full screen background image

நெஞ்சில் துணிவிருந்தால் – சினிமா விமர்சனம்

நெஞ்சில் துணிவிருந்தால் – சினிமா விமர்சனம்

இந்த படத்தில் சந்தீப் மற்றும் விக்ராந்த் கதாநாயகர்களாகவும், மெஹ்ரீன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சூரி, அப்புக்குட்டி, ஹரிஷ் உத்தமன், ஷாதிகா, வினோத் கிஷன், மகேந்திரன், அருள்தாஸ், திலீபன், போராளி திலீபன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் சுசீந்திரன் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி படத்தை இயக்கியுள்ளார். பாடல்களை வைரமுத்து, யுகபாரதி மற்றும் மதன் கார்க்கி எழுத, டி.இமான் இசையமைத்துள்ளார். ஜே.லட்சுமண் ஒளிப்பதிவு செய்ய, மு.காசி விஸ்வநாதன் படத் தொகுப்பு செய்துள்ளார். அன்னை பிலிம் பேக்டரி சார்பாக தயாரிப்பாளர் ஆண்டனி தயாரித்துள்ளார்.

நெஞ்சில் துணிவிருந்தால் யாரையும் எதிர்த்து நின்று போராடி வெற்றி பெறலாம் என்பதை இந்தப் படத்தின் மூலமாய் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

ஹீரோ சந்தீப் படித்தது எம்.பி.ஏ. என்றாலும் தனது நண்பர்களான விக்ராந்த், அப்புக்குட்டி, சூரி இவர்களுடன் இணைந்து கேட்டரிங் கம்பெனியை நடத்தி வருகிறார்.

சந்தீப்பின் தந்தையான டி.சிவா சாதாரண ஒரு ஆபரேஷனுக்காக மருத்துவமனைக்குச் செல்கிறார். ஆனால் அங்கே போலி மருத்துவர்களால் ஆபரேஷன் செய்யப்பட்டு பரிதாபமாக உயிரிழக்கிறார். இதனால் கோபமடையும் சந்தீப் அந்த மருத்துவமனையையும், மருத்துவர்களையும் கோர்ட்டுக்கு இழுத்து அவர்களுக்கு தண்டனை வாங்கித் தருகிறார்.

எம்.பி.பி.எஸ். மருத்துவரான சந்தீப்பின் தங்கை ஷாதிகா எம்.டி. மேற்படிப்புக்கு விண்ணப்பித்திருக்கிறார். ஷாதிகாவை விக்ராந்த் காதலிக்கிறார். ஆனால் இந்த விஷயம் சந்தீப்புக்கும், அவரது தாயாரான துளசிக்கும் தெரியாது. துளசிக்கு விக்ராந்தை பிடிக்கவே பிடிக்காது. 

கந்துவட்டிக்காரனான அருள்தாஸ் ஒரு விஷயத்தில் சந்தீப்பைத் தாக்க.. இதையறியும் விக்ராந்த் ஓடி வந்து அருள்தாஸை பொளந்து கட்டுகிறார். இதனால் கந்துவட்டிக்காரக் கும்பல் இந்த நண்பர்கள் மீது கொலை வெறியோடு இருக்கிறது. ஆனால் சந்தீப் வந்து மன்னிப்பு கேட்டு, அப்போதைக்கு பிரச்சினையை முடித்து வைக்கிறார்.

சென்னையில் கூலிக்கு படுகொலை செய்யும் தொழிலைச் செய்து வரும் துரைப்பாண்டி என்னும் ஹரீஷ் உத்தமனிடம் ஒரு மிகப் பெரிய வேலை வருகிறது. இந்த வேலைக்காக விக்ராந்தையும், சந்தீப்பின் தங்கையான ஷாதிகாவையும் கொலை செய்ய ஸ்கெட்ச் போடுகிறார்கள் ஹரீஷின் ஆட்கள்.

இவர்களை கொலை செய்யப் போகும்போது எதிர்பாராமல் சந்தீப், தன் தங்கை ஷாதிகாவுடன் வந்துவிட கொலை செய்யாமல் திரும்பிப் போகிறார்கள் ஹரீஷ் உத்தமனின் ஆட்கள்.

இந்தக் கொலை முயற்சியில் ஏதோ சதி இருக்கிறது என்பதை உணரும் சந்தீப், இது பற்றி விசாரிக்கத் துவங்க.. அவருடைய தங்கையின் காதல் கதை வெளிச்சத்துக்கு வருகிறது.

ஹரீஷின் கும்பலிடமிருந்து இப்போதைக்கு விக்ராந்தை காப்பாற்ற வேண்டி அவரை பொய்ப் புகாரின் அடிப்படையில் சிறைக்கு அனுப்புகிறார் சந்தீப். இதனால் தனது நண்பர்களிடமும், தங்கையிடமும் கெட்ட பெயரைச் சம்பாதிக்கிறார் சந்தீப்.

