எல்.கே. ஜி. – சினிமா விமர்சனம்

எல்.கே. ஜி. – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை வேல்ஸ் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார். பிரபல அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான நாஞ்சில்  சம்பத், இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜே.கே.ரித்தீஷ், நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகனான ராம்குமார், வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

லியோன் ஜேம்ஸ் இசை அமைக்க, ‘மேயாத மான்’ படத்தின் ஒளிப்பதிவாளர் விது ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத் தொகுப்பு செய்திருக்கிறார்.

கலை இயக்கம் – பாலசுப்ரமணியன், பாடல்கள் – பா.விஜய், விக்னேஷ் சிவன், சண்டை இயக்கம் – சில்வா, தயாரிப்பு நிர்வாகம் – கே.எஸ்.மயில்வாகனன், உடைகள் வடிவமைப்பு – திவ்யா பாலாஜி, பல்லவி சிங், புகைப்படங்கள் – ராஜா, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, டிசைன்ஸ் – கபிலன், எழுத்து, இயக்கம் – கே.ஆர்.பிரபு.

‘அமைதிப்படை’ வரிசையில் வந்திருக்கும் புதிய அரசியல் படம். நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரத்தையே திரைக்கதையாகக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆர்.ஜே.வாகவே அதிகம் அறியப்பட்டிருக்கும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது அறிமுகப் படமாக இதனைத் தேர்ந்தெடுத்திருப்பது சாலப் பொருத்தம். அவரே கதை, திரைக்கதை எழுதியிருப்பதாகச் சொல்கிறார். அப்படியெனில் பாராட்டுக்கள்தான்.

‘லால்குடி கருப்பையா காந்தி’ என்பதன் சுருக்கம்தான் படத்தின் டைட்டிலான ‘எல்.கே.ஜி’. இது சாட்சாத் நாயகன் ஆர்.ஜே.பாலாஜியின் பெயர்தான். இவருடைய தந்தையான ‘அழகு மெய்யப்பன்’ என்னும் நாஞ்சில் சம்பத், ஆளும் கட்சியின் முக்கியப் பேச்சாளர். பேச்சாளராகவே காலம் முழுக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

ஆனால் மகனோ இவரைவிட பெரிய ஆளாக வேண்டும் என்கிற வெறியில் இருப்பவர். எப்படியோ அப்பா கட்சியின் முக்கியப் பிரமுகர்களின் கையை, காலைப் பிடித்து வார்டு கவுன்சிலராகிவிட்டார். இதை வைத்தே அடுத்தடுத்த பதவிகளைப் பிடித்து மேலே வர திட்டம் தீட்டுகிறார்.

அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் திடீரென்று சுகவீனப்பட்டு அப்போலோ போன்ற மருத்துமனையில் நாள் கணக்கில் படுத்தப் படுக்கையாகிறார். இவருக்கு அடுத்த துணை முதல்வராக இருந்து இப்போது அமைச்சராகவே இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் போன்ற ‘போஜப்பன்’ என்னும் சிவாஜி ராம்குமார், அடுத்து தானே முதல்வராக வேண்டும் என்கிற கணக்கில் காய்களை நகர்த்தி வருகிறார்.

எதிர்பார்த்ததுபோலவே ஜெயலலிதாவின் மரணத்தைப் போலவே முதலமைச்சரின் மரணமும் ஒரு நாள் நள்ளிரவில் நடக்கிறது. உடனேயே பொறுப்பு முதல்வராக பதவியேற்கிறார் போஜப்பன். முதல்வர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த லால்குடி தொகுதிக்கு இடைத்தேர்தல் வர இருக்கிறது.

ஆனால் லால்குடி தொகுதியின் எம்.எல்.ஏ. சீட்டை தான் பெற வேண்டும் என்று முன்பேயே திட்டமிட்ட பாலாஜி அதற்காக பலவித வேஷங்களை, நாடகங்களை போட்டிருக்கிறார். அனைவரிலும் வித்தியாசமாக முதலமைச்சருக்கு வந்த நோயை எதிர்த்துப் போராட்டம் நடத்தி, அகில இந்திய அளவில் பிரபலமாகியிருக்கிறார். இதையடுத்து ராம்குமாரின் கவனத்தை ஈர்த்து அவரையும் சந்திக்கிறார். வாய்க்கு வந்ததையெல்லாம் கவிதை என்னும் பெயரில் கொட்டி அவரை மகிழ்வித்து ராம்குமாரின் மனதில் இடம் பிடித்து வைத்துள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் முதல்வருக்காக சீட்டை விட்டுக் கொடுத்தவரும், அதே தொகுதியில் இதற்கு முன்பேயே 4 முறை எம்.எல்.ஏ.வாக நின்று ஜெயித்தவரும், கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான ராம்ராஜ் பாண்டியன் என்னும் ஜே.கே.ரித்தீஷ்தான் நிற்பார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

ஜே.கே.ரித்தீஷ் வளர்ந்து கட்சியில் தனக்குப் போட்டியாக வந்துவிடுவாரோ என்று நினைத்த ராம்குமார், எம்.எல்.ஏ.சீட்டை பாலாஜிக்குக் கொடுத்துவிடுகிறார். இதனால் தலைகால் புரியாமல் ஆடும் பாலாஜி எப்படியாவது எம்.எல்.ஏ. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்.

