ஐரா – சினிமா விமர்சனம்

ஐரா – சினிமா விமர்சனம்

‘அறம்’ படத்தை தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கொட்டபாடி ஜே.ராஜேஷ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மேலும், கலையரசன், மீரா கிருஷ்ணன், ஜெயப்பிரகாஷ், யோகிபாபு,  குள்ளப்புள்ளி லீலா, செந்தி குமாரி, கேப்ரில்லா செலஸ், மாதேவன், அஷ்வந்த் அசோக் குமார் ஆகியோருடன் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.

கதை, திரைக்கதை – ப்ரியங்கா ரவீந்திரன், இசை – கே.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு – சுதர்சன் ஸ்ரீனிவாசன், படத் தொகுப்பு – கார்த்திக் ஜோகேஷ், கலை இயக்கம் – சிவசங்கர், சண்டை இயக்கம் – மிராக்கிள் மைக்கேல்ராஜ், ஆடை வடிவமைப்பு – ப்ரீத்தி நெடுமாறன், நடன இயக்கம் – விஜி சதீஷ், உடைகள் – ரவிச்சந்திரன், ஒப்பனை – ரங்கநாதன் ராஜூ, கிராபிக்ஸ், கலர் சி.ஜி. – IGENE, பாடல்கள் – தாமரை, மதன் கார்க்கி, கு.கார்த்திக், ஒலிப்பதிவு – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, புகைப்படங்கள் – டி.நரேந்திரன், விளம்பர வடிவமைப்பு – என்.டி.பிரத்தூல், தயாரிப்பு மேற்பார்வை – பி.சந்துரு, டி.ஹரிஹரசுதன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டிஒன்,  நிர்வாகத் தயாரிப்பு – டி.ஏழுமலை, தயாரிப்பு – கோடப்பாடி ஜே.ராஜேஷ்.

‘லட்சுமி’, ‘மா’, ஆகிய குறும் படங்களையும், ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடும்’ என்ற திரைப்படத்தையும் இயக்கிய இயக்குநர் சர்ஜூன் வசனம் எழுதி  படத்தை இயக்கியிருக்கிறார்.

யமுனா என்னும் நயன்தாரா ஒரு பத்திரிகையில் பணியாற்றி வருகிறார். அவருடைய பெற்றோர்களான ஜெயப்பிரகாஷூம், மீரா கிருஷ்ணனும் அவரைத் திருமணம் செய்து கொள்ள நச்சரிக்கிறார்கள்.

நயன்தாராவுக்குத் தெரியாமலேயே ஒரு அமெரிக்க மாப்பிள்ளையை தேர்வு செய்கிறார்கள். நயன்தாரா வேண்டாவெறுப்பாக மாப்பிள்ளையை பார்த்துப் பேசுகிறார். இந்தப் பேச்சு சண்டையில் முடிந்தாலும், மாப்பிள்ளைக்கு நயன்தாராவைப் பிடித்துப் போய்விட்டதால் திருமணத்தை உடனேயே நடத்திவிடலாம் என்கிறார்கள் பெற்றோர்கள்.

இது பிடிக்காமல் நயன்தாரா தனது பெற்றோர்களிடத்தில்கூட சொல்லாமல் தனது அப்பாவின் சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு வருகிறார். பொள்ளாச்சியில் இருக்கும் அவர்களின் பூர்வீக வீட்டில் அவருடைய கண் பார்வையிழந்த பாட்டியும், துணைக்கு யோகிபாபுவும் இருக்கிறார்கள். கூடவே யோகிபாபுவின் உறவினரான ஒரு சிறுவனும் இருக்கிறான்.

நயன்தாராவுக்கு அந்த வீட்டில் ஏதோ மர்மான ஒன்று இருப்பதாக நினைக்கிறார். ஒரு பட்டாம்பூச்சி அடிக்கடி வந்து அந்த வீட்டில் ஏதோ ஒரு அறிகுறியை இட்டுச் செல்கிறது. இதையெல்லாம் பார்க்கும் நயன்தாரா இதை வைத்து ஒரு பரபரப்பை உண்டு செய்ய விரும்பி யூ டியூபில் இதையெல்லாம் படம் பிடித்துக் காட்டுகிறார். தன் வீட்டில் பேய் இருப்பதாகச் சொல்லி பரபரப்பூட்டுகிறார். இதையும் ஒரு கூட்டம் பார்த்து ஆர்ப்பரித்து வருகிறது.

