full screen background image

நாச்சியார் – சினிமா விமர்சனம்

நாச்சியார் – சினிமா விமர்சனம்

பாலாவின் பி ஸ்டூடியோஸ் நிறுவனமும், EON Studios நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.

படத்தில் ஜோதிகா மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார், இவானா, தமிழ்க்குமரன், ராக்லைன் வெங்கடேஷ், டாக்டர் குரு சங்கர், பிரவீணா பிரமோத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஈஸ்வர், இசை – இசைஞானி இளையராஜா, படத் தொகுப்பு – சதீஷ் சூர்யா, கலை இயக்கம் – சி.எஸ்.பாலசந்தர், சண்டை இயக்கம் – சுப்ரீம் சுந்தர், பாடல்கள் – தமிழச்சி தங்கபாண்டியன், மக்கள் தொடர்பு – நிகில்.

பாலாவின் படங்கள் என்றாலே அதீத வன்முறை, கொடூரமான காட்சிகள், ஏற்க முடியாத வசனங்கள் என்று முகத்தில் அடித்தாற்போன்ற காட்சிகளே இருக்கும். இந்த ஒவ்வாமையினால்தான் வேறுபட்ட சினிமாவை பார்க்க விரும்பும் தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு பாலா கண் கண்ட தெய்வமாகி மற்றைய வழமையான ரசிகர்களுக்கு விரோதியாகவும், அன்னியனாகவும் தெரிகிறார். ஆனால் இந்தப் படத்தில் இவர்தான் அந்த பாலாவா என்று கேட்க வைத்திருக்கிறார்.

அடையாறு பகுதிக்குட்பட்ட பகுதியில் துணை போலீஸ் கமிஷனராக இருக்கிறார் நாச்சியார் என்னும் ஜோதிகா. ரஃப் அண்ட் டஃப் கேரக்டர். சிரிக்கவே தெரியாத அல்லது சிரிக்கவே கூடாது என்ற கொள்கையுடைய கண்டிப்பான அதிகாரி. ஆண்கள், பெண்கள் என்றெல்லாம் பார்ப்பதெல்லாம் கிடையாது. அக்யூஸ்ட்டுகள், பொதுஜனம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கவும் விரும்பாத ஒரு அக்மார்க் காக்கி யூனிபார்ம் ஆபீஸர்.

இவரது கணவர் ஒரு மருத்துவர். பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். மகள், கணவருடன் ஒரு வெளியூர் டூருக்காக லீவ் லெட்டர் கொடுத்துவிட்டு கிளம்பும்போது ஒரு தகவல் அவருக்குக் கிடைக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பாக ஒரு மைனர் பொண்ணை கர்ப்பமாக்கிவிட்டு ஒரு ஆள் ஓடிவிட்டான். அந்தப் பெண்ணும் மருத்துவமனையில் இருந்து எங்கோ சென்றுவிட்டாள் என்ற புகார் வந்திருந்தது. அந்தப் பெண் இப்போது ரயில்வே நிலையத்தில் இருப்பதாக தகவல் வர.. வேகமாக அங்கே செல்கிறார் ஜோதிகா.

அதற்குள்ளாக இவானா என்னும் அந்தப் பெண்ணின் அக்காள் கணவர் அவளை காரில் அழைத்துக் கொண்டு போக.. விரட்டிப் பிடித்து பெண்ணை மீட்கிறார் ஜோதிகா.

இதே நேரம் இவளை கர்ப்பவதியாக்கிய அந்தப் புண்ணியவானான காத்து என்னும் காத்தவராயன் என்னும் ஜி.வி.பிரகாஷை ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மிகவும் கஷ்டப்பட்டு விரட்டிப் பிடிக்கிறார்.

தனக்கு காத்திடம்தான் பழக்கம் ஏற்பட்டது. அதனால்தான் தான் கர்ப்பமானேன் என்கிறார் இவானா. தன்னுடைய காதலிதான் இவானா என்கிறான் காத்து. இருவருமே மைனராக இருப்பதால் வழக்கு பதிவு செய்ய வேண்டிய கட்டாயமாகிறது.

