full screen background image

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசுகிறது..!

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசுகிறது..!

அன்னை பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் ஆண்டனி தயாரித்துள்ள திரைப்படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.

இந்தப் படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மேஹ்ரின், துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சூரி, அப்புக்குட்டி, ஹரிஷ் உத்தமன், சாதிகா, வினோத் கிஷன், மகேந்திரன், அருள்தாஸ், திலீபன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் பாடல்களை வைரமுத்து, யுகபாரதி மற்றும் மதன் கார்க்கி எழுத, டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் காட்சிகளை ஜே.லட்சுமண் ஒளிப்பதிவு செய்ய, மு.காசிவிஸ்வநாதன் படத் தொகுப்பு செய்த்துள்ளார். அன்னை பிலிம் பாக்டரி சார்பாக தயாரிப்பாளர் ஆண்டனி தயாரித்துள்ளார். இயக்குநர் சுசீந்திரன் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் வரும் நவம்பர் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்காக சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் சுசீந்திரன், ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் பற்றியும் தனது திரையுலக வாழ்க்கை பற்றியும் நிறையவே பேசினார்.

director suseendhiran

“இந்தப் படம் முற்றிலும் என்னுடைய பாணியில் அமைந்ததாகவே இருக்கும். என்னுடைய அனைத்து படங்களிலும் ஒரு சமூக நீதி இருக்கும். ‘ராஜபாட்டை’ ஒரு தோல்வி படமாக இருந்தாலும் அதில் ஒரு சமூக அக்கறை இருக்கும். ‘மெர்சல்’ படத்தில் இருக்கும் சமூக அக்கறை கொண்ட செய்தியை போன்று இந்த ‘நெஞ்சில் துணிவிருந்தால்’  படத்திலும் ஒரு அழுத்தமான சமூக அக்கறை கொண்ட செய்தி உள்ளது.

நட்பு என்பது இருவரின் புரிந்து கொள்ளும் பண்பு என்பதைச் சொல்ல வரும் படம் இது. ஆனால் இது வெறும் நட்பை பற்றி மட்டுமே பேசும் படம் அல்ல. அதையும் தாண்டி இப்போது தமிழகத்தில் நிலவி வரும் ஒரு முக்கியமான சமூக பிரச்சினை பற்றி இந்தப் படம் பேசுகிறது.

படம் பேசவிருக்கும் ‘அந்த’ சமூக விஷயம் நிச்சயமாக நமது வெகுஜன மக்களை கவரும். சமூக அவலத்தை அம்பலப்படுத்தும் அதே வேளையில், இதுவொரு பக்க கமர்ஷியல் படமும்கூட.

nenjil thunivirunthaal movie stills

இப்படத்தின் ஹீரோவான சந்தீப் மிக நல்ல மனிதன் என்பது மட்டுமல்ல; சிறந்த ஞாபக சக்தியும் கொண்டவர். தமிழோ, தெலுங்கோ எவ்வளவு பெரிய வசனம் என்றாலும், உடனே மனப்பாடம் செய்து அதைச் சரியாகப் பேசி சிறப்பாக நடிப்பார்.

ஒரு நடிகன் டயலாக்கை எளிதாக பேசிவிடலாம். ஆனால் அவர் நடிப்பின் மூலமாகவும் அனைவரையும் கவர வேண்டும். சந்தீப் அதையும் செய்கிறார். இந்தப் படத்தில் அவருடைய நடிப்புக்கு நிச்சயமாக நல்ல பெயர் கிடைக்கும். தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்குப் பிறகு பி மற்றும் சி செண்டர் நாயகனாக சந்தீப் வருவார் என்று நம்புகிறேன்.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள பிரியப்படுகிறேன். ‘தமிழரான நீங்கள் ஏன் தெலுங்கு ஹீரோவை போட்டு படம் எடுக்கிறீர்கள்?’ என்று ட்விட்டரில் சிலர் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். சந்தீப் இதே சென்னையில் பிறந்து வளர்ந்தவர்தான். அத்துடன் சினிமாவுக்கு மொழி கிடையாது என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

nenjil thunivirunthaal movie stills

அதே போல ஆரம்பத்தில் என்னால் அறிமுகம் செய்யப்பட்ட விக்ராந்தும், இந்தப் படத்துக்குப் பிறகு இன்னும் சிறப்பான இடத்தை அடைவார். படத்தின் போஸ்டர்களில் விக்ராந்தின் முகத்தை காட்டவில்லை என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அப்படி நம்மூர் பையனை பிரதானப்படுத்தினால், தெலுங்கில் படத்தின் முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதால்  தயாரிப்பாளர் அதுபோல் விளம்பரப்படுத்தி வருகிறார். அவ்வளவுதான்.

படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கும் மெஹ்ரீனும் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் தெலுங்கில் ஏற்கெனவே 3 திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தவர். அவைகள் வெற்றி பெற்ற படங்கள்.

இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் எடுப்பதால் தெலுங்கிற்கும் மார்க்கெட்டிற்கு உதவியாக இருக்குமே என்றுதான் இவரை நடிக்க வைத்திருக்கிறேன். அதோடு இவர் இயக்குநரின் நடிகையாக இருக்கிறார்.

nenjil thunivirunthaal movie stills

சில நடிகைகள் மேக்கப் போடவோ, டிரெஸ் மாற்றவோ சென்றால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும். நான் ஒரு நாளைக்கு 4 காட்சிகளையாவது படமாக்க வேண்டும் என்று நினைப்பவன். எனக்கு இது போன்ற நேர விரயங்கள் ஏற்க முடியாதது. இதனாலேயே மெஹ்ரீன் போன்ற உழைப்புக்கு அஞ்சாத நடிகைகளை எனது படங்களில் பயன்படுத்த நினைக்கிறேன்.

நான் இதுவரையிலும் இயக்கிய பத்துப் படங்களில் ஏழு படங்களில் நடித்தவர் சூரி. இந்தப் படத்திலும் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார் சூரி. சூரி என் குடும்ப உறுப்பினர் என்பதால் நான் எந்த கதையை யோசித்தாலும் அதில் சூரிக்கு இந்தக் கேரக்டர் பொருத்தமாக இருக்குமா என்ற யோசனை முன்பே எனக்கு வந்துவிடும். இந்த படத்தில் ஒரு முழு ரோல் பண்ணி இருக்கார்.

இசையமைப்பாளர் இமான் சாரோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். இது நானும், அவரும் இணைந்திருக்கும் ஐந்தாவது படம். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் பாடல்களில் ‘எச்சச்ச’ பாடலும் ‘ரயில் ஆராரோ’ பாடலும் ஹிட்டாகி உள்ளது.

அதே சமயம் யுவனோடு தொடர்ந்து ட்ராவல் பண்ண முடியாமைக்கும் வருந்துகிறேன். ஆனால் அதற்கு காரணம் நானில்லை என்பதை மட்டும் தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.

IMG_6656

என்னுடைய library-ல் ‘வெண்ணிலா கபடி குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’ , ‘ஜீவா’, ‘மாவீரன் கிட்டு’ போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இது போன்ற படங்கள்தான் காலத்திற்கும் நிற்கும்.

புதுமுகங்களை கொண்டு படம் எடுப்பது தானாகவே அமைகின்றது. மிகப் பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தால் அப்படம் வெற்றியடையும்போது  அந்த வெற்றி நடிகரை மட்டுமே சாரும். புதுமுகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி அடையும்போது அந்த வெற்றி அப்படத்தின் இயக்குநரையே சேரும்.

இது விறுவிறுப்பான படமாக இருக்கும்.’ நான் மகான்  அல்ல’, பாண்டியநாடு’ போன்ற படங்களைபோல் கிளைமாக்ஸ் இருக்கும்.

இந்தப் படத்தின் ஹைலைட்டான விஷயம், இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும், சமீபத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்து இதனால் மருவத்துவராக முடியாத காரணத்தினால் தற்கொலை செய்து இறந்து போன அனிதா நினைவுக்கு வருவார்.

இத்தனைக்கும் இது மாதிரியான ஒரு காட்சியை இரண்டு வருடங்களுக்கு முன்பேயே யோசித்து தயார் பண்ணி இருந்தேன். நான் கற்பனையாக எது நடக்கக் கூடாதுன்னு பிரியப்பட்டேனோ, அது இப்போது நடந்துவிட்டதில் எனக்கும் ரொம்ப வருத்தமாகத்தான் இருக்கிறது. இந்தப் படம் அனிதாவை மீண்டும் ஞாபகப்படுத்தும்.

நான் இயக்கிய ‘நான் மகான் அல்ல’ திரைப்படம் எப்படி வெற்றிப் படமாக அமைந்ததோ, அதை போலவே இந்த திரைப்படமும் வெற்றி படமாக அமையும் என்று எனக்கு நம்பிக்கையுள்ளது…” என்றார் உறுதியோடு.

Our Score