இதே நேரம் சென்னையில் கலையரசன் தனது காதலியான பவானி ஒரு விபத்தில் இறந்து போன சோகத்தில் இருக்கிறார். அதோடு அந்த விபத்தோடும், பவானியோடும் தொடர்புடைய 8 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் சாகிறார்கள்.

பொள்ளாச்சி வீட்டில் நடக்கும் சில சம்பவங்களால் அந்த வீட்டில் பேய் இருப்பதாகவே நினைக்கிறார் நயன்தாரா. அந்த நேரத்தில் அவரது பாட்டியும் மாடிப் படிகளில் விழுந்து காயம்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். மருத்துவமனையிலும் அவரை ஏதோ ஒன்று துரத்துவதாகவே நினைக்கிறார் நயன்தாரா. அதற்கான சூழலும் அப்படித்தான் இருக்கிறது.

இதைத் தொடர்ந்து பாட்டியும் இறந்து போக.. நயன்தாராவை சென்னைக்கு அழைத்து வருகிறார்கள் பெற்றோர்கள். ஆனாலும் நயன்தாரா இதில் இருக்கும் மர்மத்தை கண்டறிய மீண்டும் பொள்ளாச்சிக்கே வருகிறார். இன்னொரு பக்கம் கலையரசன் பவானியின் சாவுக்குப் பிறகு அடுத்தடுத்து நடந்த மர்ம சாவுகளுக்குக் காரணம் கண்டறிய அலைகிறார்.

நயன்தாராவின் துப்பறியும் பணியில் இதற்கும் கலையரசனுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை உணர்கிறார். கலையரசனிடம் இது பற்றி யமுனா என்னும் நயன்தாரா கேட்க அவருக்கு பவானி என்னும் நயன்தாராவின் சோகக் கதை தெரிய வருகிறது.

இவர்களின் துப்பறியும் பணி நிறைவேறியதா..? காரணத்தைக் கண்டறிந்தார்களா..? அந்தப் பேயை என்ன செய்தார்கள்..? பவானிக்கும், யமுனாவுக்கும் என்ன தொடர்பு? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

படத்தில் முழுக்க, முழுக்க நயன்தாராவின் ராஜ்ஜியம்தான். இரண்டு கேரக்டர்கள் என்பதால் இரண்டுக்கும் பொருத்தமான ஒப்பனையில் கச்சிதமாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

யமுனாவாக வரும் நயன்தாரா புற அழகையும் தாண்டி அக அழகை வெளிப்படுத்தும்விதமான கேரக்டர் ஸ்கெட்ச்சில் படைக்கப்பட்டிருக்கிறார்.  தன்னைப் பெண் பார்க்க வந்தவனிடம் அவர் பேசும் பேச்சுக்களே இதற்கு சாட்சி. “நீ இப்ப மீடியாவிலதான இருக்கே, இந்த இடத்துக்கு வர்றதுக்கு எத்தனை  பேரை பாத்திருப்ப?  லைப்ப ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிறதவிட கல்யாணம் பண்ணிட்டு என்ஜாய் பண்ணு!” என்று அவன் சொல்ல அதற்கு யமுனா சொல்லும் பதில் நச். ஆனாலும் “உங்கம்மா உனக்கு ‘ஆதி’ன்னு பேர் வைச்சத்துக்கு பதிலா வேற பேரு வைச்சிருக்கலாம்” என்று சொல்வது அந்தக் கேரக்டருக்குப் பொருத்தமாக இல்லை.

தற்போது வெளியுலகத்தில் நடந்திருக்கும் நயன்தாரா – ராதாரவி மோதலில் இன்றைய நயன்தாராவின் வாழ்க்கையை குத்திக் காட்டுவதை போல, இந்தக் காட்சி அமைந்திருப்பது காலத்தின் கோலம் எனலாம்.

