full screen background image

முதல் நீ முடிவும் நீ – சினிமா விமர்சனம்

முதல் நீ முடிவும் நீ – சினிமா விமர்சனம்

சூப்பர் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சமீர் பாரத் ராம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்தில், அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், K.ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன், மீத்தா ரகுநாத், வருண் ராஜன், சரஸ்வதி மேனன், சச்சின், கௌதம் ராஜ் CSV, ஹரினி ரமேஷ், கிஷன் தாஸ் உட்பட இளம் நட்சத்திர நடிகர்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சுஜித் சாரங், படத் தொகுப்பு – ஸ்ரீஜித் சாரங், பாடல்கள் – தாமரை, கீர்த்தி காபர் வாசுகி, இணை இயக்கம் – கிரியேட்டிவ் புரொடியூஸர் – ஆனந்த், கலை இயக்கம் – G.வெங்கட் ராம், விளம்பர வடிவமைப்பு – கண்ணதாசன் D.K.D., ஒலி வடிவமைப்பு – ராஜ கிருஷ்ணன் M.R., கலரிஸ்ட் – நவீன் சபாபதி.

இசையமைப்பாளர் தர்புகா சிவா இந்த ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தை எழுதி, இசையமைத்து இயக்கியிருக்கிறார். இது இவருடைய முதல் படமாகும்.

இந்த முதல் நீ முடிவும் நீ’ திரைப்படம், இன்றைய இளைய சமூகத்தின் உணர்வுகளை மையமாக கொண்ட மென்மையான டிராமாவாக உருவாகியுள்ளது.

வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வாழ்வில் மன அமைதியை பெறுவது பற்றியான கதைக் கருவில் இப்படம் உருவாகியுள்ளது.

சென்னையில் 1990’s களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் இந்தக் கதை விவரிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கால இளைய சமுதாய சிறுவர்களின் மனவெளியைப் பிரதிபலிப்பதுடன், அவர்களின் மன நிலையையும் படம் பிடித்துக் காட்டுகிறது. பின்னர் கதை வேறொரு இடத்திற்கு நகர்ந்து, வாழ்க்கையின் தேடல்களையும், நோக்கத்தையும் அடைவது குறித்தான மையக் கருப் பொருளை கொண்டுள்ளது.

உங்களுக்கு எது வேண்டுமோ.. அதை அடைய உறுதியும், சகிப்புத்தன்மையும் வேண்டும் என்னும் அறிவுரையைத்தான் இயக்குநர் இந்தப் படத்தின் மூலமாகச் சொல்லியிருக்கிறார்.

‘நியூயார்க் திரைப்பட விருது விழாவில், இந்த ‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படம் சிறப்புமிகு கௌரவ விருதை(Honourable Mention) வென்றுள்ளது. மேலும், மாசிடோனியாவில் நடைபெற்ற ஆர்ட் ஃபிலிம் விருது விழாவிலும் இத்திரைப்படம் ‘சிறந்த இயக்குநர்’ விருதினை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, உலகெங்கிலும் உள்ள பல்வேறு திரைப்பட விழாக்களில் இப்படம் அதிகாரப்பூர்வமாக திரையிடப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஜனவரி 21, 2022 அன்று ZEE-5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

காதலும், காதல் சார்ந்த கதையும்தான் இந்த ‘முதல் நீ முடிவும்’ நீ திரைப்படம். எந்த ஒரு மனிதனும் தன்னுடைய முதல் காதலையும், முதல் முத்தத்தையும் மறக்க முடியாது. அதேபோல் எந்தவொரு மனிதனின் முதல் காதலும் வெற்றி அடைந்ததாகவும் சொல்லவே முடியாது. அத்தனை முதல் காதல்களும் நிறைவேறாத கானல் நீராகத்தான் போயிருக்கின்றன.

இந்த நிறைவேறாத காரணத்தாலேயே முதல் காதல் என்பது நமது மனதிலிருந்து அழிக்க முடியாததாக மாறி விடுகிறது. ஆனால், அந்த முதல் காதலே முடிவான காதலாகவும் இருக்க முடியுமா என்ற ஒரு சிந்தனையை இந்தப் படத்தின் மூலமாக நமக்குக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

புறம் சார்ந்த இழப்புகளைவிட அகம் சார்ந்த இழப்புகள்தான் மிகப் பெரியது. ரொம்பவும் கொடியது என்பதை படம் போகிற போக்கில் அழகாகச் சொல்லிச் செல்கிறது.