மைனர் பெண் கர்ப்பம் என்றால் அதற்குக் காரணமான ஆணின் மீது கற்பழிப்பு வழக்குதான் பதிவு செய்தாக வேண்டும் என்கிற சட்டம் இருப்பதால் அதேபோல் வழக்கும் பதிவாகிறது.

காத்துக்கு தான் பிறந்த வரலாறே தெரியாது என்பதால் அவர் மைனரா அல்லது மேஜரா என்பதையறிய சோதனை நடத்தும்படியும், அதுவரையிலும் அவரை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத்து வைக்கும்படியும் உத்தரவாகிறது.

அதேபோல் இவானாவை தனது பொறுப்பில் தன் வீட்டில் வைத்து வளர்க்க விரும்புவதாக எழுதிக் கொடுத்து தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார் ஜோதிகா. குழந்தை பிறக்கும்வரையிலும் காத்திருந்து இப்போது டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்கிறார்கள்.

ஆனால் அந்த டெஸ்ட்டில் அந்தக் குழந்தையின் டி.என்.ஏ.வும், ஜி.வி.பிரகாஷின் டி.என்.ஏ.வும் ஒத்துப் போகவில்லை என்பதால் ஜி.வி.பிரகாஷ் அந்தக் குழந்தையின் தகப்பனாக இருக்க முடியாது என்று ரிசல்ட் சொல்கிறது. அதிர்ச்சியான ஜோதிகா இவானாவிடம் மேலும், மேலும் விசாரிக்கிறார்.

இன்னொரு பக்கம் இவானா ஆண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டதை அறிந்து தனது குழந்தையைப் பார்க்கத் துடிக்கிறான் காத்து. இவானாவிடம் உண்மையை அறிந்து உண்மையான கற்பழிப்பு நாயகன் யார் என்பதை அறிய முனைகிறார் ஜோதிகா.

இது அவரால் முடிந்ததா..? யார் அந்தக் குற்றவாளி..? இறுதியில் என்ன ஆகிறது…?” என்பதுதான் படத்தின் திரைக்கதை.

பாலாவின் படங்களிலேயே இதுதான் மிகச் சிறந்த படம் என்று உறுதியாய் சொல்லலாம். சிறந்த கதை, திரைக்கதை, வசனம், கேரக்டர் ஸ்கெட்ச், இயக்கம் என்று அனைத்திலும் முதல் தரமாய் அமைந்திருக்கிறது இத்திரைப்படம்.

எப்படியும் தன்னுடைய ஸ்டைலில்தான் படத்தை இயக்க முடியும் என்று யோசித்துதான் போலீஸ் சம்பந்தப்பட்ட கதையை முடிவு செய்திருக்கிறார் பாலா. இதுதான் அவரது ஸ்டைலுக்கு கொஞ்சம் ஸ்டைலிஷ் செய்திருக்கிறது.

ஜோதிகாவை இந்த அளவுக்கு யாரும் இதுவரையில் பயன்படுத்தியதில்லை. முற்றிலும் புத்தம் புதிய ஜோதிகாவை இந்தப் படத்தில் பார்க்க வைத்திருக்கிறார் பாலா. முறுக்கேறிய உடல்.. பயமுறுத்தும்படியான பார்வை.. அதிகாரமான குரல்.. வளைந்து கொடுக்காத தன்மை.. மிடுக்கான போலீஸ் உடையில் ஜோதிகாவை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.

இதைவிடவும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை மிக கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார் பாலா.  ஜோதிகா அறிமுகமாகும் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சிவரையிலும் அந்த ‘நாச்சியார்’ என்ற கேரக்டரில் இருந்து அவர் வெளியில் வரவேயில்லை.

