full screen background image

வித்தியாசமான கதைக் களத்தில் உருவாகும் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ திரைப்படம்..!

வித்தியாசமான கதைக் களத்தில் உருவாகும் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ திரைப்படம்..!

‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’ – இது தமிழகத்தில் அனைத்துப் பகுதி மக்களும் தினமும் அடுத்தவர்களிடம் கேட்கும் கேள்வி..! இந்தக் கேள்வியையே மையமாக வைத்து இப்போது திரைப்படம் ஒன்று உருவாகிறது.

ஜி.எஸ். ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பூக்கடை G.சேட்டு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் நாயகனாக மகேந்திரன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மியாஸ்ரீ நடித்திருக்கிறார். இவர்களுடன் R.சுந்தர்ராஜன், மனோஜ்குமார், ‘பசங்க’ சிவக்குமார், அப்புக் குட்டி, தவசி, பெஞ்சமின், ‘லொள்ளு சபா’ உதயா, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஜெ.ஆர்.கே.,  படத் தொகுப்பு – கம்பம் மூர்த்தி கவனிக்க, நடன இயக்கம் – தீனா, ரமேஷ், சண்டை இயக்குநர் – மிரட்டல் செல்வா, இசை – ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் –   ஜீவன் மயில், மோகன்ராஜ், பாடகர்கள் – விஜய் டி.வி. புகழ் செந்தில் கணேஷ்,  ராஜலெட்சுமி மற்றும் ஆத்தங்குடி இளையராஜா, சித்தின், நமீதா, தேனிசைத் தென்றல் தேவா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நல்.செந்தில்குமார்.

இத்திரைப்படம் பற்றிப் பேசிய இயக்குநர் நல்.செந்தில்குமார், “பல அரசியல் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் என தொடர்ந்து தமிழ்நாடு சிக்கல்களை சந்தித்துவரும் இந்த நேரத்தில் இதனை பிரதிபலிக்கும் வகையில்தான் இந்த ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ திரைப்படம் தயாராகி வருகிறது.

அடிப்படை வசதிகள்கூட இல்லாத ஒரு கிராமத்தில் இதுவரை எந்த தலைமுறையும் சந்திக்காத, பார்க்காத பல்வேறு மர்மமான சம்பவங்களும், பிரச்சனைகளும் அடுத்தடுத்து தொடர்ந்து நடக்கின்றது.

ஒரு கட்டத்தில் இந்தப் பிரச்சனைகள் தீவிரமடைந்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களுக்கு என்ன காரணம் என்பதை கதாநாயகன் கண்டு பிடித்து தனது கிராமத்தையும் மக்களையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை சஸ்பென்ஸ், திரில்லர் கலந்து விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறோம்.

கதையின் நாயகனான மகேந்திரன் ஊர் மக்களுக்கு உதவி செய்வதையே முழு நேர வேலையாக கொண்டு பணம் சம்பாதிக்கும் இளைஞனாக புதிய தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படம் மகேந்திரனின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும்…” என்கிறார்.

Our Score