இதனால் கோபம் கொண்ட சந்தீப்பின் நண்பர்கள் சந்தீப்புக்கு தெரியாமலேயே விக்ராந்த்-ஷாதிகா திருமணத்தை ஏற்பாடு செய்கிறார்கள். அதே நேரம் ஷாதிகாவையும், விக்ராந்தையும் கொலை செய்ய ஹரீஷின் ஆட்களும் தீவிரமாக முனைகிறார்கள். இந்தக் கொலைச் சம்பவத்தில் இருந்து தனது தங்கையையும், விக்ராந்தையும் காப்பாற்ற நினைக்கிறார் சந்தீப்.

ஹரீஷின் ஆட்கள் ஏன் விக்ராந்தையும், ஷாதிகாவையும் கொலை செய்ய முயல்கிறார்கள் என்பதுதான் படத்தின் மிக, மிக முக்கியமான திரைக்கதை. இதை அவர்களால் செய்ய முடிந்ததா, இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை.

சந்தீப் ஏற்கெனவே ‘மாநகரம்’ படத்தில் நடித்திருப்பதினாலும், அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு வரும் அடுத்த படம் இது என்பதாலும் அந்த வியாபாரத்திற்கேற்றவாறுதான் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

சந்தீப்புக்கென்று தனி ஸ்டைலை அவர் இனிமேல் உருவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற ஹீரோவாக வலம் வருவதற்கு இன்னும் பல படிகளைத் தாண்டியாக வேண்டும். இதையும் அவர் மனதில் வைத்துக் கொண்டால் நலம்.

ரொமான்ஸ் காட்சிகளே இல்லாத நிலையில் சாதாரணமாக எப்போதும்போலவே வசனம் பேசி நடித்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் ஆக்சன் பிரியர்களுக்கு பிடித்தாற்போல் நடித்திருக்கிறார் சந்தீப். நண்பனுக்காக அம்மாவிடம் வாதாடும் காட்சியிலும், இறுதியில் அதையே மெல்ல கூறி துளசியின் மனதை மாற்றும் காட்சியிலும் இயல்பாகவே நடித்திருக்கிறார் சந்தீப். ஆனால் இதுவே போதுமானதல்ல என்பதுதான் ரசிகனின் எண்ணம்.

விக்ராந்தும், ஹரீஷ் உத்தமனும்தான் படத்தில் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். விக்ராந்துக்கு உண்மையாகவே இதுவொரு நல்ல படம்தான். ஏன், எதற்கு என்றுகூட கேட்காமல் அருள்தாஸை அடித்துவிரட்டுவிட்டு பின்பு காரணம் கேட்கும் தொனியும், நண்பனுக்குத் துரோகம் செய்கிறோம் என்ற குற்றவுணர்ச்சியில் தங்களது காதலை சந்தீப்பிடம் சொல்லிவிடும்படி ஷாதிகாவிடம் சொல்லும் காட்சியிலும் பளிச்சிடுகிறார்.

ஹரீஷ் உத்தமன் மனிதாபிமானம் இல்லாத வன்முறையாளன் என்பதை தான் ஏற்றுள்ள கனமான பாத்திரத்தின் மூலமாய் காட்டியிருக்கிறார். கிடைக்கின்ற வேடங்களில் நடிக்காமல், தனக்கேற்ற வேடங்களில் நடிப்பதே சாலச் சிறந்த்து என்பதை புரிந்து கொண்ட  நடிகர். மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.

நாயகியான மெஹ்ரீனுக்கு இதுதான் முதல் தமிழ்ப் படம் என்பதால் மறப்போம்.. மன்னிப்போம்.. இவர் அறிமுகமாகும் தேர்வு அறைக் காட்சி மிக சுவையானது. பிட் அடிப்பது எப்படி என்பதை படத்தின் ஹீரோயின் சொல்லித் தருவதும், ஹீரோ புரியாமல் விழிப்பதும் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அம்மணிக்கு தமிழ் உச்சரிப்பு தகிரத்தாளம் போடுவதை உணர முடிகிறது. டப்பிங் குளறுபடிகளால் ஹீரோயின் பேசும் பேச்சுக்களில் தொய்வு ஏற்பட்டுள்ளதை இயக்குநரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

சூரி ஒரேயொரு காட்சியில் மொத்த தியேட்டரையும் கவர்ந்திழுத்திருக்கிறார். டாஸ்மாக் பாரில் தனது மனைவியுடன் போனில் பேசுவதற்காக அவர் செய்யும் முஸ்தீபுகள் படா காமெடி.  ஒரு நிஜமான அம்மாவை பிரதிபலித்திருக்கிறார் துளசி. ஆனால் விக்ராந்தை வெறுக்கும் திரைக்கதையில் உண்மையான காரணம் தெரியவில்லை. ஷாதிகாவும் அசத்தலாக நடித்திருக்கிறார். 