தவறுதலாக முன்னால் இருந்த டூவிலரில் மோதிவிட்டு அவனையே திட்டும் தனது போலீஸ் டிரைவரை கண்டித்து ‘வண்டியை எடுடா’ என்று தனது சக ஊழியரையே ‘டா’ போட்டு பேசித்தான் தனது நடிப்பைத் துவக்குகிறார் ஜோ. இதே நடிப்புதான் கடைசிவரையிலும்..!

ஜி.வி.பிரகாஷுக்கு வேலை கொடுத்த ஒப்பந்தக்காரரை அடித்துத் துவைத்துவிட்டு “நான் அடிச்சிட்டுத்தான் விசாரிப்பேன்…” என்று திமிராகப் பேசும்போது இதுக்கு ஆம்பளை போலீஸே பரவாயில்லை போலிருக்கு என்று கொஞ்சம் முணுமுணுக்கவும் வைத்திருக்கிறார்.

அந்த போலி டாக்டரை அவரது ஆஸ்பத்திரிக்கே போய் கெத்தாக விசாரித்து கடைசியாக அவரைப் போட்டுத் தாக்கி உண்மையை வரவழைக்கும்போது ரசிகர்களிடையே இன்னொரு அதிர்ச்சியும் வெளிப்படுகிறது.

மார்வாடியை ஹோட்டலுக்குள் புகுந்து அடித்து, உதைத்து கடத்திச் சென்று நரம்பை துண்டித்து படுத்த படு்க்கையாக்கும் காட்சியில் ஜோதிகா அவருடைய பெண்மையின் வெளிப்பாடாய்தான் இந்த அளவுக்கு குரூரமாய் நடந்து கொள்கிறார் என்பது தெரியும்வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் பாலா. ஆனால் இது நிஜத்தில் நடக்க முடியாத லாஜிக் மிஸ்டேக் என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

தன்னுடன் டீலிங் பேசும் மார்வாடியின் மகனை கன்னத்தில் அறைந்து “தேவடியா மகனே..” என்று திட்டுகிறார்.  நல்லவேளை இந்த வசனத்தை மியூட் செய்திருக்கிறார்கள். ஆனால், இந்த ஒரு காட்சியை வைத்தே இந்தப் படத்துக்கு துவக்கத்தில் ஒரு மிகப் பெரிய பார்வையை இழுத்துவிட்டார் பாலா. அவரது இந்த வியாபாரத் திறமையையும் பாராட்டுகிறோம்.

தன்னை அழைத்து அவமானப்படுத்திய டெபுடி கமிஷனரம்மாவை கடைசியாக திட்டித் தீர்த்துவிட்டு “போடி” என்று சொல்லிவிட்டுப் போகும் காட்சியில் கை தட்டவும் வைத்திருக்கிறார் ஜோ.

வேலையில் மட்டும்தான் இப்படி இல்லை. வீட்டிலும் தான் அப்படித்தான் என்பதாக பல காட்சிகளில் உணர்த்தியிருக்கிறார். ஒரு காட்சியில் கணவரையே “வார்த்தையை பார்த்து பேசுங்க” என்று எச்சரிக்கிறார். மகளிடம் கனிவாகப் பேச வராமல் தன்மையாகவே பேசுகிறார்.

கிளைமாக்ஸில் ஜெயில் வாசலில் அழுது கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷிடம் அந்த நிலைமையிலும் அதிகாரமாய் “இங்க வாடா…” என்று தனது போலீஸ் கெத்து குறையாமல்தான் பேசுகிறார் நாச்சியார்.

இறுதியில் கணவர் எவ்வளவோ வற்புறுத்தியும் உண்மையைச் சொல்லாமல் மறைக்குமிடத்தில்தான் ‘ஜோ’ என்னும் நாச்சியார் நம் மனதில் இடம் பிடிக்கிறார். ஜோதிகாவின் ரீ எண்ட்ரியில் இந்தப் படம் அவருக்கு மகுடமாய் திகழ்கிறது..!