இதற்காக ‘கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா’ என்னும் கார்ப்பரேட் நிறுவனத்தை அணுகுகிறார். இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ‘சாரா’ என்னும் பிரியா ஆனந்த், பாலாஜியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவருக்காகத் தேர்தல் களத்தில் குதிக்கிறார்.

இந்த நிறுவனம் சொல்லும் அனைத்துவித காமெடி டிரெண்ட்டுகளையும் செய்கிறார் பாலாஜி. இதற்கிடையில் ஜே.கே.ரித்தீஷும் தனியாக சுயேச்சையாக களத்தில் குதிக்க இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இறுதியில் என்னாகிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை.

படத்தின் துவக்கத்திலேயே தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஆர்.ஜே.பாலாஜி பதவியேற்கிறார். பதவியேற்பின்போது அவர் துப்பாக்கியால் சுடப்படுகிறார். தன்னைக் கொல்ல முயற்சிகள் நடக்கும் என்பதை எதிர்பார்த்து அவர் புல்லட் புரூப் ஆடை அணிந்து வந்திருந்ததால் உயிர் தப்புகிறார். ஏன் அவரைக் கொலை செய்ய முயற்சித்தார்கள்..? இந்த சின்ன வயதில் இவருக்கு எப்படி முதலமைச்சர் பதவி கிட்டியது…? என்பதை சற்று விரிவாக இதன் பின்பு காட்டுகிறார்கள்.

இதுவே மிக சுவாரஸ்யமாக இருப்பதால் படத்தின் இடைவேளைக்கு முன்பான காட்சிகளில் மிகவும் ஈர்ப்பு ஏற்பட்டு, திரைக்கதையின் வேகத்தில் படத்தை வெகுவாக ரசிக்க முடிந்திருக்கிறது.

இப்போதைய அரசியல் களத்தில் என்னென்ன கூத்துக்கள் நடந்து கொண்டிருக்கிறதோ அத்தனையையும் படத்தில் காமெடியாக்கி காட்டியிருக்கிறார்கள்.

ஒரு சாதாரண கவுன்சிலரால் என்னென்ன திருட்டுத்தனமெல்லாம் செய்ய முடியும்.. என்பதையும் பாலாஜி சிரித்தபடியே சொல்லியிருக்கிறார். ரோடு காண்ட்ராக்ட்டில் தனக்கு கமிஷன் கொடுக்காததால் மக்களைத் தூண்டிவிட்டு ரகளை செய்வது.. தான் சிபாரிசு செய்த குழந்தைக்கு சீட்டு கொடுக்காததால் ஒரு பள்ளிக்கு எதிராக நகராட்சியையே திருப்பிவிட்டு, ஒன்றுக்கு நான்கு சீ்ட்டுக்களை பெறுவது.. மொக்கையாய் ஒரு கவிதையை பாடி அதை சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு பரப்பி தானே ஒரு காமெடி ஹீரோவாக உருவெடுப்பது என்று அவரது செயல்கள் எல்லாமே இங்கிருந்து எடுக்கப்பட்டதுதான்.

பிரியா ஆனந்த் சொல்லிக் கொடுக்கும் அரசியல் சித்து விளையாட்டுக்களைத்தான் சமீப ஆண்டுகளில் இந்திய அரசியல்வாதிகள் பின்பற்றி வருகிறார்கள். துக்க வீட்டிலும் அரசியல், கல்யாண வீட்டிலும் அரசியல், அறிக்கை அரசியல், பேட்டி கொடுக்கும்போது அரசியல் தலைவர்களை டென்ஷனாக்கி அதன் மூலம் அவர்களை கோபப்பட வைத்து அதனை திருப்பித் திருப்பிக் காண்பித்து அவர் மீதான ஹீரோயிஸத்தை மக்களிடையே இழக்க வைப்பது.. (விஜயகாந்தை இப்படித்தான் காலி செய்தார்கள் பத்திரிகையாளர்கள்) என்று பலவித கயவாளித்தனங்களையும் காண்பித்திருக்கிறார்கள்.

இது மட்டுமா… தற்போதைய சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் மீம்ஸ் கிரியேஷன்ஸ், அரசியல்வாதிகளை வைத்து செய்யும் கார்ட்டூன்கள், ஓரங்கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு பிரச்சினை, சங்கிகளின் பசு மாடு மீதான பாசம், நிர்மலா தேவிகளின் ஊடுறுவல், லஞ்சப் பணம் எங்கேவரையிலும் பாய்கிறது என்கிற பட்டியல்.. – இப்படி நம்முடைய நாட்டு நடப்பை தோண்டித் துருவி தேங்காய் உரித்திருக்கிறார் இயக்குநர்.

