அனாதை விடுதிகளில் வளர்ந்தவர்களின் நடிப்பில் உருவான படம் ‘நமக்கு நாம்’.

அனாதை விடுதிகளில் வளர்ந்தவர்களின் நடிப்பில் உருவான படம் ‘நமக்கு நாம்’.

அன்றொரு நாள் தி.நகரில் காமராஜர் வீட்டின் அருகே ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறது.கேப்பாரற்ற அந்த குழந்தைக்காக உருவானது ‘பாலமந்திர் குழந்தைகள் காப்பகம்’.

முட்புதர்களில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைகளை கண்டெடுத்து அதனால் உருவானது வித்யாசாகரின் ‘உதவும் கரங்கள்’ அமைப்பு.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது உருவானது ‘தொட்டில் குழந்தைகள்’ அமைப்பு.

இப்படி பல்வேறு சூழ்நிலைகளில் தமிழகமெங்கும் உருவாகி நடத்தப்பட்டு வருவதுதான், பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் காப்பகங்கள். அதேபோல முதியோர்கள் காப்பகம்.

சமூக சிந்தனை உள்ள பத்திரிகையாளரான ‘புரட்சி வேந்தன்’ சுந்தரமூர்த்தி தனது பங்களிப்பில் சென்னையில் முதியோர் இல்லம், மற்றும் குழந்தைகள் காப்பகங்களை நடத்தி வருகிறார்.

இந்தக் காப்பகங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் மாற்று திறனாளிகளை பயன்படுத்தி ‘நமக்கு நாம்’ என்ற படத்தினை உருவாக்கியுள்ளார் சுந்தரமூர்த்தி.

படத்தில் கயல் ஜரீன், சுனிதா, சுபாஷினி, கோபி, கமல், ஹாஜா ஷெரீப் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை – தினா, பின்னணி இசை – ஹரி, படத் தொகுப்பு – அண்ணாதுரை, கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள், இயக்கம் – சுந்தரமூர்த்தி.

முழுக்க முழுக்க அனாதை இல்லம் சம்மந்தமான உண்மை சம்பவங்களை உள்ளடக்கிய இந்தப் படத்தில் அனாதை இல்லத்தில் வளர்ந்தவர்களே நடித்துள்ளனர்.

அனாதை இல்லத்து சிறுவர்கள் பங்கேற்றுள்ள பாடல் ஒன்றும் படத்தில் இடம் பெற்றுள்ளது. ”ஆராரோ பாட்டை நாங்கள் கேட்டதில்லை.. அம்மா, அப்பாவை பாh;த்தில்லை..  அண்ணானும் தம்பியும்கூட இல்லை. ஆனாலும் நாங்கள் ஆனாதை இல்லை..” என்ற இந்தப் பாடலை பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகள் உத்ரா பாடியுள்ளார்.

இந்தப் படத்தின் சிறப்பினை கருதி பாடல் காட்சி ஒன்றில் கவிஞர் பா.விஜய் நடித்துள்ளார்.

திருப்போரூர் முருகன் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த ‘நமக்கு நாம்’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையிலேயே உருவாகியுள்ளது.

படம் மிக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

Our Score