இசையமைப்பாளர் ஜிப்ரான் தயாரித்த குறும்படம் கேன்ஸ் பட விழாவில் பங்கேற்கிறது..!

இசையமைப்பாளர் ஜிப்ரான் தயாரித்த குறும்படம் கேன்ஸ் பட விழாவில் பங்கேற்கிறது..!

இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது பரப்பரப்பான இசை வேலைகளின் இடையே தனது நண்பன் ரத்திந்திரன் R பிரசாத் இயக்கிய குறும்படத்திற்கு நிர்வாகத் தயாரிப்புப் பணியையும் செய்துள்ளார்.

DSC_9956

‘ஸ்வேயர் கார்ப்பரேஷன்ஸ்’ (Swayer Corporations) என்ற இந்தக் குறும்படம் உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காகத் தேர்வாகியுள்ளது. முழுக்க முழுக்க சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலையில் படமாக்கப்பட்டுள்ள இந்த ‘ஸ்வேயர் கார்ப்போரேஷன்ஸ்’ குறும்படத்தை துருக்கி நாட்டை சேர்ந்த தயாரிப்பாளர்கள் பசாக் கேசிலர் பிரசாத் மற்றும் ஹக்கன் கண்டார்லி சார்பாக இசையமைப்பாளர் ஜிப்ரான் பொறுப்பேற்று தயாரித்துள்ளார்.

இந்தக் குறும்படம் பற்றி பேசிய இசையமைப்பாளர் ஜிப்ரான், “ரத்திந்திரன் சிறு வயது முதலே என்னுடைய நண்பர். சினிமாவில் சாதிக்கவேண்டும் என்று துடிப்புடன் இருப்பவர். பல சர்வதேச திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். நல்ல சினிமா பற்றிய விஷயங்களை நாங்கள் இருவரும் ஆராய்வதுண்டு. நாங்கள் இருவரும் பல வருடங்களுக்கு முன்பேயே குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளோம், அதுவும் சர்வதேச அளவில் பேசப்பட்டது. இவர் ஜெர்மன் மொழியில் இயக்கிய Frullings Erwachen என்ற படத் தொகுப்பு விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தயாரிப்பு வேலைகளில் இறங்கியது நல்ல அனுபவமாய் இருந்தது. இக்குறும்படம் ‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்’ கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வானது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தயாரிப்பாளர்கள் மற்று எனது நண்பன் ரத்திந்திரனுக்கு வாழ்த்துக்கள்..” என்றார்.

“ஒரு ரசாயன நிறுவன அதிகாரியை கொல்வதற்கு செல்லும் சுற்று சூழல் ஆர்வலரின் பயணம்தான் இந்தப் படத்தின் கதை. 30 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த த்ரில்லர் கதையில் பாடலோ, பின்னணி இசையோ கிடையாது. அனாலும் ஜிப்ரான்  இப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளராக எனக்கு பக்க பலமாய் இருந்தார். எனது ஒளிப்பதிவாளர் ஃபரூக் K  பாஷா மற்றும் ஜிப்ரான் ஆகியோருடன் பணிப்புரிந்தது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது…” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ரத்திந்த்ரன் R பிரசாத்.  

ஜிப்ரான் மற்றும் ரத்திந்திரன் R பிரசாத் இருவரும் பிரான்சில்  வரும் மே 13 முதல் 23-ம் தேதி வரையிலும் நடைபெறவிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘ஸ்வேயர் கார்ப்போரேஷன்ஸ்’ குறும்படத்தின் திரையிடலுக்கு விழா கமிட்டியால் முறைப்படி அழைக்கப்பட்டுள்ளனர். 

Our Score