“இப்போதான் உங்களை உசிரோட பார்க்குறேன்..” – பாண்டியராஜனை அதிர்ச்சியடைய வைத்த ரசிகர்..!

“இப்போதான் உங்களை உசிரோட பார்க்குறேன்..” – பாண்டியராஜனை அதிர்ச்சியடைய வைத்த ரசிகர்..!

‘​பார்வை ஒன்றே போதுமே’ முரளி கிருஷ்ணா இயக்கி, இசையமைக்க, ஹை டெக் பிக்சர்ஸ் சார்பில் ரஃபி தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள ‘நேர்முகம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

DCIM (79)

பாடல்கள் குறுந்தகட்டை நடிகை நமீதா வெளியிட நடிகர் பாண்டியராஜன் பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர்கள் ஜின்னா, சுரேஷ் காமாட்சி, நடிகைகள் நமீதா, மீரா நந்தன், நடிகர்கள் பிரஜின், கூல் சுரேஷ் உள்பட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

விழாவில் நடிகர் பாண்டியராஜன் பேசும்போது, “என்னுடைய முதல் படமான ‘ஆண்பாவம்’. தயாரானவுடனே விநியோகஸ்தர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டுனோம். அப்போ ஒருத்தர் நேரா என்கிட்ட வந்து, ‘எல்லாம் நல்லாத்தான்யா இருக்கு. ஆனா நீ ஏன்யா நடிச்ச?’ன்னார்.. எனக்கு பகீர்னு ஆயிருச்சு. வேற வழியில்லாம தயாரிப்பாளர் தன்னோட சொத்தையெல்லாம் வித்துதான் அந்தப் படத்தை ரீலீஸ் பண்ணினார்.

பல்லாவரத்துல படம் ஓடுற தியேட்டருக்குப் போயிருந்தேன். மொத்தமே 20 பேர்தான் தியேட்டர்ல இருந்தாங்க. ஓப்பனிங்கே சரியில்லையேன்னு நினைச்சேன். வீட்டுக்கு வந்து எங்கம்மா மடியில படுத்துட்டு ‘என் படத்தை நானே நடிச்சுக் கெடுத்திட்டேன்மா’ன்னு சொல்லி அழுதேன். தயாரிப்பாளர் மனசுக்குள்ள அழுதார்.

அன்னைக்கு நைட் ஷோ.. அபிராமி தியேட்டர்ல இருந்து என் அஸிஸ்டெண்ட் போன் பண்ணான். ‘அண்ணே, நம்ம படத்துக்கு வெளில நல்ல டாக்குண்ணேனான்..’ ‘அந்த ‘டாக்’கை நான் காலைலேயே பல்லாவரத்துலயே பாத்துட்டனே’ன்னு சொன்னேன். அவன் மேனேஜர்கிட்ட போனைக் கொடுத்து பேசச் சொன்னான். ‘கூட்டம் எப்டி இருக்கு’ன்னு கேட்டேன். ‘ஹவுஸ்ஃபுல்’னு சொன்னார்.

‘நம்ம படத்துக்கு வந்த கூட்டம் இல்ல, ‘படிக்காதவன்’ படத்துக்கு வந்த கூட்டம், டிக்கெட் கிடைக்காம நம்ம படம் பாக்கிறாங்க’ன்னு சொன்னார். உடனே கிளம்பி அபிராமி தியேட்டர் போனேன். படம் பார்க்க வந்த கூட்டத்துல ஒருத்தர், ‘ஏய், நீதான இதுல நடிச்சிருக்க’ன்னு கேட்டார். ‘ஆமா’ன்னு தலையாட்டினேன். ‘ஒரு கையெழுத்து போட்டுக் குடு’ன்னார். போட்டுக் குடுத்தேன்.

இதை ஏன் சொல்றேன்னா.. இந்த ‘நேர்முகம்’ படத்துல நிறைய புதுமுகங்கள் இருக்காங்க. இந்த வாய்ப்பு முக்கியமில்லை. இதுக்கப்புறம் அவங்க சந்திக்கப் போற விசயங்கள்தான் முக்கியம். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்வாங்க. நேரடியாவே ‘நீ காலி அப்படி’ன்னு பேசுவாங்க. எதையும் மனசுல ஏத்திக்காம உங்க வேலையை மட்டும் கரெக்டா செய்யுங்க. கண்டிப்பா ஜெயிக்கலாம்.

சமீபத்துல சிங்கப்பூர் போயிருந்தேன். அங்க லிப்ட்ல என்னைப் பார்த்த ஒரு தமிழர், ‘இப்போதான் உங்களை உயிரோட பாக்கிறேன்’னார். அவர் சொல்ல வந்த விசயம் என்னன்னா, ‘திரையில் உங்களை பாத்திருக்கேன், இப்போத்தான் நேர்ல பாக்கிறேன்’ அப்டிங்கிறதுதான். ஆனா, அந்த நிமிட பரபரப்புல அவருக்கு அதை எப்படி சொல்றதுன்னு தெரியல.

அதே மாதிரி, இன்னொருத்தர், ‘ஏன்ம்பா இப்போ உள்ள படங்கள்ல பார்க்க முடியலையே, ரொம்ப நாளா நீ நடிக்கலையா?’ன்னார். ‘கடைசியா எப்போ படம் பாத்தீங்க?’ன்னு கேட்டேன். ‘பத்து வருசம் இருக்கும்’னார். அவர் சொல்ல வந்த விசயம் என்னன்னா, ‘நீ நடிக்கிறது எனக்கு பிடிக்கும்… நெறைய படங்கள்ல நடி’ன்னு அப்டிங்கிறதுதான். அதை அவர் ஸ்டைல்ல சொல்லிட்டார்.

யார் என்ன சொன்னாலும் இதே, நமக்கு நாமே டப்பிங் பண்ணி பாத்துக்க வேண்டியதுதான். ‘நேர்முகம்’ படம் பெரிய அளவில் வெற்றி பெற என் வாழ்த்துகள்..” என்றார்.