இவரளவுக்கு தமிழ்ச் சினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்ட ஹீரோயின் வேறு யாருமில்லை. அதேபோல் சினிமாவுக்கு வெளியில் இருக்கும் ரசிகர்கள், பொதுஜனங்களின் பாவப்பட்ட பார்வையும் இவர் மேல்தான் ஆழமாகப் பதிந்திருக்கிறது.. இப்படியொரு அழகுக்கு.. இப்படியொரு அப்பாவி குணமா என்பதுதான் நயன்தாரா என்ற நடிகையை அறிந்தவர், தெரிந்தவர்களின் கமெண்ட்டு..
ஆனால் இதே நயன்தாராவுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. அது தொழிலில் அவருக்கு இருக்கும் பக்தி. தொழில் ரீதியாக பல்வேறு போட்டிகளை சந்தித்தாலும் அவர் முன்னிலையில் இருப்பதற்கு அவரது சினிமா ஈடுபாடுதான் காரணம். தன்னுடைய கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தவும், ரசிகர்களிடம் நல்ல நடிகை என்ற புகழ் பெறவும் அவர் எள்ளளவும் சமரசம் செய்து கொள்வதில்லை.
‘கஹானி’ ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ நீ எங்கே என் அன்பே’ படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்தபோதுகூட அவர் ஹிந்தி பதிப்பில் நடித்த வித்யா பாலன் போல் நடிப்பாரோ என்று சிலர் சந்தேகித்து இருக்கலாம் . ஆனால் இயக்குனர் சேகர் கம்முலாவோ நயன்தாராவின் திரைப் பயணத்தில் ‘ நீ எங்கே என் அன்பே ‘ ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதோடு, இதற்கு முன்னுதாரணமாக சில சம்பவங்களையும் குறிப்பிடுகிறார்.
“ஒரு முக்கியமான எமோஷனலான காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது தற்செயலாக அவரது கை விரல் நகங்களை கவனித்தேன். மிகவும் நேர்த்தியாக, அழகாக, நீளமாக இருந்தது. ஆனால் அப்போதைய காட்சியமைப்பின்படி அவரது நகங்கள் அவ்வளவு அழகாக இருக்கக் கூடாது என்பதால், இந்தக் குறையை நயன்தாராவிடம் குறிப்பிட்டேன். அவருக்கே உரிய ஒரு புன்னகையோடு திரும்பிச் சென்றார். நானும் அடுத்தக் காட்சிக்கான ஏற்பாடுகளில் இருந்தேன். சில வினாடிகளில் அவர் திரும்பவும் கேமிரா முன்பாக வந்து நின்றபோது, அவரது நகங்கள் கச்சிதமாக நறுக்கப்பட்டிருந்தது. இந்தச் செயல் அவர் மேல் இருந்த மரியாதையை எனக்குள் அதிகப்படுத்தியது. ஏனன்றால், அந்த நகங்களை காட்டாமலேயே அந்த சீனை எடுக்க நான் வேறொரு ஐடியா செய்து தயாராகத்தான் இருந்தேன். ஆனால் அதற்கு வேலை வைக்கவில்லை நயன்தாரா.
இன்னொரு சம்பவம். இதே படத்தில் வரும் ஒரு சண்டை காட்சியில் அவருக்கு பதிலாக டூப் நடிகையை உபயோகிக்கலாம் என இருந்தேன். ஏனென்றால் அது சற்று அபாயகரமான காட்சியும்கூட. ஆனால் நயன்தாரா இதனை ஏற்கவில்லை. இதை நானேதான் செய்வேன் என்று பிடிவாதமாகச் சொல்லி அந்தக் காட்சியில் அவரே நடித்துக் கொடுத்தார். அவரது அந்த கடின உழைப்பின் பலன், அந்த காட்சி படமாக்கப்பட்ட ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது…” என்றார்.
படத்துக்குப் படம் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், டெக்னீஷியன்கள் என்று அனைவரிடமும் நல்ல பெயரே எடுத்திருக்கும், நயன்தாராவுக்கு வாழ்க்கை பாடம் மட்டும் ஏன் இப்படி..?