சைதன்யா சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சைதன்யா சங்கரன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘நிக்கிரகன்.’
இந்தப் படத்தில் பிரசாந்த் தாவீத், கனி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
தயாரிப்பு – சைதன்யா சங்கரன், ஒளிப்பதிவு – ஜே.அரவிந்த், இசை – சனாதன், படத் தொகுப்பு – வினோத் ஜாக்சன் & ஷாஹித், எழுத்து, இயக்கம் – நஸ்ரேன் சாம்
படம் பற்றிப் பேசிய இயக்குநர் நஸ்ரேன் சாம், “நம் அன்றாட வாழ்வில் நாம் கடந்து செல்லும், சற்றே முக்கியத்துவமற்ற நிகழ்வுகள் போல தோன்றும் ஒரு விஷயம், ஒரு மனிதனின் வாழ்வையே மாற்றிப் போடும் வல்லமை படைத்தது என்பதுதான் இத்திரைப்படம் சொல்லும் நீதி.
இணையத்தில் மறைந்துள்ள ஆபத்துகள் என்னென்ன, அதில் சிக்கிக் கொண்டவர்கள் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதைக் களம்.
இரு கல்லூரி மாணவர்கள், பகுதி நேர வேலையாக ரேடியோ ஜாக்கியாக ஒரு எஃப் எம் சேனலில் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் வழங்கும் ஒரு புதுமையான, கலகலப்பான நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்கின்றனர்.
பின்னர் அதையே முழு நேர வேலையாகவும் மாற்றிக் கொண்டுவிட, வேடிக்கையாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை, அவர்களே அறியாத வண்ணம் தடம் மாறுகிறது. அது ஏன்.. எப்படி.. என்பதுதான் படத்தின் திரைக்கதை..” என்றார் இயக்குநர் நஸ்ரேன் சாம்.