ஜி.வி.பிரகாஷ் இதுவரையில் நடித்த படங்களிலெல்லாம் பிளேபாய் கேரக்டர், கல்லூரி மாணவர் கேரக்டர் என்று வழக்கமான கதாபாத்திரங்களையே கொடுத்திருந்தார்கள். இந்தப் படத்தில் உண்மையாகவே நடித்திருக்கிறார். நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

விடலைப் பையன் கேரக்டருக்கு மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அந்த வயதில் இருப்பவர்களுக்கு பார்த்தவுடன் காதல் என்றாலும் அது ஏன்.. எப்படி வரும் என்பதற்கெல்லாம் விடை கிடைக்காது. அப்படி விடை கிடைக்காத ஒரு காதலாய்தான் இந்தப் படத்தில் இவரது காதலும் துவங்குகிறது..!

கொஞ்சம் முரட்டுத்தனம்.. சகிப்புத்தன்மை இல்லாதது.. அப்பாவித்தனம்.. காதலியை, மகனை பார்க்க விரும்பும் அவரது ஆர்வமும், பாசப் போராட்டமும் ‘ஐயோ பாவம்’ என்கிற உணர்வை ரசிகர்களுக்குள் ஏற்படுத்தியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

திருமண மண்டபத்தில் இவானாவுக்கும் இவருக்கும் இடையே நடக்கின்ற காட்சிகள் அனைத்துமே மிக இயல்பானவை. ரசனையானவை. இவானாவையும் கவரும் வண்ணம் ஜி.வி.யின் நடிப்பு இருப்பதை புரிந்து கொண்டால், இந்த விடலை பருவக் காதலையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும்.

இவானா என்னும் அறிமுகம் இந்தப் படத்தை பாலா படம் என்பதற்காகவே பிடிக்காமல் இருப்பவர்களுக்குக்கூட பிடித்தவராக இருக்கிறார். நல்ல களையான நடிப்புக்கேற்ற முகம். சிறப்பாகவே நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

முதல் காட்சியில் அறிமுகமாகும் ஷேர் ஆட்டோ காட்சியில் இருந்து அதே ஷேர் ஆட்டோவில் அதே ஹீரோவோடு கையில் குழந்தையோடு தம்பதியாய் பவனி செல்லும் காட்சிவரையிலும் நம்மை கவர்ந்திழுத்திருக்கிறார் இவானா.

முதல் காட்சியில் ஆக்ரோஷமாக கத்தித் தீர்த்துவிட்டு பின்பு மெல்ல மெல்ல ஜி.வி.யின் வழிக்கே செல்வதும், அவரை காதலிப்பதைக்கூட நைச்சியமாகச் சொல்லிவிட்டு வெட்கத்துடன் நடந்து செல்லும் அந்த ஒரு ஷாட்டிலேயே மனதைக் கொள்ளை கொள்கிறார் இவானா.

விழுப்புரத்தில் இருந்து நடந்து வரும் ஜி.வி.க்காக கோயம்பேட்டில் பேருந்தில் ஏறி அப்பாவியாய் கண்டக்டரை அட்ராசிட்டி செய்துவிட்டு மேல்மருவத்தூரிலேயே இறங்கி பரிதவிக்கும் அந்த ஒரு கணம் நடிப்பில் மனதையும் தொட்டுவிட்டார் இவானா. இந்த வருடத்தின் சிறந்த புதுமுகமாகவே இவரை இப்போதே சொல்லிவிடலாம்.

இவர்கள் இப்படியெல்லாம் நடிப்பார்களா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வைக்கும்வகையில் இரண்டு புதுமுக நடிகர்கள் நடிப்பில் ஆச்சரியம் காட்டியிருக்கிறார்கள்.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தன்னைவிட வயதில் குறைவாக இருந்தாலும் நட்புக்காக தனது உயரதிகாரியையே ‘நாச்சியார்’ என்று பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெரு்ககமாக இருக்கிறார். ‘நாச்சியாரின்’ பாணியிலேயே அவருக்கு உறுதுணையாய் இருக்கும் அவரது நடிப்பு பாராட்டுக்குரியது.

