பாலிவுட்டில் நர்கீஸ் என்றால் இப்போதும் கண்களைத் துடைத்துக் கொள்வார்கள்.. நடிகையர் திலகம் சாவித்திரி போல பாலிவுட்டுக்கு இப்போதும், எப்போதும் நர்கீஸ்தான்.. ஆனால் அந்தப் பெயரில் இப்போதிருக்கும் இந்த நடிகை அவர் செய்யாததையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்..
நர்கீஸ் பக்ரி என்ற இயற்பெயர் கொண்ட இவர், ஏற்கனவே ரண்பீர் கபூருடன் ‘ராக் ஸ்டார்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து ‘மெட்ராஸ் கபே’, ‘பட்டா போஸ்டர் நிக்லா ஹீரோ’, ‘மே தேரா ஹீரா’ ஆகிய படங்ககளிலும் ஹீரோயினாக நடித்தவர்.
இந்த ரம்ஜானுக்கு வெளியான சல்மான்கானின் ‘கிக்’ படத்திலும் ஒரு முக்கியமான பாடலுக்கு இவர்தான் நடனமாடியுள்ளாராம். இந்த பாடலுக்காகவே படம் பார்க்க மக்கள் வெள்ளம் அலை மோதுவதாக விளம்பரம் சொல்கிறது…
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் ‘ஸ்பை’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து கொண்டிருந்த நர்கீஸ் ‘சாஹஸம்’ தமிழ்ப் படத்தில் பிரஷாந்துடன் நடனமாட சென்னை வந்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக 50 ரஷ்ய அழகிகளுடனும், 100 ஆண் நடன கலைஞர்களுடனும் பிரஷாந்தும், நர்கீஸும் ஆடி வரும் பாடல் காட்சியை ராஜு சுந்தரம் நடன இயக்கத்தில், சௌந்தர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
ஏர்போர்ட் அருகேயிருக்கும் பின்னி மில்லில் போடப்பட்டுள்ள பிரமாண்டமான அரங்கத்தில் எஸ்.எஸ்.தமன் இசையில், மதன் கார்க்கி எழுதிய ‘காரத்தில் காரத்தில்… சில்லி இவ…’ என்ற பாடல் இதுவரை எடுக்கப்படாத விதத்தில் புதுவிதமாக பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் படமாகி வருகிறது.
இந்த நடனத்திற்காகவே வித்தியாசமான லைட்டுகள் மும்பை, டெல்லி, பெங்களூர் நகரங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாம். ஏராளமான பொருட்செலவில் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் நடிகர் தியாகராஜன் இப்படம் மூலம் அருண்ராஜ் வர்மா என்பரை இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார்.
சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பின் இடைவேளையில் பிரஷாந்தும், நர்கீஸ் பக்ரியும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
“நர்கீஸ் அற்புதமான நடிகை. முதல் முறையாக தென்னிந்திய சினிமாவுக்கு வந்துள்ளார். இந்தப் படத்தில் எனக்கு ஈடு கொடுத்து நடனமாடியுள்ளார். என்னோடு இணைந்து நடித்தவர்களில் விசேஷமான பேரழகி இவர்…” என்றார்.
நர்கீஸோ, “பிரஷாந்த் இனிமையானவர். தலை சிறந்த டான்ஸரான பிரஷாந்துடன் நடனமான எனக்கு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இது பெரிய படம், பிரம்மாண்டமான அரங்கம்… தங்கமான மனிதர் தியாகராஜன்.. இவர்களுடன் இணைவது நான் செய்த பாக்கியம்… நான் செய்த அதிர்ஷ்டம். இந்த பாடல் காட்சி நான் எதிர்பார்த்ததைவிட பெரிதாக அமைந்துள்ளது. இதை எல்லா தரப்பு மக்களும் துள்ளிக் குதித்து ஆடுவார்கள். ராஜு சுந்தரம் மாஸ்டரின் நடன அமைப்புகள் எளிதாகவும், புதியதாகவும் உள்ளது… அனுபவித்து ஆடினேன். இதுதான் தென்னிந்தியாவில் நான் ஆடும் முதலும், கடைசியுமான பாடல் காட்சி..” என்றார்.
இனிமேல் அம்மணி தென்னிந்தியாவில் கால் வைத்தால் ஹீரோயினாகத்தான் வருவாராம்.. சொல்லிப்புட்டார்..! யாருக்கு மச்சம் இருக்கோ..?