‘குப்பி’, ‘வனயுத்தம்’ போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியதன் மூலம் பரபரப்பான இயக்குநர் என பாராட்டப்பட்ட A.M.R. ரமேஷ் தற்போது இயக்கும் புதிய படம் ‘ஒரு மெல்லிய கோடு’.
இந்தப் படத்தில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் ஷாம் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷாபட் நடிக்கிறார். மற்றும் மனிஷா கொய்ராலா, ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
எடிட்டிங் – K.V.கிருஷ்ணாரெட்டி
ஒளிப்பதிவு – சேதுஸ்ரீராம்
நடனம் – விட்டல்
கலை – ஆனந்தன்
நிர்வாக தயாரிப்பு – இந்துமதி, தனஜெய் குன்டப்பூர்
எழுத்து இயக்கம் – A.M.R. ரமேஷ்
தயாரிப்பு மேற்பார்வை – அண்ணாமலை
“படு திரில்லர், ஆக்ஷன் படமாக ‘ஒரு மெல்லிய கோடு’ இருக்கும். விறுவிறுப்பான திரைக்கதை படம் பார்க்கும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு செல்லும் அப்படியொரு காட்சிகள் இருக்கும். மேக்கிங் முதற்கொண்டு அனைத்து விஷயங்களிலும் இந்தப் படம் பாராட்டப்படும் படமாக இருக்கும்..” என்றார் A.M.R.ரமேஷ்.
இந்தப் படத்தின் துவக்கவிழா இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. விழாவில் இசைஞானி இளையராஜா பேசும்போது, “ஹாலிவுட் படங்களைவிட தமிழில்தான் அதிக படங்கள் தயாராகின்றன. நிறைய திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘சிவப்பு ரோஜாக்கள்’ படம்தான் நான் இசையமைத்த முதல் திரில்லர் படம்.. அந்த வகையில் இந்த ஒரு மெல்லிய கோடு படமும் இடம் பெறுகிறது. இதுவும் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்..” என்றார்.
விழாவில் ஹீரோ அர்ஜுன் பேசும்போது, “இந்தக் கதையை இயக்குநர் சொன்னவுடன் மிரண்டுவிட்டேன். அப்படியொரு திரைக்கதை இந்தப் படத்தில் இருக்கிறது. நான் நடித்த படங்களிலேயே இது மிக முக்கியமான படமாக இருக்கும்..” என்றார்.
படத்தின் தலைப்புதான் இடிக்குது. ‘என்னை அறிந்தால்’ படத்தின் டிரெயிலர் ரிலீஸுக்கு பின்புதான் டைட்டில் வைத்திருப்பார்களோ..?









