சினிமா சிரமத்தில் இருக்கிறது என்று ஒரு பக்கம் கூக்குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தாலும், புதியவர்களின் வரவு கோடம்பாக்கத்தில் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அனுபவசாலிகளெல்லாம் அமைதியாக கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, தமிழ்த் திரையுலகில் புதிய படையினர் நுழைந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றனர். துணிச்சலான முயற்சிகளை, வித்தியாசமான முறையில் எடுக்கும் இளைஞர்கள் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பட வரிசைகளும் தொடர்கின்றன.
இதற்கு உதாரணமாக, புதுமுகம் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நாயகனாக நடிப்பதுடன் இயக்கவும் செய்கிறார். அவர் சிவா.G. இவர் இயக்கும் ஒரு படம் ‘துப்பறிவான் அசோக்’.
இன்று பத்திரிகைகளைத் திறந்தாலே கொலை, கொள்ளைகள் போலவே பாலியல் பலாத்காரங்கள், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் பற்றிய செய்திகள்தான் அதிகம் இடம் பெற்று வருகின்றன. இது போன்ற பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளை மையப்படுத்தி உருவாகி வரும் படம்தான் ‘துப்பறிவான் அசோக்’.
பெண்களுக்கெதிராக வன்கொடுமைகளைத் தொடர்ந்து செய்து வருகிறது ஒரு கும்பல்.. பல பெண்கள் அவர்களிடம் சிக்கிச் சீரழிந்துள்னர். அந்த கொடிய கும்பலைக் கண்டு பிடித்தும் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டெடுத்து தன் துப்பறியும் திறனை அசோக் என்கிற ஹீரோ எப்படி நிரூபிக்கிறார் என்பதுதான் கதை.
இதே கருத்தை வைத்து இதே பெயரில் குறும்படமாக எடுக்கப்பட்டு பிலிம்ஸ் ரூம் நிறுவனம் நடத்திய குறும்படப் போட்டியில் விருதும் பெற்றுள்ளது இக்கதை. இதுவே விரிவான திரை வடிவில் ‘துப்பறிவான் அசோக்’ என்று படமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சிவா.G.. இசை ப்ரவீன் ஆலிவர். இவர் பல கன்னடப் படங்களுக்கு இசை அமைத்தவர். நாயகியாக பெங்களூர் புதுமுகம் சிந்து நடிக்கிறார். கூடவே மும்பை அழகி சோனா தீட்சித்தும் நடிக்கிறார். நகரம் சார்ந்த இப்படத்தை அர்த்தநாரீஸ்வரா மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கிறது.
ஜி.சிவா இயக்கும் இன்னுமொரு படம் ‘ஒரே ஒரு சாட்சி’. இதுவொரு சஸ்பென்ஸ் திரில்லர் படம். இது திகில் கதை காலம். அதுவும் சிரித்துக் கொண்டே பயப்படுவது, பயந்து கொண்டே சிரிப்பதெல்லாம் இன்றைய ரசிகர்களுக்கும் பிடிக்கிறது. இந்த வகையில் உருவாகும் படம்தான் இந்த ‘ஒரே ஒரு சாட்சி.’ இது கிராமத்தில் நடக்கும் கதை. காதல், திகில், நகைச்சுவை, அடிதடி, அதிரடி என்று வெற்றி பார்முலாவில் உருவாகி வருகிறது.
இதில் சிவா நாயகன், ரூபியா நாயகி. இருவருமே புதுமுகங்கள்தான். மற்றும் பல மண்ணின் மைந்தர்கள் பங்கேற்று நடிக்கிறார்கள். இசை ப்ரவீன் ஆலிவர். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குபவர் சிவா.ஜி. இப்படத்தையும் அர்த்த நாரீஸ்வரா மீடியா ஒர்க்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இணை தயாரிப்பு பாலா ஞானசுந்தரம்.











