full screen background image

“முதல் படத்துலேயே என் தம்பி 3 முத்தக் காட்சில நடிச்சிருக்கான்” – நடிகர் விஷ்ணு விஷாலின் பொறாமைப் பேச்சு!

“முதல் படத்துலேயே என் தம்பி 3 முத்தக் காட்சில நடிச்சிருக்கான்” – நடிகர் விஷ்ணு விஷாலின் பொறாமைப் பேச்சு!

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’.

இந்தப் படத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

படத்தில் ருத்ராவுக்கு ஜோடியாக மிதிலா பால்கர் நடித்திருக்கிறார். சமூக வலைதள பிரபலமான இவருக்கு இதுதான் முதல் படம் என்றாலும் இவரது திரை இருப்பு ரசிகர்களை நிச்சயம் கவரும்.

இவர்களுடன் இயக்குநர் மிஷ்கின்,  கஸ்தூரி, கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், சுஜாதா பாபு, நிர்மல் பிள்ளை, அருண் குரியன், விஜயசாரதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

ஜென் மார்டின் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆர்.சி.பிரணவ் படத் தொகுப்பு செய்ய, ராஜேஷ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். முகேஷ் மஞ்சுநாத் கதை எழுத, சாரதா மற்றும் முகேஷ் மஞ்சுநாத் இணைந்து கூடுதல் வசனம் மற்றும் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அஹிக், கார்த்திக் நேத்தா, வேணு செல்வன், ரைசிங் ராப்பர் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ளார். இவர் 250-க்கும் மேற்பட்ட கமர்ஷியல் வீடியோ மற்றும் ஃபிலிம் மேக்கர் ராஜீவ் மேனனிடம் பல ஃபீச்சர் படங்களில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

நாயகன் ருத்ரா இதற்கு முன்பு ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். மேலும், FIR’, ‘கட்டா குஸ்தி’ ஆகிய படங்களில் போஸ்ட் புரொடக்சன் பணிகளையும் ருத்ரா மேற்கொண்டார்.

ரொமான்ஸ், ஹியூமர், எமோஷனல் என அனைத்தும் இந்தப் படத்தில் உள்ளது. படத்தில் உதவி இயக்குநராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குநராகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கும் கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல “ரொமான்ஸ் கதை இல்லையா?” என கேட்கிறார் விஷ்ணு விஷால்.

இதைத் தொடர்ந்து இயக்குர் ருத்ரா அவருக்குக் கதை ஆனாரா? இல்லையா..? அவருடைய இயக்குநர் கனவு என்னவானது..? என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுதுபோக்கு அம்சத்துடன் எடுத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் டைட்டில் ஐகானிக் பாடலான ‘ஓஹோ எந்தன் பேபி’ பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. அந்தப் பாடலுக்கு மரியாதை செய்யும்விதமாகவும் அதன் கிளிம்ப்ஸ் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், இப்படக் குழு சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். 

கதாநாயகனாக தன்னுடைய அறிமுகம் பற்றி நாயகன் ருத்ரா பேசும்போது, “சிறு வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்பதுதான் திட்டம். அண்ணன் நடிகரானபோது எங்களுக்கு அது புதிய அனுபவமாக இருந்தது. அப்போதே நடிப்புதான் என்று முடிவு செய்துவிட்டேன்.

ஆனால், சினிமாவைப் பற்றி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஏ.ஆர்.முருகதாஸ் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். பிறகு அண்ணனின் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பு பணியையும் கவனித்து வந்தேன். அதன் மூலம் சினிமா மீதான புரிதல் எனக்கு ஏற்பட்டது.

நடிகராக வேண்டும் என்பது தான் என் நோக்கம், அதே சமயம் சினிமாவைப் பற்றி பிராக்டிக்கலாக தெரிந்து கொள்வதற்காக தான் உதவி இயக்குநராக பணியாற்றினேன். ஆனால், உதவி இயக்குநராக வேலை செய்தபோது எனக்குள் படம் இயக்கும் ஆசையும் வந்து விட்டது. சில கதைகள் எழுதினேன். அதை வெவ்வேறு வடிவத்தில் எழுதி, அண்ணனிடமும் சொல்லியிருக்கிறேன். இப்படி இயக்குநர் ஆசை என்னை அறியாமலேயே என்னுள் வந்துவிட்டது. அதனால் எதிர்காலத்தில் நிச்சயம் படம் இயக்கவும் செய்வேன்.” என்றார்.

