full screen background image

நேசிப்பாயா – சினிமா விமர்சனம்

நேசிப்பாயா – சினிமா விமர்சனம்

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மருமகனுமான ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் இந்த ‘நேசிப்பாயா’ படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, பிரபு, சரத்குமார், குஷ்பு, கல்கி கொச்சலின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

XB Film Creators நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் சேவியர் பிரிட்டோ இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இணைத் தயாரிப்பாளராக சினேகா பிரிட்டோ பணியாற்றியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு, பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளர் கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர்பிரசாத் படத் தொகுப்பு செய்ய, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெட்ரிகோ கியூவா சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

பிரேக் அப் ஆன நிலையிலும் காதலிக்கு ஏற்பட்ட துயரத்தைத் தாங்க முடியாமல், கடல் கடந்து போய் முன்னாள் காதலன் அவளை எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

இந்த வித்தியாசமான கதைக் கருவை வைத்துக் கொண்டு அறிமுக நாயகனை நடிக்க வைத்து, கொடுத்த பட்ஜெட்டில் ஹை கிளாஸ் டைப்பில் படத்தைக் கொடுத்திருக்கிறார் ஸ்டைலிஷ் இயக்குநரான விஷ்ணுவர்த்தன்.

அர்ஜுன் என்ற ஆகாஷ் முரளி கல்லூரியில் படிக்கும்பொழுது அதிதி சங்கரை தீவிரமாக விரட்டி, விரட்டி காதலிக்கிறார். அதிதி சங்கருக்கு முதலில் இவரைப் பிடிக்காமல் போனாலும் பின்பு சினிமா காதல்போல மெல்ல, மெல்ல அவரது வலையில் விழுகிறார்.

ஆகாஷ் முரளிக்கோ தன் காதலி எப்போதும் தன் பேச்சை மட்டுமே கேட்க வேண்டும். தன்னுடனேயே இருக்க வேண்டும் என்ற உணர்வில் இருப்பவர்.

அதிதி சங்கரோ வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும். மிகப் பெரிய அளவுக்கு பெயரையும், புகழையும் சம்பாதிக்க வேண்டும் என்கின்ற மிகப் பெரிய கனவுகளோடு இருப்பவர்.

இருவருடைய வீட்டிலும் இந்தக் காதல் தெரிந்து அவர்களும் பச்சை கொடி காட்டிய பின்பு காதலிக்காகவே பெங்களூருக்கு தன்னுடைய வேலையை மாற்றிக் கொண்டு வருகிறார் ஆகாஷ் முரளி. காதலர்கள் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் அதிதி சங்கருக்கு போர்ச்சுக்கல் நாட்டில் வேலை கிடைத்தவிட தான் போக வேண்டும் என்கிறார்.

ஆகாஷ் முரளியோ தனக்கு இதில் விருப்பமில்லை என்கிறார். மறைமுகமாக அதிதி வெளிநாடு செல்வதை தடுக்கப் பார்க்கிறார் ஆகாஷ்.

இதனால் எழுந்த வாக்குவாதத்தில் தன் காதலைத் தூக்கிப் போட்டுவிட்டு போர்ச்சுக்கல் சென்று விடுகிறார் அதிதி சங்கர்.

அதிதி போர்ச்சுக்கல் சென்ற பின்பு ஆகாஷ் சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் திடீரென்று இரண்டு வருடங்கள் கழித்து அதிதி, போர்ச்சுக்கல் நாட்டில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்படுகிறார்.

இதைப் பற்றி கேள்விப்பட்ட உடனேயே ஆகாஷ், தன்னுடைய வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு உடனடியாக போர்ச்சுக்கல் செல்கிறார்.

அங்கே அதிதி சம்பந்தப்பட்ட கொலை வழக்கினைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்கிறார். முடிவில் அதிதி நிரபராதியென்றும், வஞ்சகமாக இந்தக் கொலை வழக்கில் அவர் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் ஆகாஷூக்குத் தெரிய வருகிறது.

அதிதியை இந்தப் பிரச்சனையிலிருந்து தப்பிக்க வைக்க பெரும்பாடுகிறார் ஆகாஷ் முரளி. இறுதியில் என்ன நடக்கிறது? அதிதி சங்கர் அந்த வழக்கில் இருந்து விடுபட்டாரா..? சிறையில் இருந்து வெளியில் வந்தாரா..? ஆகாஷூம், அதிதியும் இணைந்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் சுவாரசியமான திரைக்கதை.

