ஒரு படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு முன்பே ஒரு முன்னணி தொலைக்காட்சி சேனல் வாங்குவது அப்படத்தின் வர்த்தக பலத்தையும் அப்படத்திற்கு மக்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பையும் குறிக்கும்.
சுவாரஸ்யமான, ஜனரஞ்சகமான எல்லா அம்சங்களையும் கொண்ட ஒரு முழு நீள குடும்ப படமாக தற்போது தயாராகி வருகிறது ‘நிமிர்’ திரைப்படம். இப்படத்தை சந்தோஷ் T.குருவில்லா தயாரித்துள்ளார். சென்ற ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற மகேஷிண்ட பிரதிகாரம் படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்தப் படம்.
இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன், நடிகைகள் பார்வதி நாயர், நமீதா பிரமோத், நடிகர் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரியதர்ஷன் இயக்கியிருக்கிறார்.
விரைவில் வெளியாக இருக்கும் இந்த ‘நிமிர்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விஜய் டிவி பெற்றுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பேயே படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து விஜய் டிவியின் பொது மேலாளரான கிருஷ்ணன் குட்டி பேசுகையில், “குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கக் கூடிய அழகான படங்களை கண்டெடுத்து வாங்குவதில் நாங்கள் என்றுமே முனைப்போடுள்ளோம். ‘நிமிர்’ அவ்வாறான ஒரு ஜனரஞ்சகமான குடும்ப படம்.
இப்படத்தின் சேனல் உரிமத்தை பெற்றுள்ளதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. உதயநிதி சாருடனும், இயக்குநர் பிரியதர்ஷன் சாருடனும் வரும் காலங்களிலும் சேர்ந்து பணி புரிய ஆவலோடு உள்ளோம்…” என்றார்.