ஒரு வழியாக தான் தயாரிக்கும் படத்திற்கு டைட்டிலை தேடி பிடித்துவிட்டார் இயக்குநர் விஜய்.
‘சைவம்’ படம் முடிந்த கையோடு 2012-ல் மலையாளத்தில் வெளிவந்த வெற்றி படமான ‘ஷட்டர்’ படத்தினை தமிழில் ரீமேக் செய்யப் போவதாக அறிவித்தார் இயக்குநர் விஜய். இந்தப் படத்தை தனது ‘தின்க் பிக் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தின் சார்பில் தானே தயாரிப்பதாக சொன்னார்.
படத்தின் பெயர் குறிப்பிடாமல் துவக்கப்பட்ட இந்தப் படத்தினை இயக்குநர் விஜய்யின் நெருங்கிய நண்பரான எடிட்டர் ஆண்டனி இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜ் பிரதான வேடத்தில் நடிக்க, மலையாள நடிகை அனுமோளும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்,
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்ட நிலையில் இப்போதுதான் இந்தப் படத்திற்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள். ‘நைட் ஷோ’ என்று..! படத்தின் கதைக்குப் பொருத்தமான டைட்டில்தான்.
கதைப்படி துபாயில் இருந்து தனது மகளின் கல்யாணத்திற்காக சொந்த ஊருக்கு வரும் சத்யராஜ் தினமும் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது வழக்கம். அப்படியொரு நாளைய பொழுதில் ஆட்டோ டிரைவரான அவரது நண்பரொருவர் விலைமாது பெண்ணொருத்தியை சத்யராஜின் அறைக்குள் வைத்துவிட்டு வெளியில் கதவைப் பூட்டிவிட்டுச் சென்று விடுகிறார். மீட்க ஆள் வரும்வரையிலும் அந்த 2 நாட்களில் நடக்கின்ற சம்பவங்கள்தான் இந்தப் படமே..
மலையாளத்தில் லால், சீனிவாசன், வினய் போர்ட், சஜிதா ரியா சாய்ரா ஆகியோர் நடித்திருந்தனர். ஜாய் மேத்யூ இயக்கியிருந்தார். பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு இப்படம் வெற்றி பெற்றிருந்தது.
இப்போது தமிழுக்கும் நடைவிரித்து வந்துள்ளது. வரவேற்கிறோம்..!