full screen background image

நாளை நமதே – சினிமா விமர்சனம்

நாளை நமதே – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஸ்ரீதுர்கா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக வி.ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.

படத்தில் மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில்குமார், முருகேசன், மலர்கண்ணு, உமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இசை விஹெச் ஹரிகிருஷ்ணன். இந்தப் படத்தை வெண்பா கதிரேசன் எழுதி இயக்கியிருக்கிறார்.

தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே ஒழிக்கப்பட முடியாததாக இருக்கும் சாதி பிரச்சனையை மையமாக வைத்துதான் இந்தப் படமும் வெளியாகி உள்ளது. ஆனால், மிகவும் தரமான திரைப்படமாக!..

சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம். அங்கே பட்டியல் சாதியினரும், மேல் சாதி மக்களும் இணைந்துதான் வாழ்கின்றனர் 15 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த ஊராட்சியை பட்டியல் இனத்தவர்களுக்கான ஊராட்சியாக அரசு அறிவிக்கிறது. இதை எதிர்பார்க்காத மேல் சாதியினர் கடுமையாக எதிர்க்கின்றனர்.

அந்த ஊராட்சி தேர்தலில் பட்டியலை இன மக்கள் சார்பாக போட்டியிடச் சென்றவரையும், அவரது உறவினர்களையும் வெட்டி கொலை செய்கின்றனர் மேல் ஜாதியினர்.

இதனால் இருத ரப்புக்கும் இடையே கலவரம் நடக்கிறது. ஊருக்குள் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதையடுத்து இரு தரப்பினரும் அரசு மத்தியஸ்தம் செய்து அமைதியை திரும்ப வர வைக்கிறது. அதன் முடிவாக அந்தத் தொகுதி மறுபடியும் பொதுத் தொகுதியாக மாற்றம் செய்யப்படுகிறது.

அதன் பின்பு இப்போதைய 15 வருட கால கட்டத்திலும் மேல் சாதியைச் சேர்ந்த ராமையா என்ற ஒருவரே ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு வந்திருக்கிறார்.. அதுவும் யாரும் எதிர்த்து போட்டியிடாத சூழலில்!

இப்போது 15 ஆண்டுகள் காலம் கழித்து மீண்டும் ஊராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்படுகிறது. மீண்டும் இதே கிராமம் பொதுப் பட்டியிலிலிருந்து பட்டியல் இன மக்களுக்கானது என்று மாற்றப்படுகிறது.

இதை எதிர்பார்க்காத ராமையாவும், அவரது அணியினரும் இதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். அந்தக் கிராமத்தில் எப்போதும் தலைவர் பதவியை ஏலத்திற்கு விடுவார்கள். ஏலத் தொகையை மிக அதிகமாக கேட்டவரே அந்த தொகுதியின் ஊராட்சி மன்ற தலைவராக எதிர்ப்பு இல்லாமல் தேர்ந்தெடுக்கப்படுவார். இவருக்கு எதிராக யாருமே வாக்களியுங்கள் தேர்தலில் நிற்கவே மாட்டார்கள். அதனால் இந்தக் கிராமத்தில் இதுவரையிலும் தேர்தல் நடக்கவே இல்லை என்பதுதான் உண்மை.

இப்பொழுது ராமையாவின் பங்காளியான பாண்டியும் அதே ஊரில் கொஞ்சம் பிரபலமானவராகவும், பணக்காரராகவும் இருக்கிறார்அவருக்கு தான் தலைவராக வேண்டும் என்று ஆசை. இதனால் ஏலத் தொகையை தான் கட்டி விடுவதாக சொல்லிவிட்டு பட்டியலின மக்கள் சார்பாக தன்னுடைய பண்ணையில் வேலை செய்யும் பெருமாளை தான் நிறுத்தி ஜெயிக்க வைப்பதாகவும் அதன் பின்பு அந்த பெருமாளை முன்னிறுத்தி தானே ஆக்டிங் தலைவராக செயல்பட்டு கொள்வதாகவும் கிராமத்தில் இருக்கும் மேல் சாதிப் பிரமுகர்களிடம் வாக்குறுதி தருகிறார் பாண்டி.