இதேபோல் இன்னொரு பக்கம் மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரான டாக்டர் குரு ஷங்கர் ஜோதிகாவின் கணவராக நடித்திருக்கிறார். “பின்னாளில் உண்மை தெரிந்தால் அவர்களுக்குள் பெரிய பிரச்சினை வரும். இப்போதே சொல்லிவிடு” என்று ஜோதிகாவை வற்புறுத்திக் கொண்டேயிருக்கிறார் கணவர். ஆணாதிக்கச் சிந்தனையை அவ்வப்போது அம்பலப்படுத்தும் இவரது கேரக்டர், எப்பேர்ப்பட்ட அரசுப் பதவியில் இருந்தாலும் ஒரு பெண் தன் வீட்டில் எப்படிப்பட்ட நிலைமைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது என்பதை காட்டுகிறது. பாலாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சுகள் அனைத்துமே இந்தப் படத்தில் அற்புதம்..!

சந்தேகப்பட்டதால் தர்ம அடி வாங்கும் காண்ட்ராக்டர், இவானாவின் அக்காள் கணவரான ஜி.கே.குமரன், கம்பவுண்டராக இருந்து மருத்துவராக மாறி சேவை செய்து வந்த போலி மருத்துவர்.. ஜி.வி.யின் பாட்டி.. என்று படத்தில் குறிப்பிடத்தக்க கேரக்டர்களை செய்த அனைவருமே அழகாக நடித்திருக்கிறார்கள்.

போலீஸ் தொடர்பான காட்சிகள் அதிகம் இருக்கின்றன என்பதால் அவைகள் எல்லை மீறாத வகையில் இயல்பாகவே படமாக்கப்பட்டிருக்கின்றன. கடைசியான காட்சியில் போலீஸ் டி.ஜி.பி. நாச்சியாரை அழைத்து விசாரிக்கும் காட்சியில் “ஆணவக் கொலை அதிகம் நடக்குற ஊருக்கு உன்னை டிரான்ஸ்பர் பண்றேன். அங்க போய் உன் வீரத்தைக் காட்டு.. போ.. போ.. டிரான்ஸ்பர் ஆர்டர் வரும்…” என்றும் அதிகாரத் திமிரில் சொல்லும் பேச்சு ஸ்டைல் அசத்தல் ரகம்..!

இதேபோல் கலைஞானம் வீட்டுக்குத் திரும்ப ஆட்டோ பிடித்துத் தரும்படி கேட்க இன்ஸ்பெக்டர் ஏட்டுவிடம் சொல்ல ஏட்டு பெண் போலீஸிடம் சொல்லி உதவி கேட்கும் காட்சிகளெல்லாம் உண்மையானவை. மறுக்க முடியாதவை.

ஜி.வி.யின் டிரவுசரை அவிழ்த்துவிட்டு பார்க்கும் இன்ஸ்பெக்டர் “எப்படிடா..” என்று ஜி.வி.பிரகாஷிடம் கேட்பதும், அவர் கண்ணடித்து பதில் சொல்வதும் அக்மார்க் பாலாவின் ஸ்டைல். இதேபோல் விசாரிப்பு என்ற பெயரில் தலைகீழாக கட்டி வைத்து அடித்துத் துவைப்பது.. பிரார்த்தல் கிளப் நடித்தும் பெண்ணுக்கு வேறு மாதிரியான ட்ரீட்மெண்ட் கொடுப்பது.. மார்வாடியை நடு இரவில் கடத்திச் சென்று நரம்பை கத்தரிப்பது.. போலி மருத்துவரை வீடு கட்டி அடிப்பது மாதிரி செய்வது.. என்று பாலாவின் ஸ்டைல் காட்சிகளும் படத்தில் ஒருங்கே அமைந்திருக்கின்றன.