படத்தின் ஹீரோ, ஹீரோயின் இருவருமே அதிதி ஷங்கர்தான். அவ்வளவு அட்டகாசமாக நடித்திருக்கிறார். ஈர்ப்பாக நடித்திருக்கிறார். அவர் வருகின்ற பிரேம்கள் முழுவதும் அவரையே பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருக்கிறது. அவ்வளவு அழகாக தன்னுடைய நடிப்பை காண்பித்து இருக்கிறார் அதிதி.

அதிலும் படத்தின் துவக்க காட்சிகளில் ஆகாஷ் முரளி தன்னுடைய காதலை அவரிடம் சொல்லும் பொழுது அந்த காதலை அவாய்ட் பண்ணுகின்றவிதமும் அடுத்தடுத்த நிகழ்வுகளை எதிர்கொள்கின்றவிதமும், அதற்காக அவர் சொல்கின்ற பொய்களும், அதற்கு அடுத்து தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றிய அவர் சொல்கின்ற பொழுதெல்லாம் நம்ம வீட்டுப் பிள்ளை போல அதிதி ஷங்கர் நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார்.

போர்ச்சுக்கல்லில் சிறையில் தள்ளப்பட்ட பின்பு தன்னுடைய எதிர்காலத்தை பற்றி அவர் வருத்தப்படுவதும், கடைசியாக தன் காதலன் தன்னை தேடி வந்திருக்கிறார் என்று தெரிந்து துடிக்கும்போதும் நடிப்பில் அனைவரையும் மிஞ்சிவிட்டார்.

ஆகாஷ் முரளிக்கு இது முதல் படம் என்பதால் அவரின் நடிப்பை பற்றி நாம் பட்டிமன்றம் நடத்த வேண்டாம். இப்போது இந்தப் படத்தில்  கேரக்டர்க்கு ஏற்ற நடிப்பையே காண்பித்து இருக்கிறார். இன்னும் அவர் செல்ல வேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது. அவர் தொடர்ந்து பயணிக்க நமது வாழ்த்துக்கள்.

போர்ச்சுக்கல் வழக்கறிஞராக கல்கி கோச்லின் நடித்திருக்கிறார். அந்த நாட்டுக்கு தகுந்த மாதிரியும் இருக்க வேண்டும். அதேபோல் தமிழும் பேச வேண்டும் என்பதனால் அவரை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். ஆகாஷின் நண்பர்களாக நடித்தவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

படத்தின் பிற்பகுதியில் படத்தை தாங்கி படித்திருக்கும் மூன்று பேர், சரத்குமார், குஷ்பூ, கடலோரக் கவிதைகள் ராஜா. அதிலும் குஷ்பூ பின்னி எடுத்துவிட்டார்.

அந்தக் கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் குஷ்புவின் அந்த ஆக்ரோச நடிப்புதான் இந்தப் படத்தின் நல்லதொரு தன்மையை நம் மனதிற்குள் புகுத்திவிட்டது. கங்கிராட்ஸ் குஷ்பூ மேடம்.

சரத்குமாருக்கு ஒரு கெத்தான ஒரு ரோல். அதேபோல் அவருக்குத் துணையாக வரும் ராஜாவுக்கும் அதே போன்ற ஒரு மிகப் பெரிய பணக்கார கேரக்டர். இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்து செல்லும் பிரபு, நம்முடைய தமிழ் சினிமாவுக்காகவே திணிக்கப்பட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர்  சென்னை, பெங்களூருவின் அழகைவிடவும் போர்ச்சுக்கல்லின் அழகை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார். அந்த அழகைப் பார்க்கின்ற பொழுது ஒரு எட்டு பொய் பார்த்து விட்டு வந்து விடலாமா என்ற ஆசை நமக்கும் வருகிறது.

அதேபோல் அதிதி ஷங்கரையும், ஆகாஷையும் மிக அழகாக காட்டியிருக்கிறார். எந்தக் கோணத்தில்  அவர்கள் சிறப்பாக இருப்பார்களோ, அந்தக் கோணத்திலேயே காண்பித்திருக்கிறார். பாராட்டுக்கள்.

இசையமைத்திருக்கும் யுவன் சங்கர் ராஜா பழமையான இசையை அமைத்திருக்கிறார். அவர் பாடல்கள் திரையில் ஒலிக்கின்றன. காதுகளில் சில வரிகள் மட்டுமே நமக்கு புரிந்தன. பின்னணி இசையில் ரசிக்க வைத்திருக்கிறார்.

படத்தில் காஸ்டியூம் டிசைனிங் செய்திருக்கும் அணுவர்த்தனையும் பாராட்ட வேண்டும். அதிதி ஷங்கரின் அத்தனை உடைகளும் அட்டகாசம். அதேபோல் சரத்குமார், குஷ்பூ, ராஜா மற்றையவர்களின் உடையும் கச்சிதமாக இருக்கிறது.

