நட்புன்னா என்னென்ன தெரியுமா – வெற்றிக்குக் கடந்த வந்த பாதை

நட்புன்னா என்னென்ன தெரியுமா – வெற்றிக்குக் கடந்த வந்த பாதை

மிஸ்டர் லோக்கல், மான்ஸ்டர் எனும் இரண்டு பெரிய படங்களுடன் வெளியாகியும், நட்புனா என்னானு தெரியுமா படம் திரையரங்கில் வெற்றி நடை போடுகிறது. அதற்குப் பத்திரிகையாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக ஒரு சந்திப்பைப் படக்குழுவினர் ஏற்படுத்தியிருந்தனர்.

படத்தின் வெற்றி குறித்துப் பேசிய நாயகி ரம்யா நம்பீசன், “பாசிட்டிவான விமர்சனங்களுக்குக் கிடைப்பது கஷ்டம். ஆனா, ‘நட்புன்னா என்னென்னு தெரியுமா’ படத்திற்கு நல்ல பாசிட்டிவ் ரெவ்யூஸ் கிடைக்குது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா கொண்டு வந்ததுக்குத் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த ஸ்க்ரிப்ட் கேட்கும்பொழுதே சொன்னேன், நாயகன் கவின், அவரது நண்பர்களாக நடித்திருக்கும் ராஜு, அருண்ராஜா காமராஜா ஆகிய மூவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி வொர்க்-அவுட் ஆன இந்தப் படம் நிச்சயம் ஜெயிக்கும்னு. படம் பார்த்தவர்களுக்குத் தெரியும், அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், பயாலஜி எல்லாம் கரெக்டா வொர்க் ஆகியிருக்கு. அவர்களுக்குள்ளான நட்பு சரியா எடுக்கப்பட்டிருந்தா படம் ஹிட்டாகிடும்னு எனக்கு நம்பிக்கை இருந்தது. சேதுபதி நடிச்சப்ப, இனி எனக்கு அம்மா கேரக்டர் தான் கிடைக்குமோன்னு நினைச்சேன், ஆனா இயக்குநர் எனக்கு சரியான ஸ்க்ரீன் ஸ்பேஸ் கிடைக்கிறாப்ல ஒரு கதாபாத்திரம் கொடுத்திருக்கார். மிர்ச்சி விஜய் கூட, இப்படத்தில் நான் ஒரு பாட்டும் பாடியிருக்கேன்” என்றார்.

“2016 இல் தொடங்கிய படம். இந்தப் படம் வெளியானதே எங்களுக்கு மிகப் பெரிய வெற்றி. இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு நான் நன்றி சொல்லவேண்டும். சொந்த பிள்ளைகளுக்கே செலவு செய்யத் தயங்கும் வேளையில், என்னை நாயகனாகப் போட்டுப் படமெடுத்திருக்கிறார். என் மீது எனக்கிருந்த நம்பிக்கையை விட, இயக்குநர் ஷிவா அரவிந்த் என் மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தார். அவருக்கு நன்றி” என்றார் படத்தின் நாயகன் கவின். 

“திரையரங்கிற்குப் போகும் முன்னாடி நாள் இரவு வரை எனக்குப் பிரச்சனை. இந்தப் படத்தை நான் வெளியிடவே மாட்டேன் என சவால் விட்டவர்கள் அதிகம். என் அம்மா மட்டுந்தான், இந்தப் படத்தை வெளியிடுவேன் என முதலும் கடைசியுமாக நம்பினார்கள். அவருக்கு மிகவும் நன்றி.

பத்திரிகையாளர்கள் பாராட்டிற்குப் பின் தான் திரையரங்கில் அதிக காட்சிகள் கிடைத்தன. ஒரு ஷோக்காக தியேட்டர்காரர்களிடம்  கெஞ்சிக் கொண்டிருந்தேன். பத்திரிகையில் விமர்சனங்கள் வந்ததும், ஒரு ஸ்க்ரீன் ஒன்பது ஆனது. பத்திரிகையாளர்களால் கிடைத்த வெற்றி இது. இரண்டு பெரிய படங்களுக்கு மத்தியில் என் படம் வெளியானது. பெரிய ஹீரோ வைத்துப் படமெடுங்க என விநியோகஸ்தர் ஆலோசனை கூறுகிறார். சுட்ட கதை, நளனும் நந்தினியும் என இரண்டு படமெடுத்துத் தோற்ற எனக்கு அது தெரியாதா? இங்கு சினிமாவின் வியாபார நோக்கம் வேற! பேஷனோடு புது ஹீரோவைப் போட்டுப் படமெடுத்தால், எனக்கு என்ன படம் காண்பிக்கவேண்டுமோ அதை இங்குள்ள சிஸ்டம் எனக்குக் காட்டிக் கொண்டேயிருக்கு. இங்கு படமெடுத்து வெற்றி பெறுவது அவ்ளோ சுலபமில்லை. நான் நம்பியது இயக்குநரையும், நடிகர்களையும் மட்டுமே! தோல்வி வரும் என்று தெரிந்தும், படத்தையும் படைப்பையும் மட்டுமே நம்பி வெளியிட்டேன். அதற்கான பலன் கிடைத்துவிட்டது. 

இது மூன்று வருடம் கிடப்பில் இருந்த படம். என் குழுவிற்கே என் மீது நம்பிக்கை போயிருக்கும். ஒரு குறும்படத்தைக் கொஞ்சம் நல்ல திரையரங்குகளில் வெளியிட்டதாகத்தான் உணர்கிறேன். இங்குள்ள சிஸ்டத்தில் தோற்றுத் தோற்றுத் தோற்று, ஒருநாள் வெற்றிகரமான தயாரிப்பாளராக மாறுவேன்” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார் தயாரிப்பாளர் ரவீந்திரன்.

 
Our Score