நடிகர் விஷ்ணு விஷால் இந்தப் படம் பற்றி கூறுகையில், “என் தம்பியை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் திட்டம், அதற்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறேன்.

ருத்ரா எனது சித்தி மற்றும் பெரியப்பா பையன், அவரது அப்பாவுக்கும், என் அப்பாவுக்கும் ஒரே நேரத்தில்தான் திருமணம் நடந்தது. நாங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறோம்.

ருத்ராவின் அப்பாவான எனது சித்தப்பாவுக்குதான் சினிமா மீது ஆர்வம். நான் நடிக்க வந்ததற்கும் அவர்தான் காரணம். அவர்தான் சிறு வயதில் இருந்தே சினிமா, சினிமா என்று இருப்பார். அவர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். பெரியதாக அவரால் சினிமாவில் சாதிக்க முடியவில்லை. அவரது கனவை நிறைவேற்றும்படியாகத்தான் ருத்ரா சினிமாவுக்கு வந்திருக்கிறார்.  

சினிமாவில் என்னுடைய ஆரம்பக்கட்ட வாழ்க்கையை ருத்ரா பார்த்திருக்கிறார், பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார், அதனால் அவருக்கு சினிமா மீதான புரிதல் இருக்கிறது. சினிமாவுக்காக நடிப்பு பயிற்சி என தன்னை முழுவதுமாக தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்தக் கதையை நான் சில வருடங்களுக்கு முன்பு கேட்டேன். எனக்கு ரொம்ப பிடித்தது. ஆனால், அதில் என்னால் நடிக்க முடியாது என்பதால், கதையை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டும். ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்த இந்த கதை சரியாக இருக்கும் என்பதால் இதை தயாரிக்க முடிவு செய்தேன்.

இதில் ஒரு நடிகர் கதாபாத்திரம் இருக்கிறது. வெளியே போய் கேட்பதைவிட, நானே செய்துவிடலாம் என்று தோன்றியது. அதனால் நானே நடித்துவிட்டேன். படம் முழுவதும் வருகிறேன். எனக்கு இது முதல் காதல் படம் என்பதால் எனக்கும் புது அனுபவமாக இருக்கும். 

இது முழுக்க, முழுக்க காதல் கதை. என் படங்களில் காதல் இருந்தாலும், முழுக்க முழுக்க காதல் கதை கொண்ட படங்களில் நடித்ததில்லை. ஆனால், என் தம்பி முதல் படத்திலேயே ஒரு காதல் கதையில் அறிமுகமாவது மகிழ்ச்சி.

இந்த படத்தில் நான் நடிகர் விஷ்ணு விஷாலாகவே நடிக்கிறேன். ருத்ரா உதவி இயக்குநர் வேடத்தில் நடித்திருக்கிறார். நான் ஆக்‌ஷன், திரில்லர் ஜானர் படங்களில் நடித்திருந்தாலும் காதல் கதைகளில் நடிக்கவில்லை. அதனால் எனக்கு ஒரு காதல் கதை படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை.

அந்த நேரத்தில் எனக்கு வேறு ஒரு ஜானர் கதையை சொல்ல வரும் உதவி இயக்குநரான ருத்ரா, என் ஆசையை தெரிந்துக் கொண்டு எனக்காக ஒரு காதல் கதையை எழுதுகிறார், அதன் பிறகு என்ன ஆனது என்பதை முழுமையான காதல் படமாக சொல்வதுதான் இந்த ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம்.

ருத்ராவுக்கு இந்தக் கதை மிக பொருத்தமாக இருக்கும். அவர் இயல்பாகவே துறுதுறுவென்று இருப்பார் என்பதால் அவருக்கு இந்தக் காதல் கதை மிக பொருத்தமாக இருக்கும்.

ருத்ராவுக்கும் ஒரு காதல் இருக்கும். எனக்கு ஒரு காதல் இருக்கும். ருத்ராவின் அம்மா – அப்பா கதாபாத்திரங்களுக்கு இடையே ஒரு காதல் இருக்கும். இப்படி படம் முழுவதுமே காதல் மற்றும் பொழுதுபோக்கான அம்சங்கள் நிறைந்திருக்கும். அதனால், இது முழுவதுமான ஒரு காதல் படமாக இருக்கும். 

