“இதுக்கு வேற ஏதாவது தொழில் பண்ணப் போகலாம்…” – ‘90 ML’ பட இயக்குநருக்கு தயாரிப்பாளர் கே.ராஜன் கடும் கண்டனம்..!

“இதுக்கு வேற ஏதாவது தொழில் பண்ணப் போகலாம்…” – ‘90 ML’ பட இயக்குநருக்கு தயாரிப்பாளர் கே.ராஜன் கடும் கண்டனம்..!

ஸ்ரீபெருமாள் சாமி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் C.பெருமாள் தயாரித்துள்ள திரைப்படம் 'ஒற்றாடல்.'

இந்தப் படத்தில் விகாஷ், முத்துராமன் என்று இரண்டு நாயகர்கள் நடித்துள்ளனர். டெல்லி ஷா என்னும் புதுமுகம் நாயகியாக நடித்துள்ளார்.  நடிகர் 'நிழல்கள்' ரவி முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – ஆர்.கே.பழனி, இசை – விஜய் பாபு, சண்டை இயக்கம் – ராக்கி ராஜேஷ், எழுத்து, இயக்கம் – கே.எஸ்.மணிகண்டன்.

இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர்கள் பேரரசு, வ.கௌதமன், ராசி.அழகப்பன், சுப்பிரமணியம் சிவா, தயாரிப்பாளர் சங்கம்(கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே.ராஜன், படத்தின் இயக்குநர் கே.எஸ்.மணிகண்டன், தயாரிப்பாளர் சி.பெருமாள், கவிஞர் சொற்கோ, படத்தின் நாயகர்கள் விகாஷ், முத்துராமன், நாயகி டெல்லி ஷா, நடன இயக்குநர் கொம்பு முருகன், இசையமைப்பாளர் விஜய் பாபு, சண்டை இயக்குநர் ராக்கி ராஜேஷ், ஒளிப்பதிவாளர் ஆர்.கே.பழனி, பி.எஸ். எண்டர்டெய்ன்மென்ட் உதயகுமார், எஸ்.பி.கே எண்டர்பிரைசஸ் எஸ்.பி.குமார், ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஷ் வீரபாண்டின், நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன்,  மீசை ராஜேந்திரன், பி.ஆர்.ஒ. யூனியன் முன்னாள் தலைவர் டைமண்ட்பாபு, பி.ஆர்.ஓ. சங்கத் தலைவர் விஜய முரளி, செயலாளர் பெரு.துளசி பழனிவேல், பி.ஆர்.ஒ ரியாஸ் அஹமது  ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவின் துவக்கத்தில் படத்தின் டிரெயிலர் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் திரையிடப்பட்டன. இரண்டு பாடல்களுமே கேட்பதற்கு இனிமையாக இருந்தது. இசையமைப்பாளருக்கு நமது பாராட்டுக்கள்.

சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் ‘எல்.கே.ஜி.’ படத்தின் இயக்குநரான கே.ஆர்.பிரபு, தயாரிப்பாளர் கே.ராஜனின் மகன் என்பது இந்த விழாவில்தான் தெரிய வந்தது.

k.rajan

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இந்தப் படத்தின் டிரெயிலர் மற்றும் பாடல் காட்சிகளைப் பார்த்தபோது சிறப்பான மேக்கிங்கில் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கான மொத்தச் செலவில் முக்கால்வாசி அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கான சம்பளத்திற்கே போய்விடுகிறது. பிறகு எப்படி படத்தில் லாபம் கிடைக்கும்..

தெலுங்கில் இது போன்று இல்லை. அங்கே 20 கோடியில் படம் எடுத்தால் 5 கோடிதான் நடிகர், நடிகையர் சம்பளமாக பேசுகிறார்கள். ஹிந்தியிலும் இதேதான். அங்கே 100 கோடியில் படம் எடுத்தால் 25 கோடியை சம்பளத்திற்கும் மற்றவைகளை படப்பிடிப்பிற்காகவும் செலவிடுகிறார்கள்.

ஆனால் தமிழ்த் திரைப்படங்களில் மட்டும்தான் படத்தின் மொத்த பட்ஜெட்டில் 70 சதவிகிதம் படத்தின் ஹீரோ, ஹீரோயின் சம்பளத்திற்கே சரியாகிவிடுகிறது. அப்புறம் மிச்சம் இருப்பதில்தான் ஷூட்டிங் நடத்த வேண்டியிருக்கிறது. இந்தப் போக்கை மாற்ற வேண்டும்.

சமீப காலமாக நல்ல படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நல்லபடியாக ஓடுகின்றன. இப்போ லேட்டஸ்ட்டா ‘எல்.கே.ஜி.’ படம்கூட இப்போவரைக்கும் நல்லா ஓடிக்கிட்டிருக்கு. அந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் கே.ஆர்.பிரபு என்னுடைய மகன்தான்.

கடந்த 10 வருஷமா வீட்டுக்கே வராமல்.. என்னுடன் பேசாமல் இருக்கிறான். திரையுலகத்தில் ஜெயித்த பின்னாடிதான் வீட்டுக்கு வருவேன்னு வைராக்கியமா இருக்கான்.

இப்போ ஒரு படம் புதுசா வந்திருக்கு. ‘90 எம்.எல்’.லாம். அதென்ன ‘90’ என்று தெரியவில்லை. படம் அத்தனை கர்மமா இருக்கு. தமிழ்ச் சமூகத்தை.. நம்முடைய பழக்க வழக்கத்தை, பண்பாட்டை, கலாச்சாரத்தை அழிக்கிற மாதிரி வந்திருக்கிறது. இப்படி படம் எடுத்து சம்பாதிக்கிறதுக்கு பதிலா வேற தொழில் பண்ணிப் பொழைக்கலாம்..” என்றார்.   

இறுதியில் 'ஒற்றாடல்' படத்தின் பாடல்களை இயக்குநர் பேரரசு வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெற்றுக் கொண்டனர்.