full screen background image

பாம்பின் சாகச காட்சிகளுடன் ‘நீயா-2’ திரைப்படம் மே 10-ம் தேதி வெளியாகிறது

பாம்பின் சாகச காட்சிகளுடன் ‘நீயா-2’ திரைப்படம் மே 10-ம் தேதி வெளியாகிறது

1979-ல் நடிகை ஸ்ரீப்ரியாவின் நடிப்பில், இயக்குநர் துரையின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற  படம் ‘நீயா’.

தற்போது ‘நீயா-2’ படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எல்.சுரேஷ்.

‘ஜம்போ சினிமாஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ஸ்ரீதர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஜெய் நாயகனாகவும், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா மூவரும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் பால சரவணன், நிதிஷ் வீரா, லோகேஷ், மானுஷ், சி.எம்.பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – எல்.சுரேஷ், ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன், இசை – ஷபீர், பாடல்கள் – கபிலன், மோகன்ராஜன், பவன் மித்ரா, கு.கார்த்திக், எஸ்.என்.அனுராதா, படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, தயாரிப்பு வடிவமைப்பு – எஸ்.அய்யப்பன், சண்டை இயக்குநர் – ஸ்டண்ட் ஜி.என்.முருகன், நடன இயக்கம் – கலா, கல்யாண், விஜி, சதீஷ், ஸ்ரீகிரீஷ், உடைகள் – பி.ஆர்.கணேஷ், ஒலிக் கலவை – டி.உதயகுமார், சிறப்பு சப்தம் – கே.ராஜசேகர், டிசைன்ஸ் – ரெட் டாட் பவன், ஸ்டில்ஸ் – விஜய், ஒப்பனை – எம்.என்.பாலாஜி, தயாரிப்பு நிர்வாகம் – அஷ்கர் அலி, தயாரிப்பு மேற்பார்வை – பி.சுரேஷ், தயாரிப்பு – ஜம்போ சினிமாஸ், தயாரிப்பாளர் – ஏ. ஸ்ரீதர்.

neeya-2-movie-poster-2

‘நீயா’ படத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்த ‘ஒரே ஜீவன்’ பாடலை இந்தப் படத்தில் மறுஉருவாக்கமும் செய்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமத்தை புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான ‘ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் வாங்கியுள்ளது. இத்திரைப்படம் வரும் மே 10-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ஒரு கரு நாகப் பாம்பு. இந்தப் படமே பாம்பை மையமாக வைத்து உருவாகியிருப்பதால் படத்தில் பாம்பு சம்பந்தப்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகள் மட்டும் சுமார் 40 நிமிடங்கள் இருக்கின்றன.

அந்தப் பாம்பை பற்றியும்,  அது தொடர்பான கிராபிக்ஸ் காட்சிகள் பற்றியும்  கிராபிக்ஸ் நிபுணர் வெங்கடேஷ் கூறும்போது, “தற்போது சின்னத்திரையில் பல தொடர்கள் பாம்பை மையமாக வைத்து வருகிறது. அதனுடைய சாயல் வெள்ளித்திரையில் இருக்கக் கூடாது என்பதற்காகவும், அதற்கு வேறுபட்டும் பிரம்மாண்டமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தோனேசியாவிற்கு சென்று அங்கிருக்கும் கருநாகப் பயிற்சியாளரை சந்தித்து பாம்பைப் பற்றிய தகவல்களை சேகரித்தோம்.

DSC_6657 copy

இந்தியாவில் சுமார் 20 அடி முதல் 28 அடிவரை நீளமுள்ள பாம்புகள்தான் இருக்கும். படத்திற்காக நாங்கள் 25 அடி நீளமுள்ள பாம்பை தேர்வு செய்தோம். கருநாகத்தின் குணாதிசயங்களை பயிற்சியாளரை கொண்டு படம் பிடித்தோம். பயிற்சியாளர் கை நீட்டியதும் இந்தக் கருநாகம் 3 அடி உயரத்திற்கு ஏறியது.

மேலும், இப்படத்தில் கருநாகத்தை நடிக்க வைத்ததற்குக் காரணம் அதன் ஞாபக சக்திதான். நாய்க்கும் இந்த குணம் இருக்கும். தன்னுடைய முதலாளியை அடையாளம் கண்டு பணியும். அதைப் போல் இந்த கருநாகமும் பயிற்சியாளரின் கட்டளைக்கு பணிந்ததை நேரடியாகவே கண்டோம். படத்திலும் அது போன்ற ஒரு காட்சி வருவதால் கருநாகத்தை தேர்ந்தெடுத்தோம்.