அதேபோல் நயன்தாரா பேசியிருக்கும் வசனமும், ராதாரவி மேடையில் அவரைக் கொச்சையாக பேசியதைப் போன்றதுதான். இயக்குநர் சொல்லிவிட்டார் என்பதற்காக நயன்தாரா இதனை ஏற்றுக் கொண்டு பேசியிருக்கக் கூடாது. அப்புறம் ராதாரவியை இவர் எப்படி குற்றம் சொல்ல முடியும்…?

பாடல் காட்சிகளிலும், யோகி பாபுவுடனான அக்கப்போரிலும் யமுனாவை மிகக் தீவிரமாக ரசிக்க முடிகிறது. யமுனா அழகில் ஜொலிக்கிறார் என்றால் பவானி களையான முகத்தின் மூலமாகவே ஈர்க்கிறார்.  கருவாச்சியான பவானி, நமது மனக் கதவைத் தட்டி அனுதாபத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

யமுனா தைரியமான மீடியா பெண்ணாக இருந்தும் பேயைப் பார்த்து பயப்படுவது போல காட்சிகள் வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம். கடைசி காட்சியில் பேயுடனான கலந்துரையாடலில் தைரியமாக அவர் அமர்ந்திருப்பதுதான் அந்தக் கேரக்டருக்குப் பொருத்தமானதாக இருக்கிறது. ஆனாலும் அநாவசியமாக தேவையில்லாத காட்சிகளிலெல்லாம் அவர் பயப்படுவதுபோல இருப்பது படத்திற்கு எந்தவிதத்திலும் உதவவில்லை.

மிகப் பெரிய சூப்பர் ஸ்டாரினிக்கு ஒரு துணை கேரக்டர் ரேன்ச்சில் அமுதன் என்னும் கேரக்டரில் கலையரசன் நடித்திருக்கிறார். அவரது நடிப்பு அநேக இடங்களில் இந்தக் கதைக்கு மெருகூட்டவில்லையென்றாலும் இறுதிக் காட்சியில் அவரது நடிப்புதான் படத்தின் மீதான கவன ஈர்ப்புக்கு காரணமாகியிருக்கிறது.

யோகிபாபு சிச்சுவேஷன் காமெடிக்கும், டைமிங் காமெடிக்கும் இடையில் இருக்கும் ஒரு காமெடியை செய்திருக்கிறார். இடையில் சிற்சில இடங்களில் புன்னகைக்க வைத்திருக்கிறார். அவ்வளவுதான்.

பாட்டி லீலா, அம்மா மீரா கிருஷ்ணன், அப்பா ஜெயப்பிரகாஷ், அந்தச் சிறுவன் என்று அனைவருமே அவர்களது கதாபாத்திரத்துக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.

இது போன்ற படங்களில் ஒளிப்பதிவும், இசையும்தான் மிக முக்கியமானவையாக இருக்கும். இந்தப் படத்திலும் இந்த இரண்டுமே சிறப்பாக இருக்கின்றன. ஒளிப்பதிவாளர் சுதர்சன் சீனிவாசனின் ஒளி ஓவியம் படம் முழுவதுமே நிரவியிருக்கிறது. பேய் தொடர்பான காட்சிகளில் அதிகப்பட்சமான மிரட்டலையும், திரில்லிங்கையும், ஹாரரையும் ஒளிப்பதிவும் காட்டியிருக்கிறது. இதேபோல் பின்னணி இசை அபாரம் என்றே சொல்ல வேண்டும். இசையில் ‘மேக தூதம்’ பாடலும், பாடல் காட்சியும் ரசிக்கும்படி படமாக்கப்பட்டுள்ளது.

படம் மூன்றுவித கதைக் கருக்களை ஒன்றாகக் கொண்டுள்ளது.

ஒரு பாவப்பட்ட பெண்ணின் ஆத்மா சாந்தியாக தனது வாழ்க்கையைத் தியாகம் செய்ய நினைக்கும் ஒரு பெண்ணின் கதை.

ஒரு பெண்ணின் கோபமும், உதவி செய்யாத தருணமும் எதிராளிக்கு என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பதைச் சொல்லும் கதை.

‘ஒரு கன்னியும், 3 களவாணிகளும்’ படத்தில் ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்த ஒரு நிமிடத் தாமதத்தினால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது போலத்தான் இந்தப் படத்திலும் மூலக் கதை எழுதப்பட்டிருக்கிறது.

