நடிகர் பார்த்திபனின் மாஸ்டர் பீஸாக கருதப்படும் ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான மாநில அரசின் விருதினை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
2019-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் நடிகர் பார்த்திபன் ‘ஒன் மேன் ஆர்மி’யாக நடித்திருந்தார். ஒரேயொரு நடிகர் மட்டுமே நடித்த பல திரைப்படங்கள் இதற்கு முன் வந்திருந்தாலும் அனைத்திலும் வித்தியாசமாக ஒரேயொரு அறைக்குள் நடக்கும் பல்வேறு சம்பவங்களை கதாபாத்திரத்தின் மூலமாகச் சொல்வதுபோல திரைக்கதை அமைத்திருந்தார் பார்த்திபன்.
சந்தோஷ் நாராயணனின் இசையும், ரசூல் பூக்குட்டியின் ஒலிக் கலவையும், அமரனின் கலை இயக்கத்திலும், சுதர்சனின் படத் தொகுப்பிலும் படம் ஒரு வித்தியாசமான உணர்வை பார்வையாளர்களுக்குத் தந்தது.
இதுவரையிலும் இத்திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறது. 2019-ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற கோவா சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது புதுவை மாநில அரசின் சிறந்த திரைப்படத்திற்கான ‘ஸ்ரீசங்கரதாஸ் ஸ்வாமிகள் விருது’ம் இந்த ‘ஒத்த செருப்பு’ படத்திற்குக் கிடைத்துள்ளது.
இந்த பரிசளிப்பு விழா வரும் டிசம்பர் 15-ம் தேதியன்று புதுவையில் நடைபெறவுள்ளது. பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும், வெள்ளிப் பதக்கமும் படத்தின் இயக்குநரான பார்த்திபனுக்கு வழங்கப்படவுள்ளது.