பாலா தனது படங்களில் எப்போதும் வைத்திருக்கும் கடவுள் மறுப்புக் கொள்கையை இதிலும் சில இடங்களில் கச்சிதமாகப் புகுத்தியிருக்கிறார். “பேசாமல் நாமளே ஒரு சாமியை உருவாக்கியிருவோம்…” என்று எத்தனை சாமிகள், கடவுள்கள் வந்தாலும் நாட்டில் பிரச்சினைகளுக்கு பஞ்சமில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லும் இடத்தில் நகைச்சுவை மிளிர்கிறது.

“கோவிலா இருந்தாலும் குப்பை மேடா இருந்தாலும் எங்களுக்கு ஒண்ணுதான்…” என்று நாச்சியார் சொல்லும் ஒரு டயலாக், பாலாவின் மன விலாசம்தானே ஒழிய வேறில்லை.

சிறுவர் நல நீதிமன்றத்தில் வழக்காடும் அரசு வழக்கறிஞர் “அப்பா வடகலை.. அம்மா தென்கலை” என்று தனது ஜாதியை நீதிபதியிடம் சொல்லும் அளவுக்கு போகும் காட்சியும் கலகலப்பு.. அதே சமயம் உண்மைத்தனமும்கூட..!

நாச்சியாரைக்கூட ஒரு காட்சியில் நெற்றியில் திருநீறிட்டு மங்களகரமாகக் காட்டியிருக்கிறார். இந்த ஒரு காட்சியில்தான் நாச்சியார் அமைதியாக, அன்பாக பேசுகிறார். இதுவும் ஒரு குறியீடுதான்..!

இந்துக்களை மட்டுமல்ல.. முஸ்லீம்களையும் கொஞ்சம் வாரியிருக்கிறார் பாலா. முஸ்லீம் திருமணத்தில் அரேபியாவை பற்றிப் பாடும் பாடலைக் கேட்டுவிட்டு “எங்க வந்து எதைப் பத்தி பாடுறான் பாரு.. அரேபியாவை பத்தி இங்க எவன் கேட்டான்..” என்று ஒரு ரசிகர் பேசுவதுபோல பேசி தனது மத கிண்டலைத் தொடர்ந்திருக்கிறார் பாலா.

போலி மருத்துவர் ஒரு முஸ்லீம் என்பதும், “எனக்குப் பின்னால் இத்தனை பேர் இருக்காங்க தெரியுமா..?” என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த டேபிளையே தூக்கியடித்து அந்தாளை புரட்டியெடுக்கும் காட்சி மூலமாய் காட்டும் நீதி யாருக்கானது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது..!

கொடூரமானவர்கள் என்பதற்கு மார்வாடிகளையும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கிறார். வீட்டு வேலைக்கு வரும் பெண்ணிடம்கூட வட்டிக் கணக்குப் பார்க்கும் ஆண்கள்.. அப்பாவி பெண்களுக்காக இரக்கப்படும் மார்வாடி பெண்கள்.. ஆணாதிக்கவாதியாய் அப்பன் செய்த தவறை மறைக்க நினைக்கும் மார்வாடி மகன்.. எதற்கும் பணத்தை எடுத்து வீச தயாராக இருக்கும் வாரிசுகள் என்று மார்வாடிகளையும் போட்டுத் தள்ளியிருக்கிறார் பாலா.

ஆனால் இதற்கெல்லாம் முன்னேற்பாடாகத்தான் டைட்டிலேயே “இந்தப் படம் எந்தவொரு மதத்தினரையும், இனத்தினரையும், ஜாதியினரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடவில்லை..” என்று அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு..?

