full screen background image

‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்திற்கெதிராக எந்த மனுவும் இல்லையாம்..!

‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்திற்கெதிராக எந்த மனுவும் இல்லையாம்..!

“விலங்கு ஆர்வலர்களுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை” என்கிறார் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் இயக்குநரான சுரேஷ் சங்கையா.

ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள திரைப்படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’. ஒரு ஆட்டுக் கிடாவின் வாழ்க்கையை கதையாக சொல்லும் இந்த திரைப்படத்தை சுரேஷ் சங்கையா இயக்க  விதார்த் மற்றும் புதுமுகம்  ரவீனா ரவி ஆகியோர்  முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுரேஷ் சங்கையா, இதற்கு முன்பு ‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குநரான மணிகண்டனிடம் இணை இயக்குனராக பணி புரிந்தது குறிப்பிடத்தக்கது. புதுமுகம் ரகுராம் இசை அமைக்கும்  இந்த திரைப்படத்திற்கு RV சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  

‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படத்தில் ஆட்டை துன்புறுத்துவதாகவும், அதை சினிமா என்ற பெயரில் சித்திரவதை செய்வதாகவும் வனவிலங்கு  ஆர்வலர்கள்  புகார் கொடுத்திருப்பதாக சொல்லி சில வதந்திகள் சமீப நாட்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் “இந்த வதந்திகள் எல்லாம் வெறும் பொய்தான்…” என்கிறார் படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா.

“ஒருவேளை படத்தின் பெயர் சிலருக்கு, படம் இப்படித்தான் இருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கி அவர்களை புகார் கொடுக்க தூண்டியிருக்கலாம். ஆனால் இதுநாள்வரை  எந்த புகாரும் வரவில்லை என்பதுதான் உண்மை.

இந்தப் படம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி  முற்றிலும் காமெடியை மையமாக கொண்டு நாங்கள் எடுத்திருக்கும் இந்த படத்தில் எந்த ஆடும், மிருகங்களும் துன்புறுத்தப்படவில்லை.

முதன்முதலில் நாங்கள் இந்த கிடாவை ஒரு கிராமவாசியிடம் இருந்துதான் நாங்கள் வாங்கினோம். அப்போது அவனின் பெயர் அரவிந்த் சுவாமி. அதன் பின் நாங்கள் அனைவரும் சேர்ந்து அதற்கு ‘ராசு’ என பெயரிட்டோம். தற்போது எங்கள் குடும்பத்தில் ஒருவனாக வீட்டிற்குள் வலம் வந்து கொண்டிருக்கிறான் ராசு..” என்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா.

“தற்போது படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரோடக்ஷன்னில் இருக்கும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’  திரைப்படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் உயர்த்தி இருக்கிறது. இது போன்ற ஒரு தனித்துவமான கதையம்சத்தை உருவாக்கிய இயக்குனர் சுரேஷ் சங்கையாவை நிச்சயம் பாராட்டியே  ஆக வேண்டும்” என்கிறார் ஈரோஸ் இன்டர்நேஷனலின் துணை தலைவர் சாகர். 

Our Score