full screen background image

‘நான்தான் பாலா’ பிராமணீயம் பேசவில்லை – நடிகர் விவேக்கின் உறுதிமொழி..!

‘நான்தான் பாலா’ பிராமணீயம் பேசவில்லை – நடிகர் விவேக்கின் உறுதிமொழி..!

சின்னக் கலைவாணர் விவேக் ஹீரோவாக நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் படம் நான்தான் பாலா.

SSS Enterprises நிறுவனம் சார்பில் லாரன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் பாலாவிடம் இயக்கம் பயின்ற ஆர்.கண்ணன் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் கதையை பாலாவிடம் சொன்னவுடன், இதற்கு மிகப் பொருத்தமாக இருப்பவர் விவேக் மட்டுமே என்று பாலாவே சொன்னாராம். இதனால் விவேக்கை 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பின் தொடர்ந்து வற்புறுத்தி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள வைத்தாராம் இயக்குநர்.

படத்தில் விவேக்கிற்கு பிராமண இளைஞன் வேடம். கும்பகோணத்தை களமாகக் கொண்ட படம். பெருமாள் கோவில் பூசாரியான விவேக், தனது தாய் தந்தைக்காக தன்னுடைய படிப்புக்காக கிடைத்த அமெரிக்க வாய்ப்பைக்கூட நிராகரித்துவிட்டு அங்கேயே வசிக்கிறார். மிக நேர்மையானவரும்கூட..

விவேக்கின் நண்பரான பூச்சி ஒரு அடியாள். கொலைக் கும்பலிடம் வேலை செய்கிறார். இவருக்கும் செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த வைஷாலி என்ற பெண்ணுக்கும் இடையில் காதல். இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க விவேக் முடிவு செய்யும்போதுதான் நண்பன் பூச்சியின் உண்மையான சுயரூபம் தெரிகிறது.. இதன் பின் விவேக் எடுக்கும் முடிவுதான் கிளைமாக்ஸாம்..

படத்தில் அடிதடி இல்லை. ஆனால் கிளைமாக்ஸ் நாம் முற்றிலும் எதிர்பார்க்காதது என்கிறார் விவேக். இந்தப் படத்தில் விவேக்கின் வழக்கமான நகைச்சுவை காட்சிகளும் இல்லையாம்.. ஆனால் செல்முருகன்-மயில்சாமி சம்பந்தப்பட்ட நகைச்சுவை காட்சிகள் இருக்கின்றனவாம்.

இந்தப் படததிற்காக சமஸ்கிருதத்தை முறைப்படி பயின்று அதன் ஸ்லோகங்களை மனப்பாடமாக பேசியிருக்கிறாராம் விவேக். பார்க்க அட்சரச்சுத்தமாக அக்ரஹாரத்து பையனாகவே காட்சி தரும் விவேக்கிடம், “இது பிராமண சமூகத்தை உயர்த்திச் சொல்லும் படமா?” என்று கேட்டதற்கு.. “இல்லை.. இல்லை… ஒரு அமைதியான பையன்.. கோவில் பூசாரி.. திடீர்ன்னு அவனுக்கு ஏற்படுற அநீதியை கண்டு அவன் செய்ற எதிர்ச் செயல்தான் படம்தான்.. இதுக்காக நாங்க போட்டுக்கிட்ட கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் பிராமண வேடம்.. அவ்வளவுதான்..” என்றார் பதட்டத்துடன்..!

இசையமைப்பாளர் வெங்கட்ரிஷிக்கு இது முதல் படமாம்.. ஒளிப்பதிவு அழகிய மணவாளன்.. முழுக்க முழுக்க கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலேயே படமாக்கப்பட்டுள்ளதாம்..

“இது நான் ஹீரோவா நடிக்கிற முதல் முயற்சி.. இதில் ஜெயித்தால் மற்றவைகளை பற்றி யோசிப்போம். அதுக்காக இனிமே ஸோலோ ஹீரோதான்னு நான் நினைக்கலை.. காமெடி வேஷம் பாட்டுக்கு தனியா போய்க்கிட்டிருக்கும். எனக்கான வேஷம் கிடைத்தால் தனியா ராஜபாட்டைல போவேன்..” என்றார் விவேக்.

“நான் நாத்திகன் இல்லை.. திருநெல்வேலி படத்துல இருந்தே மூட நம்பிக்கைகளை மட்டுமே சொல்லி காமெடி செய்திருக்கிறேன். எந்தப் படத்திலும் கடவுள் இல்லைன்னு நான் சொன்னதே இல்லை. நானொரு தீவிர பக்திமான்…” என்றார் விவேக்.

ஒரு பூச்சியை, பூகம்பமாக மாற்றும் அந்த கிளைமாக்ஸ்தான் என்ன..? படம் வரட்டும் பார்ததிருவோம்..!

Our Score