full screen background image

4 பெண் குழந்தைகளின் அட்டகாசத்தில் ‘என்ன சத்தம் இந்த நேரம்’..?

4 பெண் குழந்தைகளின் அட்டகாசத்தில் ‘என்ன சத்தம் இந்த நேரம்’..?

ஒரு பெண்ணை பெற்றாலோ ஓட்டாண்டி என்பார்கள். ஆனால் 4 பெண் குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களை நல்லபடியாக வளர்த்து வருகிறார் விவேக் என்ற தனியார் வங்கி அதிகாரி. இவருடைய மனைவியும் வங்கியில் பணியாற்றுகிறாராம். கருவுற்றபோதே 4 குழந்தைகள் இருப்பதை மருத்துவர்கள் சொல்லியும், “பரவாயில்லை.. பெற்றுக் கொள்கிறோம்…” என்று உறுதியுடன் இருந்து பெற்றவர்களாம்.. கொடுத்து வைத்தவர்கள்.

இந்தக் குழந்தைகளுக்கு இப்போது வயது 8. இவர்களை மையமாக வைத்து ஒரு புதிய படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ‘என்ன சத்தம் இந்த நேரம்’ இதுதான் தலைப்பு.

இதில் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனும் இயக்குநருமான ‘ஜெயம்’ ராஜா ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். மேலும் நிதின் சத்யாவும் நடித்திருக்கிறார். ஹீரோயினாக மிருதுளா வேல்ஸ் நடித்திருக்கிறார். 13 ஆண்டு கால வனவாசத்திற்குப் பிறகு ‘காதல் மன்னன்’ மானு இதில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

சிங்கப்பூரை சேர்ந்த தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் புரவலன் தமிழில் அறிமுகம் ஆகிறார். மனோபாலா, சிவசங்கர் மாஸ்டர், சுவாமிநாதன், வையாபுரி, இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நாகா இசையமைத்திருக்கிறார். சஞ்சய் லோகநாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் குரு ரமேஷ்.

நேற்று நடைபெற்ற இந்தப் படத்தின் பிரஸ்மீட்டில், படத்தின் கதையை வழக்கம்போல இயக்குநர் சொல்ல மறந்துவிட்டாலும், டிரெயிலரில் ஓடுவதை வைத்து பார்த்தால், மிருகக் காட்சி சாலைக்கு சுற்றுலாவுக்குச் செல்லும் 4 குழந்தைகள் திடீரென்று காணாமல் போக.. அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் கதை என்று தெரிகிறது..!

படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இயக்குநர் ‘ஜெயம்’ ராஜா பேசும்போது, “எனக்கு நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்தது. இருந்தாலும் நான் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்தக் குழந்தைகளுக்காகவே இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இவர்களுடன் நடித்தது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

பல படங்களை நான் இயக்கியிருந்தாலும் நடிப்புக்கு நான் புதுசுதான். ஆரம்பத்தில் நடிப்பதற்கு நிறைய சிரமப்பட்டேன். ஆனால் இந்தக் குழந்தைகள் இயக்குனர் சொல்லுவதை ஒரே நொடியில் சுலபமாக செய்து முடித்தது ஆச்சரியமா இருந்தது.

இந்தப் படத்துல நடிச்சு முடிச்சுட்டு அடுத்த நாள் என் தம்பி ஜெயம் ரவியும், நயன்தாராவும் நடிக்குற படத்தை இயக்கப் போயி்ட்டேன். அங்க போனவுடனேயே என்னோட டைரக்சன் ஸ்டைலே மாறிருச்சு.. அதுவரைக்கும் நடிப்புக்காக ஆர்ட்டிஸ்ட்டுகள்கிட்ட சண்டையெல்லாம் போட்டுக்கிட்டிருந்தவன்.. இப்போ அதையெல்லாம் விட்டுட்டு ஆர்ட்டிஸ்ட் போக்குலயே போய் நடிப்பை வாங்கணும்னு நினைச்சு உழைச்சுக்கிட்டிருக்கேன். என்னோட இயக்குதல் தொழில்லகூட ஒரு மாற்றத்தை இந்தப் படம் செஞ்சிருக்கு..” என்றார் நெகிழ்ச்சியுடன்..

நடிகர் நிதின் சத்யா பேசும்போது போகிற போக்கில் உண்மையை போட்டு உடைத்துவிட்டார். “நான் ஏன் இந்தப் படத்துல நடிக்க ஒத்துக்கி்டடேன்னா.. எனக்கு படமே இல்லை. அதுதா்ன் உண்மை..” என்றார்.

அந்த நான்கு குழந்தைகளின் துள்ளள், பேச்சுக்கள் மேடையை கலங்கடித்தது.. பார்ப்பதற்கு ஒன்று போலவே இருக்கும் அவர்களது தோற்றமும், மழலைப் பேச்சும் நேற்றைய பிரஸ்மீட் வேறு மாதிரியான தோற்றத்தைத் தந்தது என்பதென்னவோ உண்மை..!

Our Score