சின்ன பட்ஜெட் படமாக இருந்தால் 10 அல்லது 20 தியேட்டர்களில் படத்தைத் திரையிட்டுவிட்டு வந்ததை வாங்கிக் கொண்டு நம் படம் தியேட்டரில் வெளியாகிவிட்டது என்கிற திருப்தியோடு வீட்டுக்குப் போகலாம்.
ஆனால் ‘மாஸ்டர்’ போன்ற 200 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தை என்ன செய்வது..? அப்படியே கொண்டு வந்து தியேட்டரில் போட்டுவிட முடியாதே..?!
“இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் தியேட்டர்களில் 50 சதவிகித சீட்டுக்களுக்கு மட்டுமே டிக்கெட்டுகள் கொடுக்கப்பட வேண்டும்…” என்கிற அரசின் உத்தரவு இருப்பதால் ‘மாஸ்டர்’ வெளியாவது தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கிறது.
இப்போது கூடுதலாக பல பிரச்சினைகள் வரிசையாக ‘மாஸ்டரு’க்கு வந்து கொண்டேயிருக்கிறது.
‘மாஸ்டர்’ படத்தின் வெளிநாட்டு உரிமத்தை 30 கோடிக்கு வாங்கிய விநியோகஸ்தர், “இப்போது அந்தளவுக்கு வசூல் வராது என்பதால் தன்னால் 15 கோடி அளவுக்குத்தான் தர முடியும்…” என்கிறாராம்.
காரணம், உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் சினிமா தியேட்டர்கள் இன்னமும் திறக்கப்படவில்லை என்பதுதான். இதனால் ஏற்படும் பண இழப்பினை தயாரிப்பாளர்கள்தான் ஏற்க வேண்டும் என்கிறாராம் அந்த விநியோகஸ்தர்.
இந்தப் பிரச்சினை ஒரு புறம் இருக்க. இன்னொரு பக்கம் தமிழகத்திலேயே தற்போது தியேட்டர்களில் கூட்டமே இல்லை. தினமும் மாலை, இரவு காட்சிகளை பல தியேட்டர்கள் கேன்சல் செய்து வருகின்றன. ஒற்றைப் படை இலக்கத்தில்தான் கூட்டம் வருகிறதாம்.
“இந்தக் கூட்டத்தை நம்பி நாம் எப்படி படத்தை பொங்கலுக்குக் கொண்டு வர முடியும்…?” என்று யோசிக்கிறார்கள் ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர்கள்.
ஆக மொத்தத்தில், தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி, மற்றும் தியேட்டருக்கு ரசிகர்களின் வருகையும் அதிகரித்த பின்புதான் விஜய்யின் ‘மாஸ்டர்’ தியேட்டருக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.