தேனி ஈஸ்வரின் அட்டகாசமான ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். படத்தின் துவக்கக் காட்சியில் குப்பை மேடுகளை ஆகாயத்தில் இருந்து படம் பிடித்தபடியே நகர்ந்து அப்படியே குப்பைகளைத் தாண்டி கூவம் ஆறு.. அவற்றையும் தாண்டி சாலை.. அதன் பின்பு இந்தச் சென்னைக்கு சம்பந்தமே இல்லாதவகையில் கோபுரங்களாய் இருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் என்று சென்னையின் உள்ளரங்கத்தை அழகாய் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ஜி.வி.யை இன்ஸ்பெக்டர் விரட்டிப் பிடிக்கும் காட்சியும், இவானாவை ஜோதிகா ஜீப்பில் துரத்திப் பிடிக்கும் காட்சியையும் ஒளிப்பதிவாளர் துணையுடன் அதே பரபரப்புடன் படமாக்கியிருக்கிறார்கள். இருக்கின்ற ஒரேயொரு பாடல் காட்சியையும் அந்தக் காட்சியின் தன்மை மாறாமல் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

முதல் காட்சியில் துவங்கும் பின்னணி இசை கடைசிவரையிலும் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் சமர்த்துப் பிள்ளையாய் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. இசை இளையராஜா என்று இருக்கும்போது இப்படித்தானே இருக்கும்..!?

வெறும் 100 நிமிடங்களில் இறுக்கமான திரைக்கதையில் படத்தை கச்சிதமாக நறுக்கிக் கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் சதீஷ் சூர்யா. இதற்காகவே இவருக்கு ஒரு பெரிய வணக்கத்தை போடலாம்.

இத்தனை சிறப்பாக படத்தை உருவாக்கியிருக்கும் பாலா இந்த வழக்கில் சிறுமி மீது கற்பழிப்பு என்கிற புகாரை போலீஸில் கொடுத்தது யார் என்பதையும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம். இந்த ஒரு கேள்விக்கான பதில் படத்தில் இல்லாததால் பாலாவின் எதிர்ப்பாளர்கள் இது ஒன்றை மையமாக வைத்தே படத்தை புறந்தள்ளி பேசி வருகிறார்கள்..! சரி.. போகட்டும்.. விட்டுவிடுவோம்..!

சிறுவர், சிறுமியர் அத்து மீறுவது இயல்புதான். தாகம் வந்தால் தண்ணீர் குடிப்பது போன்ற ஒரு குணம்தான் செக்ஸ். அதனை அடையும் வழி தெரியுமென்றாலும், பாதுகாப்பாக அடையும் வழிதான் சிறுவர்களுக்குத் தெரிவதில்லை. அது அவர்களைப் பொறுத்தவரையில் இப்போதுவரையிலும் அறியாத விஷயமாக இருக்கிறது.

சட்டத்தைப் பொறுத்தவரையில் இது தவறுதான். ஆனால் தார்மீக ரீதியாக “எனது மகன், எனது காதலி, எனது மனைவி.. நான் நல்லா பாத்துக்குவேன்.. என்னைக்கும் கைவிடமாட்டேன்…” என்று ஒரு படிப்பறிவில்லாத இளைஞன் சொல்லும்போது அதற்கு சட்டம் மரியாதை கொடுத்துதான் ஆக வேண்டும்.

தெரிந்து செய்யும் குற்றங்களுக்குத்தான் தண்டனையே தவிர, தெரியாமல் செய்யும் குற்றங்களுக்கு அல்ல என்பதைத்தான் பாலா இந்தப் படத்தில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

அந்த வகையில் பாலாவின் இந்த ‘நாச்சியார்’ சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பார்த்து, தெரிந்து, விவாதித்து, பரவலாக பரப்ப வேண்டிய ஒரு மிகப் பெரிய விஷயத்தைக் கொண்டுள்ளது.

இந்த மாற்றம் நம்மில் இருந்தே துவங்கப்பட வேண்டும் என்பதுதான் பாலாவின் விருப்பம்..! அதனால்தான் யாராலும் மறுக்க முடியாத காதலை கையில் எடுத்திருக்கிறார்..!

பாலாவின் இந்த ‘நாச்சியார்’ சொல்லும் காதல்கூட உயர்வான ஒரு காதல்தான்..! இதில் சந்தேகமேயில்லை..!

இந்தப் படத்தில் பங்கு கொண்ட அத்தனை நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

‘நாச்சியார்’ பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்..!

Our Score