“ரஜினியைவிடவும் எனக்கு தமிழுணர்வு ஒரு சதவிகிதமாவது அதிகமாக இருக்கிறது” என்று நடிகர் சங்கத் தலைவராக வெற்றி பெற்ற பெருமிதத்தில் கூறியிருக்கிறார் நடிகர் நாசர்.
விகடன்.காம் இதழுக்கு இன்று அவர் அளித்துள்ள பேட்டியில், “நடிகர் சங்கத்தின் பெயரை மாற்ற ஏற்கெனவே போட்ட தீர்மானம் என்னவாயிற்று..? இப்போது மீண்டும் அந்தக் கோரிக்கை வந்திருக்கிறதே..?” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் நாசர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாசர் தனது பதிலில், “இதை சென்ற நிர்வாகத்தினரால் ஏன் நிறைவேற்ற முடியவில்லை என்று பார்க்க வேண்டும். சட்டச் சிக்கல் ஏதுமுண்டா என்று ஆராய வேண்டும். மாற்றினால் பிரச்சினைகள் எழுமா என்று அலச வேண்டும். முக்கியமாக இச்சங்கத்தின் அறுபதாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தத் தீர்மானத்தை பரபரப்பாக்கிய திரு.ரஜினிகாந்த் அவர்களைவிட எனக்கு ஒரு சதவிகிதமாவது அதிக தமிழ் உணர்வு உண்டு. மெட்ராஸூக்கு ஒரே இரவில் சென்னை என்று சூட்டப்படவில்லை.
ரஜினியும், கமலும் இந்த பெயர் மாற்ற விவகாரத்தில் கூறியது அவர்களது கருத்துரிமை. இருவரின் கருத்தையும் வரவேற்கிறேன். நிர்வாகம் தீர ஆராயும். முடிவெடுக்கும்…” என்று சொல்லியிருக்கிறார்.
“அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் ஓட்டுப் போடவே வரவில்லையே…?” என்ற இன்னுமொரு கேள்விக்கு, “கட்டாய ஓட்டளிப்புத் திட்டம் இப்போது சங்கத்தில் அமலில் இல்லை. அன்றைக்கு சந்தானம் அகமதாபாத்தில் இருந்தார். அது போல் அவர்களிருவரும் வர முடியாத சூழலில் இருந்திருப்பார்கள். யார் யார் வரவில்லை என்பதைவிட… 60-க்கும் மேற்பட்ட மூத்த கலைஞர்கள் சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோல் தாங்கி வந்தார்கள். கண் பார்வை மங்கியோரும் வந்தார்கள். வைஜெயந்திமாலா அவர்களும் வந்தார்கள். இவர்களையெல்லாம் நாங்கள் ஓட்டளிப்பவர்களாகப் பார்க்கவில்லை. தேர்தல் என்கிற ஜனநாயக நிகழ்வின் மீது நம்பிக்கை வைத்தவர்களாகப் பார்க்கிறோம்…” என்று சொல்லியிருக்கிறார் நாசர்.
இருக்க, இருக்க பிரச்சினைகளை ஏத்திக்கிட்டேதான் போவாங்க போலிருக்கு. நாசரின் இந்தப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ரஜினி சொன்னது அவருடைய கருத்து. இதனை அமல்படுத்த செயற்குழு, பொதுக்குழு இருக்கிறது. அங்கே தீர்மானம் கொண்டு வரப்பட்டு அது தோற்றால் ரஜினி எதுவும் கேட்கப் போவதில்லை. மாறாக தீர்மானம் வெற்றி பெற்றாலும் ரஜினி தான்தான் இதற்குக் காரணம் என்று மார்தட்டிக் கொள்ளப் போவதுமில்லை. பின்பு அண்ணன் நாசருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை..?
‘ரஜினியைவிடவும் எனக்கு தமிழுணர்வு அதிகம்’ என்பதெல்லாம் ரஜினியை தமிழகத்தில் இருந்தும், தமிழ் மொழியில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும் அந்நியப்படுத்தி பேசுவது போலத்தான் தோன்றுகிறது.
தமிழ் சினிமாவின் தற்போதைய தலைமகனை இப்படியெல்லாம் மறைமுகமாக தாக்குவதும், அசிங்கப்படுத்துவதும் கலைஞர்களாக கருதப்படும் நடிகர் சங்கத்தின் தலைவருக்கு அழகல்ல..!
வருந்துகிறோம்..!