பாம்பு வாய் திறக்கும் போது வாயின் உடற்கூறு, பற்கள், அதனுடைய நாக்கை 4 இஞ்ச் அளவிற்கு வெளியே நீட்டும் என்பது போன்ற விஷயங்களைக் காட்டி இருக்கிறோம்.

5T0A8402

கருநாகத்தின் முகம் பெரியதாக இருக்கும் என்பதால் அது ஒரு பொருளை உடைக்கும் அளவிற்கு திறன் கொண்டது. மேலும், மரத்தை சுற்றி கொள்வதுபோல், ஒரு மனிதனை சுற்றிக் கொள்ளும். இது போன்ற விஷயங்களை குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு படத்தில் உபயோகப்படுத்தினோம்.

கதாபாத்திரத்திற்கு தொடர்பு ஏற்படுத்துவதற்காக போலியான பாம்பை வைத்து படப்பிடிப்பு நடத்தினோம். பிறகு அதைக் கொண்டு கிராபிக்ஸ் செய்தோம். அனிமேஷனுக்கு மட்டும் 1 வருடம் 2 மாத காலம் ஆயிற்று.

தயாரிப்பாளர் அதனை புரிந்து கொண்டு எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்ததால்தான் இந்த அளவு தரமானதாக கிராஃபிக்ஸ் செய்ய முடிந்தது.

இயக்குநர் நிஜ பாம்பு போலவே இருக்க வேண்டும் என்று கூறியதால், சில காட்சிகளை கிரீன் மேட் கொண்டு எடுத்தோம்.

பாம்பைத் தவிர அணில், கழுகு, நாய், போன்றவற்றையும் கிராஃபிக்ஸ் செய்திருக்கிறோம். இதற்கெல்லாம் இயக்குநரும், தயாரிப்பாளரும் முழு ஆதரவு கொடுத்தார்கள்…” என்றார் வெங்கடேஷ்.

varalakshmi

இந்த ‘நீயா-2’ படம் பற்றி இயக்குநர் எல்.சுரேஷ் பேசும்போது, “பாம்பிற்காக நாங்கள் பல இடங்களில் தேடி அலைந்து இறுதியாக பாங்காக்கில் உள்ள கோப்ரா வில்லேஜ் என்ற இடத்தில் உள்ள பாம்பைத்தான் தேர்வு செய்தோம். இது எங்களுக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது.

முதலில் நிஜ பாம்பை வைத்து எடுக்கத்தான் முடிவு செய்தோம். ஆனால், அங்குள்ள பாம்பிற்கு ஒரு வார காலம்தான் நிஜ உருவம் இருக்கும். அதற்கு மேல் தோல் உரிவதும். வளர்வதுமாக இருப்பதால் படப்பிடிப்பிற்கு உகந்ததாக இருக்காது என்று கிராஃபிக்ஸ் செய்ய முடிவெடுத்தோம்.

இப்படத்தின் மிகப் பெரிய பலம் திரைக்கதைதான். அதுமட்டுமில்லாமல், பாம்பின் சாகச காட்சிகளும் இருக்கும். மேலும், ‘நீயா’ படத்தில் நல்ல பாம்பும் இடம் பெற்றிருக்கும். அதைவிட அதிகமாக பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக கருநாகத்தைத் தேர்ந்தெடுத்தோம்.

neeya-movie-poster-3

அதேபோல், ‘நீயா’ படத்திற்கும் இந்த படத்திற்கும், மூன்று சம்பந்தங்கள் உள்ளன. ‘பெயர்’, ‘பாம்பு’ மற்றும் ‘ஒரே ஜீவன்’ பாடல். இவை மூன்று தவிர அந்த கதைக்கும், இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

‘நீயா’ படத்தில் பாம்பு ஒவ்வொரு கதாபாத்திரமாக உருவம் மாறி பழி வாங்கும். ஆனால், இந்த படத்தில் அப்படி இருக்காது. இப்படத்தில் பாம்புக்கென்று பெயர் கிடையாது…” என்றார் இயக்குநர் எல்.சுரேஷ்.

Our Score