நான் இதுவரையிலும் 25 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் ஒரு படத்தில்கூட எனக்கு முத்தக் காட்சிகள் அமைந்ததில்லை, ஆனால் ருத்ராவுக்கு முதல் படத்திலேயே மூன்று முத்தக் காட்சிகள் அமைந்திருக்கிறது. எனக்குப் பொறாமையாத்தான் இருக்கு.

இந்தப் படத்தை நாங்கள் பார்த்துவிட்டோம். பலரும் பார்த்தார்கள். ருத்ரா அறிமுகம் என்றாலும், அவரை சுற்றி நடித்தவர்கள் சுமார் 10 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர்கள், ஆனால் அவர்களுடன் இணைந்து நடிக்கும்போது ருத்ரா தன் மீது கவனம் ஈர்க்கும் வகையில் தைரியமாக நடித்திருக்கிறார். நான்கூட என் முதல் படத்தில் இப்படி தைரியமாக நடிக்கவில்லை, அதனால், அவர் சினிமாவில் நாயகனாக நிச்சயம் ஒரு இடத்தை பிடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் படம் பற்றி கூறுகையில், ”முகேஷ் மஞ்சுநாத் என்பவரது கதை இது. நான் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறேன். விளம்பர படங்கள் இயக்குவதில் பிஸியாக இருந்ததால் திரைப்படம் இயக்குவது காலதாமதமாகிவிட்டது.

’மாடர்ன் லவ்’ படத்தில் நான் ஒரு எபிசோட் இயக்கியிருந்தேன், அதை பார்த்துவிட்டுதான் விஷ்ணு என்னை அழைத்தார். இந்தக் கதையை கேட்டதும் எனக்கு பிடித்துவிட்டது. இந்த தலைப்பையும் விஷ்ணுதான் சொன்னார். அவர் முதல் முறை தலைப்பை சொன்னபோதே எனக்குப் பிடித்துவிட்டது.

ருத்ராவுக்கு இந்தக் கதை மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்தக் கதையில் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வது என்று நாயகன் மூன்று காலக்கட்டத்திற்கு ஏற்ப மாற்றத்தை வெளிக்காட்ட வேண்டும், அதற்கு ருத்ரா மிக சரியானவராக இருந்தார். அவரது முகத்தில் மூன்றுவிதமான காலக்கட்டத்தின் வளர்ச்சியை காட்டுவது எனக்கு எளிதாக இருந்தது. எனவே, இந்த படம் ருத்ராவுக்கு மிகச் சரியான அறிமுகமாக இருக்கும்.

விளம்பரங்களில் 30 செகண்ட்டில் பார்வையாளர்களைக் என்கேஜ் செய்ய வேண்டும். ஆனால், சினிமாவில் 2.30 மணி நேரத்திற்கும் மேலாக பார்வையாளர்களைக் கட்டிப் போட வேண்டும் என்பது ஒரு சவால். அதை சிறப்பாக செய்திருக்கிறோம்” என்றார்.

நடிகராகும் தம்பிக்கு என்ன அறிவுரை கொடுத்தீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த விஷ்ணு விஷால், “இப்போது உள்ள பசங்களுக்கு அறிவுரை சொல்ல தேவையில்லை. அவர்களுக்கே அனைத்தும் தெரிகிறது. என்னுடைய சினிமா வாழ்க்கையில், நான் எதிர்கொண்ட பிரச்சனைகள் அனைத்தையும் ருத்ரா பார்த்துக் கொண்டிருப்பதால், அவருக்கு சினிமாவில் எப்படி இருக்க வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். சினிமாவில் எனக்கு கிடைக்காதவை அனைத்தும் அவருக்கு கிடைத்திருக்கிறது. அதனால் அவர் என்னைவிட அதிஷ்டசாலிதான். எனக்கு எப்படி ஒரு குருவாக சுசீந்திரன் சார் கிடைத்தாரோ, அதுபோல் ருத்ராவுக்கு கிருஷ்ணா கிடைத்திருக்கிறார். ருத்ராவை வைத்து என் நிறுவனத்தில் தொடர்ந்து படங்கள் இயக்க விருப்பம்தான், நிச்சயம் என் தம்பியின் வளர்ச்சிக்கு நான் உறுதுணையாக இருப்பேன்.” என்றார்.

அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வரும் ‘ஒஹோ எந்தன் பேபி’ படத்தை, அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான பணிகளில் படக் குழு ஈடுபட்டுள்ளது.

 

Our Score