பவானிக்கும், கலையரசனுக்குமான காதல் போர்ஷன் சுவையானது. சுவாரஸ்யமானது. அந்தப் பாடல் காட்சியின் சீக்வென்ஸ் காட்சிகளெல்லாம் மனதைத் தொடுகிறது.

கல்யாணத்திற்காக வந்து கொண்டிருக்கும்போது பவானிக்கு ஏற்படும் தடங்கல்களும், சிக்கல்களும் அந்தப் பரபரப்பில் கலையரசனின் ஹார்ட் பீட்டை போலவே நமக்கும்தான் படபடக்கிறது.

இருந்தும் லாஜில் எல்லை மீறல்களும் இல்லாமல் இல்லை. பட்டர்பிளை எபெக்ட் என்பதை போல பவானியின் ஆன்மா பட்டுப் பூச்சி வடிவத்தில் பறந்து கொண்டிருப்பதை ஒரு சிம்பாலிக்காக காட்டினாலும் அது ஒரு பாவமும் அறியாத பாட்டியை ஏன் கொல்ல வேண்டும்,,?

அன்றைய போராட்டத்தில் தனது வாழ்க்கைக் கதை முடிவுற்றதுக்குக் காரணமானவர்களை கொலை செய்ய வேண்டும் என்றால் முதலில் யமுனா என்னும் நயன்தாராவைத்தானே கொலை செய்திருக்க வேண்டும். ஆனால் அதைவிடுத்து மற்ற 8 பேரையும் தீர்த்துக் கட்டிவிட்டு கடைசியாகத்தான் யமுனாவிடம் வந்து நிற்கிறாள் பவானி.

பேய்ப் படங்களுக்கே உரித்தான டெம்ப்ளேட் காட்சிகள் இந்தப் படத்திலும் இருக்கின்றன. இதனாலேயே அடுத்து என்ன நடக்கும் என்பதை நாமே யூகிக்க முடிகிறது. இதுவே படத்திற்கு பெரிய மைனஸ் பாயிண்ட். கூடவே பயத்தைக் கூட்டும் அளவுக்கான காட்சிகளோ, இசையமைப்போ, படத் தொகுப்போ, நடிப்போ இல்லாமல் போனதும் கவனிக்கத்தக்கது.  

பவானி என்னும் கீழ்த் தஞ்சை மாவட்டத்தை வளம் கொழிக்க வைக்கும் ஆற்றையும், யமுனா என்னும் வட இந்தியாவில் காதல் என்ற பெயருக்கே அடையாளமாய் விளங்கும் தாஜ்மஹால் அமைந்திருக்கும் ஆற்றின் பெயரையும் நாயகிகளுக்கு குறியீடாய் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

தனது பூர்வீகத்தை விரும்பி நேசிக்கும் பெண்ணுக்கு அந்தப் பூர்வீகத்தில் வாசம் செய்யும் பவானி ஆற்றின் பெயரையும், காதலுக்காகவே இன்றளவும் பேசப்படும் தாஜ்மஹாலை கரையில் கொண்டிருக்கும் யமுனை ஆற்றின் பெயரை, காதலுக்காகவே ஏங்கித் தவித்த யமுனாவுக்கு வைத்திருப்பதும் பொருத்தம்தான்..!

ஆனால், படத்திற்கு ‘ஐரா’ என்கிற பெயரை எதற்காக வைத்தார்கள் என்று தெரியவில்லை.  நதிகளின் அடையாளமாக பெயர் இருக்கிறது என்றால் இது ஆந்திராவில் ஓடும் ‘ஐராவதி’ நதியைத்தான் குறிப்பிட்டதாக நினைக்க வேண்டும்.

ஆனால் இயக்குநர் கே.எம்.சர்ஜூன், இந்திரனின் அடையாளமான வெள்ளை யானையான ஐராவதத்தைக் குறித்து பெயர் வைத்தாரா.. அல்லது ஐராவதி நதியைக் குறித்து வைத்தாரா என்பது தெரியவில்லை. இதைக் கொஞ்சம் தெளிவுபடுத்தியிருக்கலாம்.

எப்படியிருப்பினும் இந்த ‘ஐரா’ நிச்சயமாக ஒரு முறை பார்க்கத் தகுந்ததுதான்..!

Our Score