய்விடுகிறது. அந்த படத்தை எடுத்து முடிப்பதற்குள் இன்னும் பாதி உயிர் போய்விடுகிறது. அந்த படத்தை ரிலீஸ் செய்வதற்குள் மொத்த உயிரும் போய்விடுகிறது. அந்த அளவிற்கு இன்று படத் தயாரிப்பில் பிரச்சினைகள் இருக்கின்றன. 

தற்போதைய சூழலில் ஒரு சில பெரிய தயாரிப்பாளர்களின் படங்களை மட்டுமே அமேசான், நெட்பிளிக்ஸ் போன்றவை தேடி வந்து வாங்குகின்றன சிறிய படங்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை.

இந்த ‘பாப்பிலோன்’ படம் சிறிய படம் அல்ல. எப்படி அருவி’ என்கிற படம் சிறிய அளவில் உருவாகி பெரிய அளவில் கவனத்தை ஈர்த்ததோ, அதேபோல இந்தப் படமும் வெற்றி பெறும்” என்று கூறினார்.

“தமிழ் சினிமா ஹீரோக்களின் பிடியில் இருந்து மீள்வது எப்போது.?”

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “ஒரு புதிய இயக்குநர், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தனது முதல் படத்தை உருவாக்கியுள்ளது குறித்து பெருமைப்படுகிறேன்.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய இடங்களில், திரையுலகம் தயாரிப்பாளர்களின் கையில் இருக்கிறது. ஆனால் இங்கே தமிழ் திரையுலகமோ, ஹீரோக்களின் பிடியில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது.

இங்கு இருக்கும் தயாரிப்பாளர்கள், பெரும்பாலும் வட்டிக்கு வாங்கித்தான், படம் எடுத்து வருகிறார்கள். அதனால் இப்போது உள்ள ஹீரோக்கள், 20 சதவீத சம்பளத்தை மட்டும் பெற்றுக் கொண்டு, மொத்த படமும் வியாபாரம் ஆன பின்பு, அவர்களுக்கான மீதி சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாமே.. அவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா?” என்று காட்டமாகப் பேசினார்.

“பொள்ளாச்சி சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும்..”

‘நக்கீரன்’ பத்திரிக்கையின் ஆசிரியரான கோபால் பேசும்போது, “பெண்களை ஏமாற்றி, அவர்களை மிரட்டி, பாலியல் வன்முறை செய்த கும்பல் குறித்து, பொள்ளாச்சியிலிருந்து முதலில் இரண்டு வீடியோக்கள் எனக்கு வந்தது. அதை பார்த்ததும் என்கிற ஈரக்குலையே நடுங்கிவிட்டது.

அதன் பின்னணி குறித்து விசாரிக்கும்போதுதான். அந்த அயோக்கியர்களுக்கு பக்கபலமாக. சில அரசியல் புள்ளிகள் இருப்பதும் தெரிய வந்தது. அதன் பிறகு அந்த வழக்கை திசை திருப்ப. காவல் துறையில் இருந்து என்னென்னவோ முயற்சிகள் செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் சென்றது.

அதன் பின்னர் என்ன ஆனதோ தெரியவில்லை, இரண்டு வருடங்களாக கிடப்பில் போட்டுவிட்டார்கள். இப்போது சி.பி.ஐ.க்கு இந்த வழக்கு  மாற்றப்பட்டுள்ளது. இனியாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்விதமாக, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..!

இது போன்ற படங்களின் மூலம், பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற, விழிப்புணர்வு கருத்தை, தனது முதல் படத்திலேயே கூறியுள்ள இயக்குநர் ஆறு ராஜா அவர்களுக்கு, எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.

Our Score