காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், முன்னணி நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குநர் கே.சி.சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குநர் ஸ்ரேயா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் சரவணன் பழனியப்பன் சார்பில் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த 44 வீரர்களின் குடும்பத்தினருக்கும் ‘ஜுலை காற்றில்’ படக் குழுவின் சார்பில் தலா ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார்.
புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த தூத்துக்குடி சுப்ரமணியன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியை நடிகர் கார்த்தி வழங்கினார். இந்த நிதியினை உயிர் நீத்த சுப்ரமணியன் அவர்களின் சகோதரி சித்ரா அவர்கள் கார்த்தியிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள்.
படத்தின் இணை தயாரிப்பாளரான கருப்பையா அனைவரையும் வரவேற்று பேசும்போது, “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் எனது உறவினர். இந்த படத்தின் இயக்குநரும் எனது உறவினரே. அதனால் இது எனக்கு என்னுடைய குடும்ப விழாவாகவே தெரிகிறது.
ஒரு பெண்ணிற்கு பிரசவத்திற்கு முன்னர் நடைபெறும் வளைகாப்பு விழா போன்றதுதான் இந்த இசை வெளியீட்டு விழா. பிறக்கப் போகும் குழந்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பிறக்கவேண்டும் என்று வாழ்த்தி ஆசி சொல்வது போல், இந்த படமும் வெளியாகி நல்லதொரு வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக ராசியான கைகளுக்குச் சொந்தகாரரான கார்த்தியை இந்த விழாவுக்கு அழைத்திருக்கிறோம்.
நடிகர் கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தைப் பார்த்த தயாரிப்பாளர், இந்த விழாவில் ஒரு அறிவிப்பை வெளியிட சொல்லியிருக்கிறார். பத்து விவசாயிகளுக்கு தலா 25,000 ரூபாயை நிதி உதவியாக அளிக்க சொல்லியிருக்கிறார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களும் நானும் நாற்பதாண்டுகளுக்கு மேல் நண்பர்கள். அவர் மிகச் சிறந்த உழைப்பாளி என்பதை நாங்கள் ஒரு முறை மலைவாசஸ்தலம் ஒன்றிற்கு பயணம் மேற்கொண்டபோது அனுபவப்பூர்வமாக தெரிந்து கொண்டோம்.
மிகக் குறுகிய கால இடைவெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவிற்கு வருகை தந்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் கார்த்தி இருவரையும் நாங்கள் பாக்கியமாகவே கருதுகிறேன்..” என்றார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், “அமெரிக்காவில் திரைப்பட நடிகர்களுக்கான சங்கத்தின் கட்டிடங்கள் பல அடுக்கு மாடிகளாக இருப்பதை நான் கண்டு வியந்திருக்கிறேன். அதேபோல் தற்போது சென்னையில் நடிகர் சங்க கட்டடம் பல அடுக்குகளாக இருப்பதைக் கண்டு சந்தோஷமாக இருக்கிறேன். இதன் பின்னணியில் உழைத்த கார்த்தியைப் பற்றி எங்களுக்கு தெரியும். அவரது ராசியான கரங்களால் இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற்றிருக்கிறது. அதனால் இந்த படமும் வெற்றி பெறும்.
இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர் கலந்து கொள்ளவில்லை. படத்தின் நாயகன், நாயகிகளும் கலந்து கொள்ளவில்லை. இதற்கான காரணத்தை இயக்குநர்தான் சொல்ல வேண்டும். ஆனால் அனைவரும் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்வார்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகை கஸ்தூரியின் துணிச்சல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது பேச்சுக்கள் அடங்கிய யூடியூப் சேனலை பார்த்து வியந்திருக்கிறேன். படையப்பாவில் ‘நீலாம்பரி’ கேரக்டர் ரசிக்கப்பட்டதற்கு அந்த பெண்ணிடம் இருந்த துணிச்சலான குணம்தான் காரணம். தமிழகத்தில் அரசியல் கட்சிகள் குறைவாக இருப்பதால் நடிகை கஸ்தூரி விரைவில் ஒரு புதியக் கட்சியை துவக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நான் திரைப்படத் துறைக்கு வருவதற்கு முக்கியமான காரணமாக மற்றொரு நண்பர் நாராயணன் அவர்கள் இங்கு வந்து இருக்கிறார்கள். நண்பர் நாராயணன் அவர்களின் தந்தையார் மிகப் பெரிய தயாரிப்பாளர். ‘கை நிறைய காசு’, ‘கண்ணா நலமா’, ‘தாமரை நெஞ்சம்’, ‘அனுபவி ராஜா அனுபவி’ போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர். எங்களுக்கும் சினிமா ஆசையை விதைத்தவர் அவர்.
