full screen background image

“சினிமாவில்தான் என் கருத்தை பகிர்வேன்..” – மணிரத்னத்தின் உறுதியான பதில்..!

“சினிமாவில்தான் என் கருத்தை பகிர்வேன்..” – மணிரத்னத்தின் உறுதியான பதில்..!

‘கடல்’ படம் தந்த விலைமதிப்பில்லாத தோல்வியினால் சற்றே வாடிப் போன இந்திய இயக்குநர் மணிரத்னம் தனது அடுத்தப் படத்தையும் தனது பெயருக்கு இருக்கும் மேஜிக் வேல்யூவை வைத்தே உருவாக்கியிருக்கிறார்.

துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன் நடிப்பில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத மணிரத்னத்தின் 24-வது படமாக உருவாகியிருக்கிறது இந்த ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம்.

பாடல் வெளியீட்டு விழாவை நடத்தாமல், பாடல் சிடிக்கள் அதிக அளவில் விற்பனையானதற்கான வெற்றி விழாவாக நேற்று மதியம் தாஜ்கோரமண்டல் ஹோட்டலில் விழாவினை நடத்தினார்கள்.

O Kadhal Kanmani Audio Success Press Meet Event Stills (23)

முதலில் படத்தின் புதிய டிரெயிலரும், இரண்டு பாடல் காட்சிகளும் திரையிடப்பட்டன. பாடல் காட்சிகளில் மணிரத்னத்தின் புதிய வகை திறமை பளிச்சென்று தெரிகிறது. இளமை ததும்பும் இரண்டு காதலர்களின் துள்ளலான ஆட்டத்தை பலவித கோணங்களில் பார்க்கும்வகையில்தான் படமாக்கியிருக்கிறார். ஆனால் பாடல்கள் வழக்கம்போல புரியவே இல்லை.

பின்பு ஒவ்வொருவராக மேடைக்கு வந்து பேசினார்கள். கவிப்பேர்ரசு வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பின்பு மேடையேறிய மணிரத்னம் பி.சி.ஸ்ரீராமை அழைத்து பேசச் சொன்னார். மேடைக்கு வந்த பி.சி.ஸ்ரீராம் நன்றி வணக்கம் என்று இரண்டு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு நடையைக் கட்ட திகைத்துப் போன மணிரத்னம் எனக்கே போட்டியா என்று சொல்லி கூட்டத்தைக் கலகலக்க வைத்தார்.

பின்பு பேசிய மணிரத்னம், “இந்தப் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் பிரபல நடனக் கலைஞர் லீலா சாம்சன் நடித்திருக்கிறார்..” என்று சொல்லி அவரை மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தினார்.

லீலா சாம்சன் பேசிய பின்பு மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தார் மணிரத்னம். “23 ஆண்டுகளாக வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். இந்தக் கூட்டணி இன்னமும் தொடர்கிறது. இருந்தாலும் எனது முதல் படத்தில் கிடைத்த அனுபவம் போலவேதான் இப்போதும் உணர்கிறேன்.  இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடலையும் புதிய படம் போலவே எண்ணி போராடி கொண்டு வந்திருக்கிறோம்.

‘கடல்’ படத்தில் கார்த்திக் மகன்.. இந்தப் படத்தில் மம்முட்டி மகன்.. ’என்ன காரணம்?’ன்னு நிறைய பேர் கேட்குறாங்க. நடிகர்களின் மகன்கள் என்பதற்காக இவர்களை நான் நடிக்க வைக்கவில்லை. இந்தக் கேரக்டர்களுக்கு பொருத்தமாக இருந்ததால்தான் அவர்களை நடிக்க வைத்தேன்.

இந்தப் படத்தின் கதை சஸ்பென்ஸாக இருக்க வேண்டும்னு நினைத்தேன். ஆனால் வைரமுத்து சொல்லிவிட்டார். 2000-மாவது ஆண்டில் ‘அலைபாயுதே’ படம் வந்தது. இளைய சமுதாயத்துடன் தொடர்பில்  இருந்தால் நமக்கு அவர்களுடைய குணங்கள் புரிந்துவிடும். அது புரிந்துவிட்டால் நானும் இளைஞனே. உலகில் காதல் இல்லாமல் உறவு இல்லை. காதலர்கள்.. கணவன்-மனைவி தவிர்த்து.. அம்மா-மகன், அப்பா-மகன் என பல பரிணாமங்களில் காதல் இருக்கிறது. படம் பிடிக்க நிறைய காதல் கதைகளும் இருக்கின்றன. இந்தப் படம் அந்தக் காதலுடன் வேறு ஒரு பரிமாணத்தைக் காட்டுகிறது.

இந்தப் படத்தில் நானும் ரகுமானும் இணைந்து ஒரு பாடலை எழுதியிருக்கிறோம். நாங்கள் பாடலுக்கு அவசரப்பட்ட நேரத்தில் வைரமுத்து ஸார் ஊரில் இல்லாததால் நாங்களே எழுத வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ‘ராவணன்’ படத்தின் ‘வீரா’ பாடலிலும், ‘அலைபாயுதே’ படத்தின் ‘என்றென்றும் புன்னகை’ பாடலிலும் என் பங்களிப்பு இருந்தது. இந்தப் படத்தை இன்றைய இளைஞர்களுக்குப் பிடித்த வகையில் எடுத்திருக்கிறேன். எனக்கே இது புதிய படமாகத்தான் தோன்றியது..” என்றார்.

