full screen background image

“காசு, பணம் வேண்டாம்; கவிதை போதும்; பிழைத்துக் கொள்வேன்..” – இயக்குநர் லிங்குசாமி பேச்சு

“காசு, பணம் வேண்டாம்; கவிதை போதும்; பிழைத்துக் கொள்வேன்..” – இயக்குநர் லிங்குசாமி பேச்சு

தமிழ்த் திரைப்பட இயக்குநரான லிங்குசாமி  ஏற்கெனவே’ லிங்கூ’ என்கிற தனது முதல் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டிருந்தார்.

இப்போது  தனது இரண்டாவது  படைப்பாக ‘லிங்கூ-2’-வாக ‘செல்ஃபி எடுத்துக் கொள்கிறது மரம்’ என்கிற ஹைக்கூ  கவிதைகள்  நூலைக் கொண்டு வந்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பித்துள்ளது. இதன் வெளியீட்டு விழாவை நேற்று மாலை வித்தியாசமாக நடத்தினார்கள்.  

லிங்குசாமியின் நண்பரும் இயக்குநருமான கௌதம் வாசுதேவ் மேனனின் திருவான்மியூர் கடற்கரையோர அலுவலகத்தில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

IMG_8

‘லிங்கூ-2’  கவிதை நூலை கவிக்கோ அப்துல்ரகுமான் வெளியிட இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனனும், பார்த்திபனும் பெற்றுக் கொண்டார்கள்.

விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, “நான் எப்போதும் கவிதையுடன் இருப்பதாகவே உணர்கிறேன். எனக்குள் ஆதியில் தோன்றியது கவிதையாகவே இருந்திருக்கிறது. பிறகுதான் கதை எல்லாம் வந்தது என்பேன்.

director lingusamy

ஊரிலிருந்து சென்னைக்கு வந்தபோது  ரெண்டு, மூணு கவிதைகளும், கொஞ்சம் நம்பிக்கையுடன்தான் வந்தேன். அப்போதெல்லாம் ‘கையில் காசு, பணம் வேண்டாம்; கவிதை போதும்.. பிழைத்துக் கொள்ளளலாம்’ என்றிருப்பேன். ‘எதுவுமே இல்லைன்னாலும் கவிதை இருக்கிறது. பார்த்துக் கொள்ளலாம்’ என்றிருப்பேன். அப்போதே அப்படித்தான் இருந்தேன். இப்போது இவ்வளவு பேர் கிடைத்திருக்கிறீர்கள். எனக்கென்ன கவலை..?

கவிதை சொல்வது என்பது என்னைச் சுற்றித் தொற்று நோய் போல வந்து கொண்டிருக்கிறது. என் டிரைவர் முதல் ஆபீஸ் பாய்வரை இப்போதெல்லாம் கவிதை சொல்கிறார்கள்.

நான் எப்போதும் கவிதையை ரசிக்கும் மனதோடு இருப்பவன்..  எவ்வளவு சோதனைகள் வந்தாலும், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் கவிதைகளுக்கு முன்னால் அதெல்லாம் பெரிதாகவே தெரியாது. அந்த மனம் மட்டும் இருந்தால் போதும். எவ்வளவு சோதனைகள் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்.

இப்போதுகூட வருகிற மிஸ்டு காலில் 6 காலில் 3 கால் பணம் திருப்பித் தரக் கேட்கும் பைனான்சியராகக்கூட இருக்கலாம். எனக்குக் கடன் இருக்கிறது.. இல்லையென்று சொல்லவில்லை. ஆனாலும் கவலையில்லை. காரணம் நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன்.

நான் உதவி இயக்குநராக சிரமப்பட்ட காலத்தில்கூட நான் குடியிருந்த வீட்டைச் சுற்றியிருக்கும் அனைத்துக் கடைகளிலும் கடன் இருக்கும். நான்கு மாதங்கள் கழித்து ஊருக்குப் போய்விட்டு வந்து  எல்லாருக்கும் திருப்பிக் கொடுப்பேன்.

எங்கள் குடும்பம் ஊருவிட்டு  வேறு ஊர் வந்தபோதுகூட ஆயிரம் ரூபாய் கடனுக்காக மாட்டை விற்றுக் கொடுத்துவிட்டு வந்தவர் எங்கள் அப்பா. அந்த நேர்மை என் ரத்தத்திலேயே இருக்கிறது. எனக்கு பொறுப்பும் கடமையும் இருக்கிறது.

இந்த மனநிலையோடு அடுத்த படத்தை தொடங்குகிறேன். நீங்கள் எல்லாம் இருக்கிறபோது எனக்கு எதுவுமே பிரச்சினை இல்லை. எல்லா கஷ்டங்களும் கடந்து போய்விடும். இதுவும் கடந்து போகும். எல்லாம் கடந்து போகும்.

இதை  என் தனிப்பட்ட விழாவாக நினைக்கவில்லை. எல்லாரையும் சந்திக்கிற ஒரு வாய்ப்பாக நினைக்கிறேன். அதற்காகவே நானாக ஏற்படுத்திக் கொண்ட சந்தர்ப்பமே இது. இங்கு வந்த அனைவருக்கும் நன்றி. நாம் தொடர்ந்து சந்திப்போம்..” என்றார்.

Our Score