இயக்குநர் கே சி சுந்தரத்தை எனக்கு சிறிய வயதிலேயே தெரியும். தற்பொழுது ‘ஜூலை காற்றில்’ என்ற இந்தப் படத்தின் மூலம் காதலில் விளையாடியிருக்கிறார். இந்த படம் அவரது எண்ணத்தை போல வெற்றியடைய வாழ்த்துகிறேன்.” என்றார்.
படத்தின் இயக்குநர் கே சி சுந்தரம் பேசுகையில். “நான் இன்சினியரிங் முடித்துவிட்டு, இயக்குநர் ஜீவாவிடம் உதவியாளராக சேர்ந்தேன். தயாரிப்பாளர் சரவணன் பழனியப்பன், அவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றி சொல்கிறேன்.
நான் காதல் படத்திலிருந்து இசை அமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதரின் ரசிகன் ஆகிவிட்டேன். இந்த கதையை முதலில் அவரிடம் சொல்லி பாடலைக் கேட்டபோது, 5 அற்புதமான மெட்டுகளை நமக்காக அமைத்துக் கொடுத்தார். அவருடைய இசையில் ‘காதல்’, ‘கல்லூரி’ படங்களின் ஆல்பம் ஹிட் அடித்திருக்கிறது. அவர் இசையமைத்தால் ஒன்றிரண்டு பாடல்கள் மட்டும் இல்லாமல் மொத்த ஆல்பமாமுமே ஹிட்டாகும். அதேபோல் இந்தப் படத்தின் ஆல்பமும் ஹிட்டாகும் என்று நம்புகிறேன்.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் டிமல் சேவியர் மும்பையில் வேறு படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் இங்கு வர முடியவில்லை. படத்தின் நாயகிகளான சம்யுக்தா மேனன், அஞ்சு குரியன் ஆகிய இருவரும் வேறு, வேறு படப்பிடிப்புகளில் இருப்பதால் அவர்களும் கலந்து கொள்ள முடியவில்லை. படத்தின் நாயகன் சந்தோஷ் நாக்கிற்கு உடல் நலம் சரியில்லை. அதன் காரணமாக அவராலும் கலந்து கொள்ள இயலவில்லை. அத்துடன் இந்த விழா மிகக் குறுகிய கால ஏற்பாடாக அமைந்ததும் ஒரு காரணமாக நிகழ்ந்திருக்கலாம்.
இந்தப் படம் காதல் படம் அல்ல. ஆனால் காதலைப் பற்றிய படம். இந்தப் படத்தின் திரைக்கதை இந்தியாவில் முதல் முறையாக திரையில் சொல்லப்படும் திரைக்கதை என்று நான் உறுதியாகச் சொல்வேன்.
முதல் அத்தியாயம் நாயகனின் பார்வையில் இருக்கும். இரண்டாவது அத்தியாயம் முதல் நாயகியின் பார்வையில் அமைந்திருக்கும். மூன்றாவது அத்தியாயம் இரண்டாவது நாயகியின் கோணத்தில் அமைந்திருக்கும். ஒரு திரில்லர் பாணியில் ஒரே விஷயத்தை வெவ்வேறு கதாபாத்திரங்களின் ஊடாக, காதலில் சொல்லியிருப்பது ‘ஜூலை காற்றில்’ படத்தில் மட்டும்தான் என்பதே இதன் தனி சிறப்பு.
கார்த்தி சார், சூர்யா சார் இவர்களெல்லாம் என்னுடைய பால்யகால தோழர்கள். நான் கேட்டுக் கொண்டதற்காக இன்றைக்கு படப்பிடிப்பு இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, இங்கு வருகை தந்து தந்திருக்கிறார். அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடலை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதியிருந்தார். சில திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்று காத்திருந்தபோது, அவரது மறைவு செய்தி வெளியானது. அதன் பிறகு பாடலாசிரியர் சௌந்தரின் உதவியுடன் சில திருத்தங்களை மட்டும் மேற்கொண்டு பாடலை வெளியிட்டிருக்கிறோம். அதனால் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கடைசியாக எழுதியது இந்த படத்திற்காகத்தான் என்பதையும் வருத்தமுடன் பதிவு செய்கிறேன்…” என்றார்.
இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் பேசுகையில். “எனது தாயாரின் அப்பா.. அதாவது அம்மா வழி தாத்தா… தமிழ்ச் சினிமாவில் ஒரு மிகப் பெரும் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளராக இருந்தவர். இந்தத் தகவலை நான் இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. தற்போது பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.
