இந்தப் படத்தை எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன.
இந்தப் படத்தில் ரிச்சி கபூர், தேவராஜ் ஆறுமுகம், சுகன்யா சண்முகம், பூவிகா ராஜேந்திரன், ஆர்யா செல்வராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு – ஜேசன் வில்லியம்ஸ், ஒலி வடிவமைப்பு – கெவின் ஃபிரடெரிக், படத் தொகுப்பு – ரோஹித்.
தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் வந்திருக்கும் திரைப்படம் இது.
இந்த வாரத்திய பேய் படம் இதுதான்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஜவ்வாது மலையில் சப்த கன்னிகள் எனப்படும் ஏழு கன்னி தெய்வங்களுக்கு ஒரு சிறு கோயில் உள்ளது. அந்த கோவில் திருவிழாவை சுற்று வட்டார கிராமங்களில் இருக்கும் மக்கள் வருடா வருடம் நடத்துவார்கள்.
ஆனால் ஒவ்வொரு வருடமும் அந்த கும்பிடு பிரச்சனை ஆரம்பித்த உடனையே யாராவது ஒருவர் மர்மமான முறையில் இறப்பதாக அந்த கிராமத்து மக்கள் நம்புகிறார்கள். அதனால் அந்த கோவில் திருவிழா கிட்டத்தட்ட 20 வருடங்களாக நடக்காமலேயே இருக்கிறது.
அந்த கோவிலின் அருகே யாரோ ஒருவரின் ஆவி இருப்பதாகவும் அந்த ஆவிதான் இந்த கோவில் திருவிழாவை நடத்த விடாமல் தடுப்பதாகவும் அந்த மாவட்டம் முழுவதுமே பேச்சு அடிபடுகிறது.
இதைக் கேள்விப்பட்ட நான்கு நண்பர்கள் இதை ஒரு டாக்குமெண்டரியாக பதிவு செய்யலாம் என்று நினைத்து அந்த ஊருக்கு வருகிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இணைந்து கொள்ள அந்த ஐந்து பேரும் அந்த சப்த கன்னி கோவிலை நோக்கி செல்கிறார்கள்.
அந்த மலையிலேயே தங்கி இருந்து அமானுஷ்யமான சம்பவங்கள் ஏதேனும் நடக்கிறதா என்பதை பதிவு செய்ய நினைக்கிறார்கள். அவர்கள் வந்த நோக்கம் நிறைவேறியதா? இல்லையா?.. உண்மையில் அந்த இடத்தில் பேய் இருக்கிறதா.. பேயிடம் இருந்து தப்பித்தார்களா.. இந்த ஐந்து பேர் நிலைமை கடைசியாக என்ன ஆனது… என்பதுதான் இந்த படத்தின் கதை சுருக்கம்.
பவுண்டு பூட்டேஜ் என்று சொல்லப்படும் நேரடியாக கேமராவில் அப்படியே பதிவாகும் காட்சிகளை எந்த எடிட்டிங் செய்யாமல் ராவாக திரைக்கு கொண்டு வரும்விதமாக இந்தப் படத்தை எடுத்து திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த பவுண்டு புட்டேஜ் தயாரிக்கப்பட்டு திரைக்கு வந்திருக்கும் முதல் திரைப்படம் இதுதான்.
படத்தின் கதைக் களமும், திரைக்கதையும் காட்டுக்குள் 4 பேர் மட்டுமே இருக்கின்ற சூழலும், திகில் காட்சிகளை படமாக்கியிருக்கும்விதமும், பின்னணி இசையும் ஒன்று சேர்ந்து படம் நெடுகிலும் ஒரு சஸ்பென்ஸ், திரில்லரை கொடுத்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை.
படத்தில் நடித்திருக்கும் ரிச்சி கபூர், தேவராஜ் ஆறுமுகம், சுகன்யா சண்முகம், பூவிகா ராஜேந்திரன், ஆர்யா செல்வராஜ் அனைவருமே யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். காட்டுக்குள் அவர்களுக்கு உள்ளேயே நடைபெறும் மோதல்கள்.. சண்டைகள்… ஊடல்கள்.. கூடல்கள்… என்று அனைத்தையுமே அப்படியே ராவாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
திரைத்துறையில் இருக்கும் பெண்கள் சிகரெட் குடிப்பார்கள்.. மது அருந்துவார்கள்.. கஞ்சா புகைப்பார்கள்.. திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவுக்கும் தயாராக இருப்பார்கள் என்பதாக காட்டப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ் இரவு நேர காட்சிகளை அந்த காட்டுப் பகுதியில் இருக்கும் குறைந்த வெளிச்சத்திலேயே படமாக்கி இருக்கிறார். அதுவே கொஞ்சம் பளிச்சென்றுதான் இருக்கிறது. கேமராவில் பதிவான காட்சிகளை காட்டும் பொழுது அதில் ஏற்படும் அதிர்வுகள், அதில் இருக்கும் தொழில் நுட்பப் பிரச்சனைகளையும்கூட அப்படியே நமக்கு காண்பித்து இருக்கிறார்கள்.
சவுண்ட் டிசைனர் அந்தக் காட்டுப் பகுதியில் இருக்கும் ஒரு சின்ன சாதாரண இலை சருகின் சப்தத்தைக்கூட விட்டுவிடாமல் அப்படியே பதிவாக்கி இருக்கிறார். அதிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் கேட்கும் ஓசைகளை துல்லியமாக பதிவு செய்திருக்கிறார்கள்.
இது போன்ற பேய் படங்களில் எடிட்டரின் பங்கு மிக, மிக முக்கியமானது. ஆனால், இந்தப் படத்தில் எடிட்டருக்கு அதிகமாக வேலை கொடுக்காமல் வைத்திருக்கிறார்கள். காரணம் ஒவ்வொரு காட்சியின் நீளமும் ரொம்பவே அதிகம். அப்படியே இழுத்துக் கொண்டே போயிருக்கிறார்கள். பல காட்சிகளின் நீளத்தை குறைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஹேமந்த் நாராயணன் ஒரு வித்தியாசமான கதை அமைப்புடன் வித்தியாசமான திரைக்கதையில் தொழில் நுட்பத்தில் சிறந்த விளங்கும்படியாக இந்த படத்தை கொடுத்த முயற்சித்திருக்கிறார்.
ஆனால், படத்தில் நடித்தவர்களின் சில நடிப்பு சொதப்பல்களாலும், கதையில் சுவாரசியம் இல்லாததும், பேய்களை எப்படி காட்டுவது என்று தெரியாமல் ஒரு குழம்பிய ஒரு திரைக்கதையாக இருப்பதாலும் படத்தை முழுமையாக நம்மால் ரசிக்க முடியவில்லை.
இது ஒரு வித்தியாசமான முயற்சி என்ற ரீதியில் மட்டுமே இத்திரைப்படம் நம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவ்வளவுதான்..!
RATING : 2 / 5