இதற்கு ஒத்துக் கொள்ளும் ஊர் பிரமுகர்கள் பெருமாளை தேர்வு செய்து அவரைப் போட்டியிட வைக்கிறார்கள் ஆனால் எதிர்பாராதவிதமாக பெருமாளின் வருங்கால மருமகளான நாயகி மதுமிதாவும் தேர்தலில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

தேர்தலில் போட்டி என்று இருந்தால் நிச்சயமாக கிராமத்தில் வாக்குப் பதிவு நடைபெற்றேயாக வேண்டும் அப்படி ஒரு வாக்குப் பதிவு நடைபெற்றால் அது நமது சாதிக்கும், நம்முடைய பெருமைக்கும் பங்கம் என்று நினைக்கும் ஊர் பிரமுகர்கள் மதுமிதாவை போட்டியிலிருந்து வாபஸ் பெறும்படி பல வகைகளிலும் வற்புறுத்துகிறார்கள். மிரட்டுகிறார்கள். விரட்டுகிறார்கள். அடிக்கிறார்கள். ஆனால், அத்தனையும் மீறி மதுமிதா தான் இந்த தேர்தலில் நிற்பேன் என்று உறுதியாகச் சொல்கிறார்.

அதே சமயம் இந்த தேர்தலை நடக்காமல் பார்த்துக் கொள்ள ராமையாவும் ஒரு பக்கம் முயல்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியும் முயற்சி செய்கிறார். இவர்கள் இருவரில் யார் வெற்றி பெற்றது?.. அந்த ஊரில் வாக்குப் பதிவு நடந்ததா?.. மதுமிதா வெற்றி பெற்றாரா? இல்லையா?.. என்பதுதான் இந்தப் படத்தின் ஒரு சுவையான திரைக்கதை.

இந்தப் படத்தில் நடித்தவர்களில் முக்கால்வாசி பேர் புதுமுகங்கள். அந்த கிராமத்து முகங்கள். எந்த ஒரு நடிப்பு அனுபவமும் இல்லாமல் மிக மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

படத்தின் நாயகியான மதுமிதா அச்சுஅசலாக அந்த கிராமத்து பெண்ணாகவே நமக்கு தெரிகிறார். படித்தப் பெண்ணாக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் அவர் எதிர் கொள்ளும் சாதிய பேச்சுக்களை கேட்டது போலவே காட்டிக் கொள்ளாமல், ஆனால் அந்த வலியை தன் முகத்திலும், பேச்சிலும் காட்டும்விதத்திலும் அசத்தியிருக்கிறார்.

தன்னுடைய வருங்கால கணவரிடம் கூட இறங்கிப் போகாமல் காதல் என்ற உணர்வினை வெளிப்படுத்திக் கொள்ளாமல் திருமணத்திற்கு தயாராக இருந்தும் அம்மா, அப்பாவுக்காக அதை ஏற்றுக்கொண்ட திருப்தியோடு ஒரு புதுமையான புதுமை பெண்ணாக இந்த நாயகியின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர்.

தன் இனத்து ஆண்களை தூண்டி விடும்போதும் வேறு வழியில்லாமல் தானே நிற்க வேண்டிய சூழல் வரும்போது அதை தயங்காமல் ஏற்றுக்கொண்டு தைரியமாக முன் வந்து தேர்தலில் போட்டியிட விண்ணப்பத்தினை பதிவு செய்யும் போதும் சபாஷ் என்று சொல்லி கை தட்ட வைத்திருக்கிறார் நாயகி மதுமிதா.

அதேபோல் தன்னை அடித்து உதைக்கும் பாண்டியின் மனைவி திடீரென்று நெஞ்சு வலியால் அவதிப்பட அவருக்கு தேவையான முதல் உதவி சிகிச்சையையும் செய்துவிட்டு தன்னுடைய எண்ணங்களை மௌனமாக வெளிப்படுத்தும் அந்தக் காட்சியில் நாயகியின் நடிப்பும், இயக்கமும் அட்டகாசம் என்று சொல்லலாம்.

ஊராட்சி மன்ற தலைவர் ராமையா கதாபாத்திரத்தில் நடித்தவரும், பாண்டியாக நடித்தவரும் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்து விட்டார்கள் என்று சொல்லலாம். அதிலும், அவர்களுடைய பேச்சிலும், நடத்தையிலும் ஒவ்வொரு வரியிலும் சாதி.. சாதி.. சாதி.. என்ற அந்த சாதியை தலையில் தூக்கிக் கொண்டு அலைவதை அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பதிவு செய்திருக்கிறார்கள்.

சாதி வன்மம் எந்த அளவுக்கு அவர்களிடையே ஊடுருவி இருக்கிறது என்பதை ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருந்தாலும் பட்டியலின மக்களை மேலே வர விடக் கூடாது என்பதற்காக மட்டுமே இருவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவதை போல ராமையா, பாண்டியன் வீட்டுக்கு வந்து பேசுகின்ற அந்தக் காட்சியை அழகாக படமாக்கி இருக்கிறார் இயக்குநர்.