அவரது பெயர் ஆர் ஆர் சந்திரன். சிவாஜி கணேசன் நடித்த ‘பராசக்தி’ படத்திற்கு இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். ஒரு கட்டத்தில் படத்தின் பணிகள் நின்றுவிட்டன. அதன் பிறகு வேறு ஒளிப்பதிவாளருடன் அந்த படத்தின் பணிகள் தொடங்கியது. அந்த சமயத்தில் எனது தாத்தா ‘ரத்தக் கண்ணீர்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘ஹரிச்சந்திரா’, ‘தாயின் மடியில்’, ‘குபேரத் தீவு’, ‘தாய்க்கு பின் தாரம்’, ‘கண்கள்’, ‘இதய கீதம்’ போன்ற படங்களுக்கு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார்.
அதன் பிறகு, ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’, ‘நானே ராஜா’, ‘மகாகவி காளிதாஸ்’ போன்ற படங்களை தயாரித்து, இயக்கியிருக்கிறார்.
முதலில் எனக்கும் எனது தாத்தாவை போல இயக்குநராக வேண்டும் என்ற ஆசைதான் இருந்தது. ஆனால் இசைஞானி இளையராஜாவின் இசையை கேட்டதற்கு பிறகுதான் இசையமைப்பாளராக வேண்டும் என்ற எண்ணம் உருவானது.
எனக்கு எட்டு வயது இருக்கும்போது என்னுடைய தாயாரிடம் நான் இசையமைப்பாளராக வேண்டுமென்று சொல்லியிருக்கிறேன்.
நான் எத்தனை பாடல்களுக்கு இசை அமைத்தாலும், அவரைப் போல் இல்லையே என்ற எண்ணம் என்னுள் இப்போதும் இருக்கிறது. ஆனால் இயக்குநர்களுக்குப் பிடித்து போவதால் இசையமைப்பாளராக தொடர்கிறேன்.
இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. இயக்குநர் பெருந்தன்மை மிக்கவர். அவரிடம் யாரும் சண்டையெல்லாம் போட முடியாது. இந்த படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்…”என்றார்.
நடிகர் கார்த்தி பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநரான சுந்தரம் என்னுடைய பால்ய கால தோழர். என்னுடைய தந்தையார் சிறிய வயதில் இருக்கும்பொழுது எங்களை அதிகமாக வெளியே அழைத்துச் சென்றதில்லை. அழைத்துச் சென்ற இடம் கொடைக்கானலில் இருக்கும் சுந்தரம் அவர்களின் வீடுதான். அவர்களின் வீட்டுக்கு செல்லும்பொழுது சந்தோசமாக இருக்கும். ஏனென்றால் அவர்களின் அரவணைப்பு அப்படியிருக்கும்.
இயக்குநர் சுந்தரம், இன்ஜினியரிங் முடித்துவிட்டுத்தான் சினிமாவுக்குள் வந்திருக்கிறார். தற்போதெல்லாம் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சினிமாவுக்கு வருவது அதிகரித்து விட்டது. ஏனெனில் சினிமா அனைத்து தரப்பினரையும் உள்ளிழுத்துவிடுகிறது.
சினிமா ஒரு போராட்ட குணத்தை அனைவரும் மனதில் விதைத்து விடும். அது பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்ல. அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதற்கு இது ஒரு வழி என்பதற்காக அனைவரும் சினிமாவிற்கு வருகிறார்கள். சந்தோஷப்படுவதை பார்ப்பதற்காகவே வருகிறார்கள்.
என்னை திரையுலகில் அடையாளப்படுத்திய பல பாடல்கள் எழுதியவர் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார். அவரும் இந்த படத்திற்கு பாடல் எழுதி இருக்கிறார் என்பதால் அவருடைய ஆசீர்வாதமும் இந்த படத்தின் வெற்றிக்கு இருக்கும்.
பொதுவாக ஒரு இசை வெளியீட்டு விழாவில் அந்தப் படத்தைப் பற்றிய விஷயங்கள் பேசப்படுவதைவிடவும், வேறு விஷயங்கள்தான் ஹைலைட்டாக பேசப்படும்.
தற்பொழுது நேர்மையான விஷயங்கள் பேசப்படுவதுவிட எதிர்மறையான விஷயங்கள் பேசப்படுவதுதான் ஹைலைட் ஆகிவிட்டது. ‘நாயகன் நாயகி வராத ஜுலைக் காற்றில் என்ற படத்தின் இசையை நடிகர் கார்த்தி வெளியிட்டார்’ என்றுதான் செய்தி வெளியாகும்.
இந்த படத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய முயற்சிகளுக்காக படம் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும்…” என்று வாழ்த்தினார்.