வழக்கமாக பள்ளிப் பருவ காதல்களை சொல்லும் படங்களில் எல்லாமே ஃப்ளாஷ்பேக் மூலமாகத்தான் கதையைச் சொல்வார்கள். ஆனால் இந்தப் படத்தில் அப்படியே அதை மாற்றி  நேரடியான கதை சொல்லலாக படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

முன் பாதியில் 1990-களின் இறுதியில் நடைபெறுவதாக சொல்லப்படும் கதை இரண்டாம் பாதியில் தற்காலத்திற்கு வந்து முடிவு பெறுகிறது.

நாயகன் கிஷன் தாஸ், நாயகி அமிர்தா, இன்னொரு நாயகி புர்வா ரகுநாத், நாயகனின் நண்பர்கள் ஹரிஷ், சரண் குமார், ரகுல் கண்ணன், மஞ்சுநாத் ஆகியோர் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒன்றாக படித்து வந்ததால் நாயகன் கிஷன் தாஸுக்கும், அமிர்தாவிற்கும் இடையில் இங்கேயும் காதல் ஓடுகிறது. இந்த 12-ம் வகுப்பில் புதிய மாணவியாக உள்ளே நுழையும் புர்வா ரகுநாத்துக்கு கிஷன் தாஸ் மீது ொரு தலைக் காதல் ஏற்படுகிறது.

ஆனால் கிஷன் தாஸின் பார்வையோ அமிர்தா மீது இருக்கிறது. இதனால் பொறாமை கொண்ட புர்வா ரகுநாத் இவர்கள் இருவருக்கும் இடையில் புகுந்து ஒரு சம்பவத்தை நிகழ்த்தி விடுகிறார். அவர் செய்யும்  ஒரு சதி வேலையால் கிஷன் தாஸும், அமிர்தாவும் பிரிந்து விடுகிறார்கள்.

நாயகன் கிஷன் தாஸுக்கு பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே தானொரு இசை அமைப்பாளராக வர வேண்டும் என்பது கனவு. காதலை இழந்த அவர் தன் கனவை எப்படி எட்டினார்..? பிரிந்த காதலர்களும், நண்பர்களும் பல வருடம் கழித்து ஒரு ரீயூனியனில் சேரும்போது என்னென்ன நடக்கிறது? என்பதுதான் இந்த ‘முதல் நீ முடிவும் நீ‘ படத்தின் கதை.

இந்தப் படத்தின் முதல் ப்ளஸ் பாயிண்ட் படத்தில் நடித்துள்ள அனைவரின் நடிப்பும்தான். நாயகன் கிஷன் தாஸ் தன் கேரக்டரை நன்றாக உள்வாங்கி நடித்துள்ளார். இரு காலகட்டத்திற்கு ஏற்ப தன் உடல் மொழி, குரல் இரண்டிலும் நல்ல வித்தியாசத்தை காட்டியிருக்கிறார்.

அவருக்கு இணையாக மிக இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார் நாயகி அமிர்தா.  எமோஷ்னல் காட்சிகளில் பல படங்களில் நடித்தவரைப் போலவே நடித்துள்ளார்.

சைனீஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் காமெடியன் ஹரிஷ் இன்னொரு பக்கம் சிரிக்க வைத்திருக்கிறார். கேத்தரின் என்ற மாணவியை காதலிக்க வைக்க அமிலத்தினால் தன்னுடைய கையில் ‘சி’ என்று அவளது இனிஷியலைப் பொரித்துக் கொண்டு வந்து காட்டுகிறார். ஆனாலும் கேத்தரின் அவரை நிராகரிக்கிறார். ஆனாலும் மனம் தளராமல் அந்த எழுத்தை அப்படியே ‘ஜி’ என்று மாற்றி இன்னொரு மாணவியான காயத்ரியிடம் போய் கையை நீட்டுகிறார். இதுவும் முடியாமல்போய் கடைசியாக கௌரி என்ற பெண்ணாலும் அவர் துரத்தப்படுவது நிஜமான காமெடி.

