“மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்…” என்ற பழமையான பாடலின் வரிகள், தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் சூழ்நிலையை மிக அழகாக அனைவருக்கும் உணர்த்துகின்றது.
சமீபத்தில் ஜல்லிக்கட்டிற்காக மாணவர்கள் அனைவரும் ஒன்று இணைந்து போராடி, வெற்றி கண்டிருப்பது, அவர்களின் ஒற்றுமையையும், பலத்தையும் தெளிவுபடுத்துகிறது.
அத்தகைய வலிமையான மாணவ சக்தியை மையமாக கொண்டு உருவாகியிருக்கிறது அதர்வா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘ஒத்தைக்கு ஒத்த’ திரைப்படம்.
‘அட்டக்கத்தி மற்றும் ‘மெட்ராஸ்’ படங்களில் பா.ரஞ்சித்தின் உதவியாளராக பணிபுரிந்த பர்னீஷ் இயக்கும் இந்த ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தை ‘விஷன் ஐ மீடியா’ சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார்.
நடிகர் தியாகராஜன் மற்றும் ‘அஞ்சாதே’ நரேன் ஆகியோர் இந்த முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
“ஒட்டு மொத்த உலகும் இப்போது மாணவர்கள் என்றால் யார்? அவர்களின் பலம் என்ன என்பதனை உணர்ந்து இருப்பார்கள். இந்த தருணத்தில், அவர்களின் கல்லூரி வாழ்க்கையை மையமாக கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்குவதை நாங்கள் பெருமையாக கருதுகின்றோம்.
கட்டுமஸ்தான உடலமைப்பில் இருந்து, மாணவர் தோற்றத்திற்கு மாறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு முழு அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் தேவை. அந்த வகையில் இந்த மாணவர் கதாபாத்திரத்திற்காக தன்னுடைய உடலமைப்பை கன கச்சிதமாக மாற்றி இருக்கிறார் அதர்வா.
தற்போதைய காலத்திற்கும், இனி வரும் காலத்திற்கும் ஏற்ற ஒரு திரைப்படமாக எங்களின் ‘ஒத்தைக்கு ஒத்த’ இருக்கும். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஏறக்குறைய 20 நாட்கள் நாங்கள் தொடர் படப்பிடிப்பை நடத்தினோம். இன்னும் இரண்டு நாட்களில் எங்கள் படத்தின் கதாநாயகியை நாங்கள் முடிவு செய்ய இருக்கிறோம். ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் எங்களோடு இணைந்து பணியாற்றுவார்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் பர்னீஷ்.