2021-ம் வருடத்திற்கான தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இந்த விருதுகளில் தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட ‘ஜெய் பீம்’ படத்திற்கு எந்தவொரு விருதும் கிடைக்கவில்லை. ‘ஜெய்பீம்’ படத்துக்கு விருது கிடைக்காததற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
‘ஜெய் பீம்’ படத்துக்கு ஏன் தேசிய விருது அறிவிக்கப்படவில்லை? என்று ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.சி.ஸ்ரீராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “தேசிய விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த தசாப்தத்தின் மிக மோசமான தேர்வு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம்” என பதிவிட்டுள்ளவர், மற்றொரு பதிவில், “தேசிய விருதுகளுக்கான மகிழ்ச்சியில் திரையுலகில் உள்ள நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். ‘ஜெய் பீம்’ படத்துக்கு விருது கொடுக்காததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா? அல்லது ‘இந்தியா’வின் குரல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?..” என கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் அசோக் செல்வன், “விருது அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். ‘கடைசி விவசாயி’க்கு மகிழ்ச்சி. ஆனால், ‘ஜெய்பீம்’ படத்துக்கு ஏன் எதுவுமில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் நானி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் “ஜெய்பீம்” என எழுதி அதன் அருகே உடைந்த இதயத்தின் எமோஜியை பதிவிட்டுள்ளார். |