ஆர்.ஜே.பாலாஜி படம் முழுவதும் பேசிக் கொண்டேயிருக்கிறார். அரசியல் படம் என்பதால் இதற்கு இதுதான் நேர்வழி என்பதினால் இந்தப் படத்தில் மட்டும் அவரை பொறுத்துக் கொள்ளலாம். கிளைமாக்ஸில் தன்னை கொல்ல வந்த இளைஞனிடம் தற்போதைய நாட்டு நிலைமையை எடுத்துச் சொல்லி தான் எப்படி ஒரு கார்ப்பரேட் திருடனாக மாறினேன் என்பதை விளக்கும் காட்சியில்தான் தமிழகத்தின் தற்போதைய நிலைமையே தெரிகிறது.

ஆனால் இதனை அவர் காமெடியாகவே சொல்லிவிட்டுப் போய்விட்டதால் படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் பாதிக்கக் கூடிய விஷயமாக இல்லாமல், இது வெறுமனே காமெடி ஷோவாகவே மாறிவிட்டது என்பதுதான் கொடுமை.

பிரியா ஆனந்த் எதைப் பற்றியும் கவலைப்படாத கார்ப்பரேட் அடிமையாகவே வலம் வந்திருக்கிறார். இடையில் ஒரேயொரு டூயட்டுக்கும் பாலாஜிக்காக நடித்திருக்கிறார். இவர் கொடுக்கும் அஸைண்ட்மெண்ட்டுகளை ரித்திஷூம், பாலாஜியும் மாறி மாறி செய்யும்போது எந்த வில்லித்தனத்தையும் முகத்தில் காட்டாமல் இருப்பதால் சஸ்பென்ஸை கட்டிக் காப்பாற்றியிருக்கிறார். பாராட்டுக்கள்.

பொழைக்கத் தெரியாத அப்பனாக நாஞ்சில் சம்பத்.. அவ்வப்போது திருக்குறளில் இருந்து எதையாவது எடுத்துக் கொடுத்து பையனை டென்ஷனாக்குவதே இவரது வேலை. இருந்தும் கடைசி நிமிடங்களில் பையனுக்காக மனம் மாறி ஒரு டிராமாவும் போடுகிறார்.

‘போஜப்பனாக’ சிவாஜி ராம்குமார். கெத்தான வேடம். ஓ.பி.எஸ். போலவே பேசியிருக்கிறார். நிறைய நடிக்கலாமே.. ஏன் ஸார் நடிக்காமல் இருக்கிறார் என்று தெரியவில்லை. கச்சிதமான தேர்வு.

ஜே.கே.ரித்தீஷ் ராமராஜன் போன்று பாடியே காளை மாட்டை அடக்குகிறார். ஒரே ஜம்ப்பில் 6 பேரை கன்னத்தில் குத்தி கீழே சாய்க்கிறார். தான் செய்த நல்ல காரியங்கள் தன்னைக் காப்பாற்றும் என்று சொல்லி தைரியமாக அவர் தேர்தல் களத்தில் குதித்த பின்புதான் திரைக்கதை மேலும் வேகமெடுத்திருக்கிறது.

இவரது பேஸ்மெண்ட்டை காலி செய்வதற்காக பிரியா ஆனந்த் போட்டுக் கொடுக்கும் திட்டமும், இதற்கு பத்திரிகையாளர்கள் துணை போவதும் சுவாரஸ்யமான திரைக்கதை. கொஞ்சம், கொஞ்சமாக தனது செல்வாக்கை தனது கண் எதிரிலேயே அவர் இழக்கும் தருணத்தில் அழகாகத்தான் நடித்திருக்கிறார்.

சின்னச் சின்ன காமெடிக்காக பாலாஜியின் மாமாவான மயில்சாமியும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

லியோன் ஜேம்ஸின் இசையில் ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ பாடல் அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. அரசியல் அசிங்கங்கள் அத்தனையையும் இந்தப் பாடல் காட்சியில் கொத்துப் புரோட்டா போட்டிருக்கிறார்கள். படத்தின் முடிவிலும் இதே பாடல் ஒலிக்க.. தியேட்டரை விட்டு வெளியே வரும்போது இதன் பாதிப்பு கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது.

அறிமுக இயக்குநரான கே.ஆர்.பிரபுவின் இயக்கத்திற்கு ஒரு பாராட்டு. ‘முகம்மது பின் துக்ளக்’ படத்திலும் இதே போன்று நாட்டு நடப்புகளை காமெடியாகவே சொல்லி கூட்டிக் கழித்துப் பாருங்கள் புரியும் என்று அந்தக் காலத்திலேயே சோ சொல்லியிருப்பார். அதையேதான் இந்தப் படத்திலும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

மிக நீண்ட நாட்கள் கழித்து ஒரு அரசியல் கசப்புணர்வை மக்கள் மத்தியில் விதைத்திருக்கும் படமாக இத்திரைப்படம் ஜெயித்திருக்கிறது என்றே சொல்லலாம்..!

எல்.கே.ஜி. – அரசியலிலும் எல்.கே.ஜி.யாக இருப்பவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய இந்திய அரசியலின் கதை.

அவசியம் பாருங்கள்..!

Our Score