தேவையில்லாத கேரக்டராக இருக்கே என்று எண்ணியபோது போராளி திலீபன் கடைசி நிமிடத்தில் வந்து திரைக்கதையில் டிவிஸ்ட் செய்திருக்கிறார். திலீபன் தனது மனைவியுடன் போட்ட சண்டைக்காக தற்கொலைக்கு முயல்வதும், அவரை ஹீரோ நைச்சியமாக பேசி காப்பாற்ற முயல்வதும் திரைக்கதையில் ஹீரோயினுக்கும், ஹீரோவுக்குமான லவ் போர்ஷனுக்கு உதவியிருக்கிறது.

திரைக்கதை இடைவேளைக்கு பின்பு ரொம்பவே எளிதான ரூட்டில் செல்வதும், யூகிக்க முடிந்த அடுத்தடுத்த திரைக்கதையும்தான் படத்தின் மைனஸ் பாயிண்ட்டுகள். சந்தீப்பின் அப்பா போலீஸ்காரர் என்பதாலேயே அந்த இன்ஸ்பெக்டர் சந்தீப் இழுத்த இழுப்புக்கெல்லாம் உடன் ஓடி வருகிறார் என்பதெல்லாம் டூ மச்சான திரைக்கதை.

அதேபோல் குற்றவாளிகளை கண்டுபிடிக்கக்கூட இருவரும் தனியே செல்வதெல்லாம் அதிகமான ஹீரோத்தனம். சந்தீப்பையே இதில் போலீஸாக்கியிருக்கலாமே..? என்ன தப்பு இயக்குநரே..?

அதிகமாக இரவு நேரக் காட்சிகளே படத்தில் இடம் பிடித்திருப்பதால் ஒளிப்பதிவாளர் ஜே.லட்சுமணனின் கைவண்ணத்தில் படம் ஜொலிக்கிறது. கிளைமாக்ஸின் சண்டை காட்சியின் உக்கிரமத்தைத் தாங்காமல்தான் ‘U/A’ சர்டிபிகேட் கிடைத்திருக்கும்போல. அந்தச் சண்டை காட்சியை படமாக்கியிருக்கும்விதம் சூப்பர்ப்.

டி.இமானின் இசையில் எது அறம் என்பதற்கான விளக்கவுரை பாடலாக வைரமுத்துவின் வைர வரிகளில் ஒலிக்கும் பாடல் யோசிக்க வைக்கிறது. ‘பாம்பு கொத்த வரும்போது செய்யும்கொலைகூட அறம்தான்’ என்கிறார் கவிஞர். உண்மைதானே..? அதைத்தான் இந்தப் படத்தில் ஹீரோவும் செய்கிறார். ‘ரயில் ஆராரோ’, ‘எச்சச்சோ எச்சச்சோ’ பாடல்களும் கவர்கின்றன. பாடல்களைவிடவும் பாடல் காட்சிகளை படமாக்கியவிதமும்கூட அழகுதான்.

சில வருடங்களுக்கு முன்பு புதுதில்லியின் அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் மருத்துவமனையில் எம்.டி. மருத்துவம் படித்த சரவணன் என்ற தமிழகத்து மாணவன் திடீரென்று மர்ம்மான முறையில மரணமடைந்தார்.

அவரது மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்குக்கூட உத்தரவிட்டும் விஷ ஊசி போடப்பட்டு இறந்து போயிருக்கிறார் என்பதை மட்டுமே விசாரணையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் அந்த ஊசியை போட்டது யார் என்பது இப்போதுவரையிலும் தெரியவில்லை.

காரணம், எம்.டி. சீட்டுக்காக நாடு முழுவதிலும் இருக்கும் எதிர்பார்ப்புதான். சரவணன் இறந்தால் அந்த சீட்டில் வேறு ஒரு மாணவரை இடம் பிடிக்க வைக்கத்தான் இந்த படுகொலை என்று அகில இந்திய பத்திரிகைகள் அனைத்திலும் செய்திகள் வெளியாகின. இதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய டர்னிங் பாயிண்ட் கதை.

மருத்துவப் படிப்பும் லஞ்சம், ஊழல் பட்டியலில் அடுத்தவொரு நிலையான இடத்தைப் பிடித்துவிட்டது. அரசு காண்ட்ராக்டுகளுக்காக கொலை செய்பவர்களெல்லாம் இப்போது மருத்துவ சீட்டுக்களுக்காக கொலை செய்ய துவங்கிவிட்டதுதான் இந்தியாவின் தற்போதைய நிலைமை. இதனை இந்தப் படத்தின் மூலமாய் சொல்லியிருக்கும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

சந்தீப் தனது தங்கையை கொலை செய்ய ஏற்பாடு செய்தவரிடம் கேட்கும் கேள்விகளெல்லாம் சாதாரண ஒரு பொது ஜனம், இவர் போன்ற பணக்காரர்களிடத்தில்  கேட்க நினைக்கும் கேள்விகள்தான். நமக்காக இயக்குநர் கேட்டிருக்கிறார்.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ சமூக அக்கறையோடு, இயக்குநர் சுசீந்திரனின் தெளிவான பார்வையோடு வந்திருக்கும் ஒரு படம். பார்க்கலாம்தான்..!

Our Score