நெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’

நெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’

கொரோனா வைரஸ் தாக்குதலினால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் புதிதாக டிஜிட்டல் தளத்தில் வலம் வந்து கொண்டிருந்த ஓடிடி தளங்களின் மவுசு மிக அதிகமாகவே கூடியுள்ளது.

உலகம் தழுவிய வியாபாரம் என்பதால் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் ஓடிடி தளங்கள் தற்போது  இந்தியாவில் வலுவாக காலூன்றி உள்ளன. இந்திய சினிமாவின் இயக்குநர்களை வைத்தே தங்களுக்கென்று தனியாக சினிமாக்களை உருவாக்கி வருகின்றன.

அந்த வரிசையில் சமீபத்தில் அமேஸான் ஓடிடி தளத்தில் ஒரு ஆந்தாலஜி திரைப்படமாக ‘புத்தம் புதுக் காலை’ வெளியானது.

இதேபோல் நெட்பிளிக்ஸ் நிறுவனமும் இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பில் 9 முன்னணி தமிழ் இயக்குநர்கள் இயக்கும் ஆந்தாலஜி திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தத் தயாரிப்பில் மணிரத்னத்துடன், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இணைந்துள்ளார்.

'நவரசா' என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை தமிழ்த் திரைப்படவுலக இயக்குநர்களான கே.வி.ஆனந்த், கௌதம் மேனன், விஜய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன் ராம், கார்த்திக் நரேன், ரதீந்திரன் பிரசாத் மற்றும் அரவிந்தசாமி ஆகியோர் இயக்குகிறார்கள்.

இந்த ஆந்தாலஜி திரைப்படத்தின் ஒன்பது பகுதிகளில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், ரேவதி, நித்யா மேனன், பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், பூர்ணா, ரித்விகா உள்பட முன்னணி நடிகைகளும் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்தப் படத்தின் 9 பாகங்களிலும் 9 ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த ஆந்தாலஜி திரைப்படம் மிக விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.