full screen background image

முத்தக் காட்சிக்கு மறுப்பு சொன்ன ஹீரோ..!

முத்தக் காட்சிக்கு மறுப்பு சொன்ன ஹீரோ..!

இயக்குநர் முரளி கிருஷ்ணா  ‘மிரண்டவன்’  படத்தை அடுத்து  ‘நேர்முகம்’ என்னும் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை ஹைடெக் பிக்சர்ஸ் சார்பாக ரஃபி தயாரிக்கிறார்.

ஹீரோவாக ரஃபியே நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீரா நந்தனும், மீனாட்சியும்  நடிக்கின்றனர். மீரா நந்தன் வெகு நாட்களுக்குப் பிறகு இப்படத்தின் கதையில் ஈர்க்கப்பட்டு நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் பாண்டியராஜன், ஜின்னா, சிசர் மனோகர், நெல்லை சிவா மற்றும் பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – ஜெகதீஷ் V. விஸ்வம்,  எடிட்டிங் –  வில்சி, தயாரிப்பு  நிர்வாகம் –தேனி  எஸ் முருகன், தயாரிப்பு: ஹைடெக் பிக்சர்ஸ், பாடல்கள், இசை, எழுத்து, இயக்கம் – முரளி கிருஷ்ணா.

மனிதர்கள் மன ரீதியாக பாதிக்கப்படும் விஷயங்களை சொல்லும் படம்தான் இந்த ’நேர்முகம்’.  அப்படி பாதிக்கப்பட்டவர்கள் தீர்வுக்காக  எங்கு செல்கிறார்கள்..? அவர்களுக்கு என்ன நேர்கிறது..? என்பதை  காதல், செண்டிமெண்ட், த்ரில்லர், ஆக்‌ஷன், கிளாமர் கலந்து செம கமர்ஷியல்  மசாலாவாக உருவாகி வருகிறது இந்தப் படம்.

இளைஞர்களையும், காதலர்களையும் டார்கெட் வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் குடும்பங்களையம் சுண்டி இழுக்குமாம்.

ஏழு ஜோடிகள் காட்டுக்குள் மாட்டிக் கொண்டு தப்பிக்க போராடுவதை வித்தியாசமான முறையில் படமாக்கியுள்ளார் இயக்குநர் முரளி கிருஷ்ணா. காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் ஜோடிகளாக ரஃபியும், மீனாட்சியும் நடித்துள்ளனர்.

அவர்கள் இருவரும் அடர்ந்த காட்டுக்குள் இக்கட்டான சூழலில் மாட்டிக் கொள்ள அதிலிருந்து தப்பிக்க ஒரு பெரிய போராட்டமே நடத்துகின்றனர். அந்த வாழ்வா சாவா நிமிடங்களில் ஒரு அழுத்தமான முத்தக் காட்சி இருந்தால் நன்றாக இருக்குமென இயக்குனர் முரளி கிருஷ்ணா முடிவெடுத்தார்.

இந்த இடத்தில் வைக்கப்படும் லிப் லாக் காட்சி சத்தியமாக விரசமாக இருக்காது என்று ஹீரோயின் மீனாட்சியிடம் உறுதிமொழி தர.. “காட்சிக்குத் தேவைப்பட்டால் கழுத்தை வெட்டிக்கூட வீசுவேன்…” என மீனாட்சி ஒப்புதல் அளித்தாராம்.

ஆனால் ஹீரோதான் அரண்டு போய், “ஸார் லிப் லாக்கா? ஆளை விடுங்க.. எப்படியாவது இதை இல்லாமல் பாத்துக்கோங்க..” என்று மறுத்திருக்கிறார். ஆனால் இயக்குநர் ஹீரோவிடம் மல்லுக்கட்ட.. ஹீரோவோ, “சார் நான் கல்யாணமானவன், வீட்ல டைவர்ஸ்வரைக்கும் போயிடுவாங்க. படத்துல  நடிக்கணும் என்பது என் கனவு.. அதனாலத்தான் நானே தயாரித்து, நடிக்க வந்திருக்கேன். பத்தாவது மாடியிலிருந்து குதிக்கச் சொல்லுங்க… குதிக்கிறேன். தயவு செய்து இது மட்டும் வேணாமே..” என்றாராம் கெஞ்சலாக.

தயாரிப்பாளரே ஹீரோதான் என்பதால் இயக்குநர் வேறு வழியில்லாமல், அந்த முத்தக் காட்சியை வேறு ஜோடிக்கு மாற்றி ஷூட் செய்து முடித்தாராம்.

பொழைக்கத் தெரியாத ஹீரோவா இருக்காரே..?

Our Score