அப்படியே இறங்கி வீட்டுக்குப் போக வேண்டும் என்று துடியாய் துடித்தவர்களை பி.ஆர்.ஓ. நிகில் முருகன் மடக்கி பத்திரிகையாளர்களிடம் பேசிவிட்டுத்தான் போக வேண்டும் என்று கட்டளையிட.. வேறு வழியில்லாமல் திரும்பவும் மேடையேறி கேள்விகளை எதிர்கொண்டார் மணிரத்னம்.  எல்லாவற்றுக்கும் எப்போதும்போல் ரத்தினச் சுருக்கமாகவே பதிலளித்தார்.

இந்த படம் லிவிங் டூ கெதர் வாழ்க்கையைப் பற்றிய படமா..?

படம் வெளியாக இன்னும் நாலு நாள்தான் இருக்கு. நீங்களே படம் பார்த்து தெரிஞ்சுக்கலாமே..?

“உங்க ‘அலைபாயுதே’ படத்தின் பாதிப்பு அந்த படம் வெளிவந்து பல வருஷங்களாகியும் நாட்ல விடாமல் தொடருது. இப்போ கல்யாணம் பண்ணாமலே ஒரு குடும்பமா வாழறது பற்றி படமெடுத்திருக்கீங்க. இது இன்னும் எத்தனை வருஷத்துக்கு தமிழக இளசுகளை பாதிக்குமோ..?”

இந்தக் கேள்விக்கு தான் பதிலளிக்காமல் பி.சி.யிடம் மைக்கை தள்ளிவிட்டார் மணிரத்னம். அவர் இரண்டே வார்த்தைகளில் எதையோ சொல்ல.. பிரச்சினை முடிந்தது.

உங்களை தொடர்பு கொள்ளவே முடியலையே..? என்று மணிரத்னத்திடம் கேள்வி கேட்டார் மூத்த நிருபர் தேவிமணி.

“பேசறதுக்கு எதுவுமில்லாம இருக்கும்போது சந்திச்சு என்ன பேசுறது..? அது மட்டுமில்ல.. உங்க பேனா, நோட்பேட் ரெண்டையும் வீட்லயே வச்சுட்டு காபி ஷாப் வாங்க. நிறைய பேசுவோம்.” என்றார் மணி.

தேவிமணியும் விடவில்லை. “நாட்ல ஏதாவது முக்கியமான இஷ்யூஸ் நடக்கிற நேரத்திலகூட கருத்து கேட்கணும்னா முடியலையே..? சொல்றது உங்க கடமையில்லையா?” என்றார் விடாப்பிடியாக..

“கடமைதான். ஆனால் அதை சொல்வதற்கு ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிளாட்பார்ம் இருக்கு. நான் ஒரு கிரியேட்டர். இதோ எனக்கு இந்த ஸ்கிரீன் இருக்கு. என் கருத்தை நான் இதில்தான் சொல்வேன்..” என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

தொடர்ந்து மணிரத்னத்துடனான பேட்டி தொடர்ந்தது..!

துல்கர் சல்மானை நடிக்க வைத்தது ஏன்..?

‘வாயை மூடிப் பேசவும்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்தான் துல்கரை நான் பார்த்தேன். யதார்த்தமான இளைஞராக இருந்தார். இந்தப் படத்தில் லைவ் ரெக்கார்டிங் செய்திருக்கிறேன். படப்பிடிப்பில் நடிகர்கள் பேசியதுதான் படத்திலும் இருக்கும். சென்னையில் வளர்ந்த பையன் என்பதால் துல்கர் ரொம்பவே உதவியாக இருந்தார். ம்ம்முட்டி மகன் என்று தெரியாத அளவுக்கு படத்தில் அவர் நடித்திருக்கிறார்.

15 ஆண்டுகள் கழித்து பி.சி.ஸ்ரீராமுடன் இணைந்தது பற்றி..?

சிறுவயதில் இருந்தே நாங்கள் இருவரும் நண்பர்கள்தான். என் எல்லா கதைகள் குறித்தும் அவருடன் பேசியிருக்கிறேன். இந்தப் படத்துக்கு அவர் ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல.. ஆலோசகரும்கூட.

ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் எல்லா பாடல்களுமே ஹிட்டாகிவிடுகிறதே..?

இளையராஜாவுடன் சேர்ந்து இன்னும் நல்ல பாடல்களை நான் கொடுத்திருக்கிறேன் என்பதை மறந்துவிடக்கூடாது. இரு ஜாம்பவான்களும் பணியாற்றும் அனுபவம் எனக்குக் கிடைத்திருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் கமெண்ட்டுகள் அதிகம் வருகிறதே..?

அந்தக் காலத்தில் டீக்கடைகளில் பேசினார்கள். யாருக்கும் படம் எடுக்கத் தெரியவில்லை. நாம் படம் எடுப்போம் என்று.. அப்போது நானும் பி.சி.ஸ்ரீராமும்கூட இதுபோல் பேசியிருக்கிறோம். இப்போது அவரவர் கருத்துக்களைப் பதிவு செய்ய சமூக வலைத்தளங்கள் கிடைத்திருக்கின்றன.

சினிமா வியாபாரம் மாறிவிட்டதே..?

செல்போனில் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். தியேட்டருக்கு வர மக்களுக்கு விருப்பமே இல்லை. ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம். மக்களிடம் படத்தை எப்படி கொண்டு போய் சேர்ப்பது என்று கற்றுக் கொள்ள வேண்டும்.

படம் தோல்வியடைந்தால் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்..?

படம் வரவேற்பு பெற்றால் அதை ஏற்றுக் கொள்கிறோம். அதேபோல் தோல்வி கிடைத்தாலும் ஏற்கத்தான் வேண்டும். எல்லாருக்கும் இறங்கு முகம் வரும்.  அதைப் பார்த்து பயந்துவிடக் கூடாது. தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். தோல்வியடைந்தால் அதனை நேர்மையாக ஒப்புக் கொள்ள வேண்டும்.

Our Score