சண்டை இயக்குநர்தான் இந்தப் படத்தில் மிகப் பெரிய டேமேஜ் பார்ட்டி என்றே சொல்லலாம். இவ்வளவு சொதப்பலாக சண்டை காட்சியை ஏன், எப்படி அமைத்தார்கள் என்று தெரியவில்லை. மிக, மிக ரொம்பவும் மெதுவான சண்டை காட்சிகளாக அமைந்துவிட்டது. ஆகாஷின் முதல் படம் என்பதால் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போய்விட்டார்களோ, என்னவோ தெரியவில்லை. ஆனால், இன்னும் கொஞ்சம் பரபரப்பாக சண்டை காட்சிகளை படமாக்கி இருக்கலாம்.

படத் தொகுப்பாளர் இன்னும் கொஞ்சம் மனம் வைத்திருந்தால் இந்தப் படத்தின் கடைசி காட்சிகளை இன்னமும் ஒரு பரபரப்பு உணர்வோடு நம்மைப் பார்க்க வைத்திருக்கலாம். அதிலும், பேருந்தை கடத்தி மாணவர்களை துப்பாக்கி முனையில் கடத்தி வைத்திருக்கும் அந்தக் காட்சி நம் மனதில் ஒட்டவே இல்லை என்பது வருத்தமான விஷயம். ஓட்டுகின்ற அளவுக்கு கொஞ்சம் படத் தொகுப்பாளர்  காட்சிகளை நறுக்கி தந்திருக்கலாம்.

இந்தப் படத்தில் இருக்கின்ற மிகப் பெரிய பிரச்சனையே காதலர்களுக்கு இடையில் இருக்கின்ற நட்பும், காதலும்தான்.

அது உண்மையாக காதல் என்றால் அடுத்து கல்யாணத்தில் போய் முடிய வேண்டும். அதுதான் உண்மையான காதலாக இருக்க முடியும். ஆனால், நோக்கமே இல்லாமல் காதலித்துவிட்டு எதை நோக்கி நகர்கிறோம் என்பதே தெரியாமல் காதலர்கள் இருவரும் என்னென்னமோ பேசுகிறார்கள்.

ஒரு வரி வசனத்தில் சொல்ல வேண்டிய விஷயத்தை நேருக்கு நேராக சொல்லாமல் ஜிலேபி சுற்றுவதைபோல வசனத்தை இழுத்துக் கொண்டே போய் மாறி, மாறி இருவரும் பேசிக் கொள்வதும், திட்டிக் கொள்வதும் நமக்கே சலிப்பாக இருக்கிறது.

அதிதி ஷங்கர் போர்ச்சுக்கல் செல்வது தனக்குப் பிடிக்கவில்லை என்பதை ஆகாஷ் சுற்றி வளைத்தே சொல்கிறார். அவர் அதை சுற்றி சுற்றி சொல்வதையே அதிதி ஷங்கரும் சுற்றிச் சுற்றி பதில் சொல்கிறார். இதுவே நமக்கு மிகவும் போர் அடித்த காட்சியாகிவிட்டது. நறுக்கென்று வசனங்கள் இருந்திருக்க வேண்டும்.

படம் பார்க்க வருபவர்களில் தரை டிக்கெட்டு மக்களும் இருக்கிறார்கள். பத்து ரூபாய் டிக்கெட்டில் வருபவர்கள், 20 ரூபாய் டிக்கெட் வருபவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் புரிவதுபோல எழுத வேண்டும். பேசப்பட்டிருக்க வேண்டும். எழுதப்பட்டிருக்க வேண்டும்.

இது எதுவுமே செய்யாமல்விட்டால் படம் பார்த்துவிட்டு வெளியில் வருபவர்கள், வெளியில் ஏற்கனவே நின்று கொண்டிருப்பவர்களிடம் படம் பற்றி என்ன சொல்வார்கள்..?

மேலும் கூடுதல் இவலச இணைப்புப் பிரச்சினையாக அளவுக்கு அதிகமான ஆங்கில வசனங்களை வைத்திருக்கிறார் இயக்குநர். இதுவும் தவறாகப் போய்விட்டது. ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே இனிமேல் தமிழ் சினிமாவை பார்க்க வேண்டும்போல் இருக்கிறது. இது மாதிரியான சின்னச் சின்னப் பிரச்சனைகளை களைந்திருக்கலாம்..!

நேசிப்பாயா – காதலர்களை நேசிக்க வைக்கும்..!

RATING : 3 / 5

Our Score