மேலும் நாயகியின் அம்மாவாக நடித்தவர், அத்தையாக நடித்தவர், அவர்கள் குடும்பத்து பெண்களாக நடித்த அனைவருமே அந்தந்த கேரக்டர்களுக்கேற்ற நடிப்பினை அழகாக காண்பித்திருக்கிறார்கள்.

அப்பாவி பெருமாளாக நடித்தவரை பல திரைப்படங்களில் நாம் பார்த்திருக்கலாம். சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தனக்கென்று ஒரு பெயரை பெற்று சென்று இருக்கிறார். அவருக்கும் நமது வாழ்த்துக்கள்.

மீடியம் பட்ஜெட் படங்களுக்கே உரித்தான மிக அழகான ஒளிப்பதிவினை இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் பிரவீன் தந்திருக்கிறார். படத்தின் சண்டைக் காட்சிகளை மிக எதார்த்தமாக படமாக்கி இருப்பதோடு அந்தப் படத்தின் சூழ்நிலையையும் இயல்பாக இப்போது எப்படி இருக்கிறதோ அப்படியே காண்பித்து இருக்கிறார்கள்.

இசையும், பாடல்களும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது பி.ஜி ஹரி கிருஷ்ணனின் இசை.

மனிதனுக்கு மனிதன் அடிமை அல்ல என்று சொல்லும் இந்தக் காலகட்டத்திலும் சாதி என்கின்ற பெயரால் சக மனிதனை அடிமைப்படுத்தி பேசும் பேச்சுக்கள் நகரங்களை விடவும் கிராமங்களில்தான் மிக மிக அதிகமாகவே இருக்கிறது.

இதற்கு காரணம் பட்டியலின பெரியவர்கள் தாங்கள் வாழும் வரையிலும் அதே கிராமத்திலேயே வாழ வேண்டும் என்று நினைப்பதும், இதனால் தங்களுடைய இளையவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டு விடக்கூடாது என்று அவர்கள் நினைப்பதும்தான்.

அரசுகளும், அதிகாரமும், போலீசும் எப்போதும் மேல் சாதி மக்களுக்காகவே இயங்குகின்றன என்பதை பல சந்தர்ப்பங்களிலும் நேரில் பார்த்துவிட்டு அந்த பெரியவர்கள் இப்போதுவரையிலும் தாங்கள் ஒரு அடிமைகள் என்பதை சொல்லாமலேயே அடிமைகளாகவே வாழ்ந்து மடிகிறார்கள்.

இந்த கருத்தைத்தான் இந்தப் படத்தில் இயக்குநர் வெண்பா கதிரேசன் மிகவும் அழுத்தந்திருத்தமாக சொல்லி இருக்கிறார். மற்ற படங்களில் எல்லாம் கிளைமாக்ஸில் தோல்வி கண்டு துவண்டு கண்டு வீழ்ந்ததைத்தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் படத்தில் ஒரு புது நம்பிக்கையாக பட்டியலின மக்கள் ஜெயிப்பதை காட்டி நிச்சயமாக இது ஒரு புதிய திருப்பத்தை அவருடைய வாழ்க்கையில் கொடுக்கும் என்பதாக படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெண்பா கதிரேசன்.

வெறும் சாதிப் பெருமைக்காக மட்டுமே தலைவராகவும் அனைவரும் அவரவர் குடும்பத்தினரை மட்டும் வளப்படுத்திவிட்டு கிராமங்களை அப்படியேதான் இப்போதும் சீர்கேடாகவே வைத்திருக்கிறார்கள் என்பதையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஒரு தனிநபர் சாதியை மையமாக வைத்து எப்படி தன்னை வளப்படுத்திக் கொள்கிறார் என்பதுவும் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தின் உரையாடல் மிக மிக அருமை. அத்தனையும் கூர்மையான வசனங்கள். இன்றைய சாதி பிரிவினைகளையும், இன்றைய அரசியல் நிலவரத்தையும் தெள்ளத் தெளிவாக சொல்வதைப்போல இதில் பேசப்பட்டிருக்கும் வசனங்கள் நிச்சயமாக இன்றைய அரசியல் கட்சிகளை கேள்விக்குறியாக்குகிறது.

இந்தக் கேள்விகளுக்கான விடையை அடுத்த தலைமுறைதான் தர வேண்டும். தருவார்கள் என்ற நம்பிக்கையோடு இந்தப் படத்தை அவசியம் அனைவரும் பார்த்தே தீர வேண்டும்.

RATING : 4 / 5

Our Score