நடிகை விசித்ரா தமிழில் ‘தலைவாசல்’ படத்தில் ‘மடிப்பு அம்சா’ என்னும் கேரக்டரில் நடித்துப் புகழ் பெற்றவர்.
அதற்குப் பிறகு ‘எங்க முதலாளி’, ‘முத்து’, ‘சபாஷ் பாபு’, ‘ஜாதி மல்லி’, ‘ரசிகன்’, ‘வீரா’, ‘வண்டிச்சோலை சின்ராசு’, ‘அமைதிப்படை’, ’வில்லாதி வில்லன்’, ‘அசுரன்’, ‘தொட்டா சிணுங்கி’, ‘போக்கிரிராஜா’, ‘பெரிய குடும்பம்’,’ சீதனம்’, ‘எட்டுப்பட்டி ராசா’, ‘சாம்ராட்’, ‘கிங்’, ‘எல்லாமே என் பொண்டாட்டிதான்’ போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர்.
ஒரு காலக்கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமா துறையைவிட்டு விலகிச் சென்றுவிட்டார். தற்போது அவருக்கு கல்லூரி மற்றும் பள்ளிகளில் படித்து வரும் 3 மகன்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இப்போது மீண்டும் நடிப்பதற்காக கோடம்பாக்கம் திரும்பியிருக்கிறார் விசித்ரா. திரைப்படங்களில் நடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
தான் அறிமுகமான முதல் படத்தில் தன்னை ஏமாற்றி சில காட்சிகளில் நடிக்க வைத்து தனது ஒரு வருட படிப்பை வீணாக்கியதாக அந்தப் படத்தின் இயக்குநரை பொது இடத்தில் வைத்து சட்டையைப் பிடித்து அடித்ததாக தற்போது ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் நடிகை விசித்ரா.
அவர் இது குறித்துப் பேசும்போது, “நான் காலேஜ்ல செகண்ட் இயர் சைக்கலாஜி படிச்சுக்கிட்டிருந்தேன். இரண்டாமாண்டு பைனல் எக்ஸாமுக்கு இன்னும் 4 நாள்தான் பாக்கியிருந்தது.
அப்போதான் ஒருத்தர் வந்து “நான் மம்மூட்டியை வைத்தெல்லாம் படம் இயக்கியிருக்கிறேன். இப்போது ஒரு படம் இயக்கப் போகிறேன். அதில் நீங்கள் நடிச்சால் நல்லாயிருக்கும்…” என்றார். எனக்கு அப்போது படங்களில் நடிக்கும் ஆர்வமே இல்லை. அத்தோடு தேர்வு வேறு இருந்ததால் “முடியாது” என்றேன்.
“இல்லங்க.. இது ஒரு நல்ல கதை. உங்களை நல்லவிதமாத்தான் காட்டப் போறோம். இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இதன் மூலமா உங்க வாழ்க்கையே தலைகீழா மாறவும் வாய்ப்பிருக்கு. படிப்பைக்கூட அடுத்த வருஷம் பார்த்துக்கலாம். இந்த சான்ஸ் போனால் போனதுதான்…” என்றெல்லாம் சொல்லி என்னைக் குழப்பி நடிக்க ஒத்துக் கொள்ள வைத்துவிட்டார்.
நானும் எக்ஸாமை மறந்துவிட்டு அந்தப் படத்தில் நடிக்கப் போய்விட்டேன். படம் மொத்தமும் முடிஞ்சிருச்சுன்னு சொன்னாங்க. எனக்கு அந்தப் படத்தோட முழுக் கதைகூட தெரியாது. என் போர்ஷன் மட்டும்தான் தெரியும்.
அதுக்கடுத்து ஒரு மாதம் கழித்து அந்த இயக்குநர் திரும்பி வந்தார். “மேடம்.. இன்னும் சில காட்சிகள் எடுக்க வேண்டியிருக்கு. இப்போ கதைல கொஞ்சம் மாற்றம் செஞ்சிருக்கோம். அதுனால நீங்க வந்து நடிச்சுக் கொடுக்கணும்”ன்னு கேட்டார்.
“என்னென்ன சீன்ஸ்?”ன்னு கேட்டேன். “குளிக்கிற சீன்.. உங்களை ரேப் பண்ற சீனு”ன்னு சொன்னார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு. “அதையெல்லாம் நீங்க முன்னாடியே சொல்லலியே…?” என்றேன் கோபத்தோடு. “இல்லை மேடம்.. இப்ப கதையை மாத்துனதால உங்களை ரேப் பண்ற சீன்லதான் கதையே டிவிஸ்ட் ஆகுது. கோச்சுக்காதீங்க மேடம்.. இப்போ நீங்க மறுத்தீங்கன்னா நான் படத்தையே டிராப் பண்ண வேண்டி வரும். லட்சக்கணக்குல நஷ்டம் வரும்” என்று அழுது புலம்புனாரு.
வேற வழியே இல்லாமல்.. திரும்பவும் அந்தப் படத்துக்காக போயி அந்த சில காட்சிகள்ல நடிச்சுக் கொடுத்துட்டு வந்தேன். அதுக்கப்புறம் பார்த்தால் அந்தப் படத்தோட போஸ்டரை வெளியிட்டாங்க. அதுல ‘ஏ’ சர்பிடிக்கேட்டை பெரிசா போட்டுட்டு அதுல நான் குளிக்கிற சீன்.. என்னை ரேப் பண்ற சீனையெல்லாம் போஸ்டர்ல போட்டிருந்தாங்க.
எனக்குக் கோபம்ன்னா கோபம். இப்படியொரு நம்பிக்கை துரோகம் பண்ணீட்டாங்களான்னு நினைச்சு கொதிச்சுட்டேன். அந்தத் தயாரிப்பாளர் நஷ்டமாயிரக் கூடாதேன்னு நினைச்சு போய் நடிச்சுக் கொடுத்தால், அதையே வியாபாரமாக்கி கடைசீல என்னையும் கவர்ச்சி நடிகையா முத்திரை குத்திட்டாங்களேன்னு கோபமோ கோபம்.
அப்புறம் ஒரு நாள் ஒரு இடத்துல அந்த இயக்குநரை தற்செயலா சந்திச்சேன். வந்த கோபத்துல அத்தனை பேர் முன்னாடியும் அந்த ஆளை சட்டையோட கொத்தாப் பிடிச்சு ‘பளார்’.. ’பளார்’ன்னு அவன் கன்னத்துல நாலு அறை அறைஞ்சு “ஏண்டா இப்படி செஞ்ச..?”ன்னு கேள்வி கேட்டுட்டுத்தான் விட்டேன்.
இப்பவும் என்னைப் பார்க்குறவங்க என்னை ஒரு கவர்ச்சி பிம்பமாத்தான் பார்க்குறாங்களே ஒழிய என்னையும் ஒரு பெண்ணா.. மனுஷியா பார்க்குறதில்லை. இது எனக்கு தீராத வலியைக் கொடுத்திருக்கு..” என்று வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார் நடிகை விசித்ரா.