இன்னொரு நாயகியாக வரும் புருவா ரகுநாத் போல்டான கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். அவரின் திமிர்த்தனமான பேச்சும், செய்கையும் ரசிக்க வைக்கின்றன. அவருக்கும் ஒரு எமோஷ்னல் காட்சியும் இருக்கிறது. அந்தக் காட்சியிலும் அவர் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

எதிர்பாராமல் அவர் நாயகனுக்குக் கொடுக்கும் முத்தமும், கடைசியில் கொடுக்கும் உதட்டு முத்தமும் கிஷன் தன் வாழ்வில் மறக்க முடியாதவையாக இருக்கும். அந்த அளவுக்கு சிறப்பாக இந்தக் காட்சிகளை படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

மேலும், படத்தில் நடித்திருக்கும் அனைவருமே மிகச் சிறந்த நடிப்பை வழங்கி ஒரு பள்ளி வாழ்க்கையை நம் கண் முன்னே காட்டுகிறார்கள். இவர்களிடம் இருந்து இப்படியான தேர்ந்த நடிப்பை வாங்கியதிலே தன் இயக்குநர் திறமையை நிரூபித்து இருக்கிறார் இயக்குநர் தர்புகா சிவா.

படத்தில் டெக்னிக்கல் விசயங்களிலும் குறையில்லை. இசையை தர்புகா சிவாதான் அமைத்துள்ளார். ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் முக்கிய அம்சமாக இசை கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த படத்தின் பாடல்கள், ஏற்கனவே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. தாமரை, கீர்த்தி, கபீர் வாசுகி ஆகியோரின் பாடல் வரிகள் அருமை.

மிகச் சிறந்த பாடல் ஒன்று க்ளைமாக்ஸில் இடம் பெறுகிறது. சித் ஸ்ரீராம் குரலில், பாடலாசிரியர் தாமரை எழுதிய இப்படத்தின் டைட்டில் பாடல், பல்வேறு வானொலி நிலையங்களின் தர வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. மேலும் பின்னணி இசையிலும் நல்ல மெச்சூட் இருக்கிறது.

சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவில் 1999-ஆம் காலகட்டத்தின் டோன் நன்றாகவே தெரிகிறது. ஸ்ரீஜித் சாரங் படத் தொகுப்பு செய்துள்ளார். பல இடங்களில் ஷார்ப். முன் பாதி, பின் பாதி இரண்டிலும் இன்னும் கவனம் எடுத்து 10 நிமிடங்களை குறைத்திருக்கலாம். 

கலை இயக்குநரான வாசுதேவனின் கலை இயக்கம் பல இடங்களில் ‘அட’ சொல்ல வைக்கிறது. பெரிய அளவில் செட் போடுவதற்கு பட்ஜெட் இடம் கொடுக்கவில்லை என்பது மட்டும் சில இடங்களில் தெரிகிறது.

படத்தின் துவக்கம் முதல் முடிவுவரை காதலே படத்தின் மையமாக இருப்பதால் இளைஞர்களுக்கு சோர்வளிக்காத படமாக இது இருக்கும். மேலும் பெரியவர்களுக்கு ஒரு சில இடங்களில் அலுப்புத் தட்டலாம்.

காலத்தை மாற்றி அமைத்து சரியான வாழ்வை வாழ்வதற்கான சூழல் இந்த உலகில் யாருக்குமே கிடைக்காது. ஒருவேளை அப்படி கிடைத்தால் எப்படி இருக்கும்? என்ற புனைவை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்திருக்கின்றன.

இந்தப் படத்தில் அந்த விசயத்தை லைட்டாக மட்டும் பயன்படுத்தி இருப்பதால் ஓ.கே. மொத்த கதையும் அப்படியே இருந்தால் சரியாக இருந்திருக்காது.

ஆனாலும் கிஷன் செய்யாத தவறுக்காக அவர் ஏன் அமிர்தாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் திரைக்கதையை எழுதினார் என்பது புரியவில்லை. மன்னிப்பு கேட்டு இருந்தால் எல்லா விஷயங்களும் சரியாக மாறி இருக்கும் என்று இயக்குநர் சொல்வது ஏற்புடையதாக இல்லை. அமிர்தாவின் தவறான புரிந்து கொள்ளல்தான் காதலர்களின் பிரிவுக்குக் காரணம். அதை கடைசிவரை இயக்குநர் ஏன் திரைக்கதையில் சொல்லவில்லை என்பதுதான்  நமக்குப் புரியாத புதிராக இருக்கிறது.

இப்படி ஒரு சில தேக்கங்கள் படத்தில் ஆங்காங்கே எட்டிப் பார்த்தாலும், ஓட்டி ஓட்டி பார்க்க வேண்டிய சூழலை கொடுக்காத வகையில் இந்த ஓடிடி படம் இருப்பதால்… வீட்டில் ரிலாக்ஸாக இப்படத்தை ஜீ-5-ல் பார்க்கலாம்.

RATING : 3.5 / 5

Our Score