நான் சிரித்தால்- விமர்சனம்

நான் சிரித்தால்- விமர்சனம்

அவ்னி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகை குஷ்பு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் ‘ஹிப் ஹாப்’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், முனீஸ்காந்த், ஷாரா, ரவி மரியா ‘படவா’ கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வாஞ்சிநாதன், இசை – ஹிப்ஹாப் ஆதி, சண்டை இயக்கம் – பிரதீப், நடன இயக்கம் – ராஜ், சந்தோஷ், படத் தொகுப்பு – ஸ்ரீஜித் சாரங், மக்கள் தொடர்பு – ஜான்ஸன், எழுத்து, இயக்கம் – ராணா. நேரம் : 138 நிமிடங்கள்.

இந்தப் படத்தை ராக்போர்ட் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில விநியோகஸ்தர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.

புன்னகை என்பது ஒரு மகிழ்ச்சிக்கான உணர்வு. அதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் வாய்த்தால்தான் வெளிப்படுத்த முடியும். போலிப் புன்னகை செய்ய வேண்டி இருந்தாலும் அதற்கும் ஒரு சந்தர்ப்பம் வாய்க்க வேண்டும். யாருமே வெறுமனே சும்மா சிரிப்பதில்லை. அப்படி சிரிப்பவர்களை உலகமும் மதிப்பதில்லை.

அதே நேரம் அழ வேண்டிய நேரத்தில் எல்லாம் ஒருவனுக்கு சிரிப்பு வந்தால் இந்த உலகம் அவனை எப்படிப் பார்க்கும்..? அப்படியொரு வியாதி நாயகன் ‘ஹிப் ஹாப்’ ஆதிக்கு வருகிறது. அதனால் அவருக்கு சில பாதிப்புகள் வருகின்றன(கூடவே நமக்கும்). அந்தப் பாதிப்புகளில் இருந்து அவர் எப்படி மீண்டார் என்பதுதான் இந்த ‘நான் சிரித்தால்’ படத்தின் கதை.

ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் காந்தி என்னும் ஆதிக்கு ஒரு விசித்திரமான பிரச்சனை. ஏதாவது துக்கமோ, பிரச்சனையோ ஏற்பட்டால் அந்த நேரத்தில் ஆதிக்குத் தாங்க முடியாமல் சிரிப்பு வந்துவிடும். இந்த நிலையில், அவர் தனது பட்டப் படிப்பையே முடிக்காதது தெரிய வர, வேலை பார்க்கும் ஐ.டி. நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்படுகிறார் ஆதி. இதனால், அவரது காதலும் சிக்கலுக்குள்ளாகிறது.

இதற்கிடையில், மிகப் பெரிய தாதாக்களான ‘சக்கரை’ என்னும் ரவி மரியாவும், ‘தில்லி பாபு’  என்னும் கே.எஸ்.ரவிக்குமாரும் ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிக்கிறார்கள். கே.எஸ்.ரவிக்குமாரை கொல்ல.. ரவி மரியா மூன்று ரவுடிகளை அனுப்பி வைக்கிறார். ஆனால், அவர்கள் செல்ல வேண்டிய கார் கடைசி நிமிடத்தில் மாறிப் போவதால், அந்தக் காரில் பயணிக்கும் காந்தியும் அவனது நண்பர்களும் தில்லி பாபுவிடம் சிக்குகிறார்கள்.

இவர்களிடமிருந்து ஆதியும், அவரது நண்பர்களும் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதைத்தான் சிரிக்க, சிரிக்க சொல்லியிருக்கிறார்கள்.

மிக வித்தியாசமான சிந்தனைதான். இந்தப் படத்தின் கதையை வைத்து ஏற்கெனவே ‘ஹிப் ஹாப்’ ஆதி டீம் ‘கெக்கேபிக்கே’ என்று ஒரு குறும் படமாக எடுத்திருக்கிறார்கள். ஒரு ஷார்ட் பிலிம்க்கான திரைக்கதையை சரியாக அமைத்த இயக்குநர் ராணா இதைப் பெரிய படமாக்குவதில் பாதிக் கிணறுதான் தாண்டி இருக்கிறார்.

‘ஹிப் ஹாப்’ ஆதிக்கு பாதிக்கும் மேல் நடிப்பதைவிட சிரிப்பதுதான் வேலை. மனிதர் அதைச் செவ்வனே செய்துள்ளார். நாயகி ஐஸ்வர்யா மேனன் கூடுமானவரை கூடுதல் நடிப்பை கொடுக்க முயற்சித்துள்ளார்.

ஷாரா, முனிஷ்காந்த் காமெடிகளைவிட படவா கோபி, ஐஸ்வர்யா மேனன் இருவரும் வீட்டில் வைத்து செய்யும் காமெடி நம் வயிற்றை வைத்து செய்கிறது. ஹீரோவிற்கு வலது இடதாக வரும் இரு இளைஞர்களும் அட்டகாசம். கட்டக் கடைசியில் வரும் யோகிபாபு வெகுவாக ஈர்க்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரவிமரியா இருவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார்கள்.

மகனின் காதலி வீட்டுக்குச் சென்று, நாயகனின் தந்தையான படவா கோபி பேசும் காட்சியை மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். இது போலவே அனைத்துக் காட்சிகளையும் படமாக்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

இடையிடையே வரும் பெண்களுக்கு எதிரான விமர்சனங்களும், அவர்களை விமர்சனம் செய்யும் தொனியும் எரிச்சலை வரவழைக்கிறது. பல ஆண்களைக் காதலித்து ஏமாற்றும் பெண்ணாக வரும் ஜூலி என்ற கதாபாத்திரத்தின் மூலமாக, ‘நகைச்சுவை’ என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

பின்னணி இசையில் கவனம் செலுத்திய ‘ஹிப் ஹாப்’ ஆதி பாடல்களில் கோட்டை விட்டுள்ளார். அதுவும் முன் பாதியில் வரும் நான்கு பாடல்களுமே செவியில் ஏறி மனதிற்குள் செல்லவே இல்லை. ஒளிப்பதிவு மட்டும் எளிமையாக நச்சென்று இருக்கிறது.

முன் பாதியில் ஆமை வேகத்தில் நகரும் படம் பின் பாதியில் பாம்பென சீறுவது ஆறுதல். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காமெடி காட்சிகள் சுந்தர்.சி படங்களை நினைவூட்டினாலும் தரமான சம்பவங்கள்.

ஆதிக்கு இந்தப் பிரச்சனை வந்ததிற்கான காரணம் படத்தில் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை. தன் நண்பர்கள், காதலி போன்றோரிடம் ஏன் ஆதி தன் பிரச்சனைகயை மறைக்க வேண்டும்..? இப்படியான லாஜிக் கேள்விகள் குழந்தைகள்கூட சிரிக்குமளவிற்கு படம் நெடுக இருக்கின்றன. ஆனாலும் க்ளைமாக்ஸில் நான்.. நீ… என போட்டி போட்டுக் கொண்டு அனைவரும் சேர்ந்து நம்மை சிரிக்க வைத்து விடுகிறார்கள்.

Our Score