ஒரு படத்துக்கு தலைப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதுதான் கதையின் முக்கிய அம்சங்களை அதிக தாக்கத்துடன் சொல்கிறது. சில நேரங்களில், அதுவே படத்துக்கான ஈர்ப்பாகவும் மாறுகிறது. அதுவே படம் எதை பற்றியது என்பதை அறியும் ஆர்வத்தையும், கதையுடன் அதன் பொருத்தத்தையும் அறிந்து கொள்ள தூண்டுகிறது.
அந்த வகையில் நேற்று வெளியான சசிகுமார் மற்றும் சரத்குமார் நடிக்கும் ‘நா நா’ படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சசிகுமாருடன் சரத்குமார் தோன்றும் படத்தின் முதல் தோற்றம், கதாநாயகனுக்கு இணையான ஒரு வலுவான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறாரா என்பது குறித்து ஒரு உடனடி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தை கல்பதரு பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார்.
ஒளிப்பதிவு – கணேஷ் சந்திரா, இசை – ஹர்ஷவர்த்தன் ராமேஸ்வர், படத் தொகுப்பு – எஸ்.பி.ராஜாசேதுபதி, சண்டை இயக்கம் – ஆர்.சக்தி சரவணன், உடை வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர், பாடல்கள் – கபிலன் வைரமுத்து, ஏக்நாத், நிர்வாகத் தயாரிப்பு – கனிஷ்க், எழுத்து, இயக்கம் – என்.வி.நிர்மல்குமார்.
படத்தின் இயக்குநரான என்.வி.நிர்மல்குமார் படம் குறித்து பேசும்போது, “இந்தப் படத்தில் சரத்குமாரின் பங்கு நிச்சயமாக கதாநாயகன் சசிகுமார் போலவே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
திரைக்கதையை எழுதும்போதே, இது ஒற்றை கதாபாத்திரத்தால் இயக்கப்படும் படம் அல்ல, ‘இரட்டை கதாபாத்திரங்கள்’ மூலம் கதை நகரும் என்பதை என்னால் எளிதாக உணர முடிந்தது.
நான் மற்றும் எனது குழுவில் உள்ள அனைவருமே சசிகுமார் மற்றும் சரத்குமார் சார் ஆகியோர்தான் இந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாகவும், முழுமையாகவும் இருப்பார்கள் என்று உணர்ந்தோம். இப்படத்தின் பெரும்பாலான பகுதிகளை சென்னை மற்றும் மும்பையில் இப்போது படமாக்கி இருக்கிறோம்.
படத்தின் தலைப்பு மிகப் பெரிய ரகசியம். நீங்கள் படம் பார்க்கும்போது நிச்சயமாக தலைப்பு நியாயமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்…” என்றார்.