படத்தின் வெளிநாட்டு உரிமையை விற்காத நிலையில்.. வெளிநாடுகளில் ஒரு திரைப்படம் வெளியாகாத நிலையில்.. அத்திரைப்படத்தின் திருட்டு டிவிடிக்கள் வெளியாகின்றன என்றால் அதற்கு உள்ளூரில் உள்ள திரையுலகைச் சேர்ந்தவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை. இப்போதும் அப்படியொரு நிகழ்வு நடந்திருக்கிறது.
கடந்த 24-ம் தேதி வெளியான ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படத்தின் திருட்டு டிவிடிக்கள் இப்போது தமிழகமெங்கும் ரிலீஸாகிவிட்டன. படம் நன்றாக போவதால்.. படத்திற்கு நல்ல மவுத் டாக் கிடைத்திருப்பதாலும், தியேட்டர்கள் கூடுதலாக கிடைத்திருப்பதாலும் தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருந்த இந்த நேரத்தில் இந்த திருட்டு டிவிடி விவகாரம் வெளியாகி அவரை அதிர்ச்சியாக்கியிருக்கிறது.
வெளிநாடுகளுக்கு படம் போகவில்லையே.. பின்பு எப்படி திருட்டு டிவிடி என்று யோசித்து அந்த டிவிடியை வாங்கி பரிசோதித்ததில் அத்திரைப்படம் திருநெல்வேலி அருணகிரி தியேட்டரில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனரிடம் இது பற்றி புகார் கூறவிருப்பதாக தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள செய்தி இது :
“தயாரிப்பாளர்களே!! ஒன்றுபடுங்கள்….
நான் J.S.K. சதீஸ்குமார். என்னுடைய J.S.K. பிலிம்ஸ் சார்பாக “நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்” என்னும் திரைப்படத்தை July 24-ம் தேதி தமிழகமெங்கும் வெளியிட்டேன்
படம் வெளிவந்த அன்றே காலை 11:30 மணி காட்சியில் இந்தப் படத்தை திருநெல்வேலி அருணகிரி தியட்டரில் திருட்டு VCD-யில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இதை நான் QUBE நிறுவனத்தின் மூலமாக கண்டுபிடித்து அவர்களிடம் கடிதமும் வாங்கியுள்ளேன்.
வெளிநாட்டு உரிமம் வழங்காத நிலையில் இது எவ்வளவு பெரிய மோசடி..? தயாரிப்பாளர்கள் நாம் சாகின்றோம்.. இப்படி அற்ப காசுக்காக செயல்படும் இது போன்ற நபர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டாக வேண்டும்.
எனவே சக தயாரிப்பாளர்கள் நாளை காலை 10:30 மணிக்கு சங்கத்திற்கு வாருங்கள். சங்க நிர்வாகிகளிடமும் கூறி உள்ளேன். அனைவரும் இனைந்து சினிமாவை காப்பாற்ற கமிஷனர் அலுவலகம் சென்று புகார் கடிதம் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.
தயாரிப்பாளர்களே..! இதுதான் நல்ல தருணம் வாருங்கள்.. நமது உயிரை மீட்க.. இல்லையேல் நம்மை அழித்து விடுவார்கள். இது எனது சுயநலத்திற்கான அழைப்பல்ல.. நமக்கான அழைப்பு..!
இவண்
JSK சதீஸ்குமார்.
JSK Film Corporation
அந்தத் திரையரங்கை அடுத்த 2 அல்லது 3 வருடங்களுக்கு சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிர நடவடிக்கை எடுக்காமல் சல்ஜாப்பு செய்தால் இது வேலைக்கு ஆகாது என்பதை தமிழ்த் திரையுலகப் பெரியோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..!











