ஒரு துறையின் வளர்ச்சி அத்துறை சார்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையின் வளர்ச்சியை குறிக்கிறதா அல்லது.. அத்துறையின் தரத்தை வைத்து சொல்லப்படுகிறதா என்பது நிச்சயமாக பட்டிமன்றம் நடத்தி தீர்ப்பு சொல்ல வேண்டிய விஷயம்.
தமிழ்ச் சினிமாத்துறை டெக்னிக்கலாக முன்னேறியிருந்தாலும் கதை மற்றும் அதை சொல்லும்விதத்தில் பி்னனோக்கி செல்வதாக மூத்தத் தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவருமான திரு.முக்தா சீனிவாசன் வருத்தப்பட்டுள்ளார்.
நேற்று மாலை நடந்த ‘ஜமாய்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், “ஒவ்வொரு துறையும் முன்னோக்கிச் சென்றால்தான் அதன் வளர்ச்சி நல்லாயிருக்கு்ன்னு சொல்லலாம். ஆனா தமிழ்ச் சினிமா பின்னோக்கி போயிக்கிட்டிருக்கு.. டெக்னிக்கல் துறையில் வளர்ச்சியடைந்திருந்தாலும், அதைத் தாண்டிய மற்ற விஷயங்களில் வளரலை.. கன்டென்ட் விஷயத்தில் இது பின்னோக்கிதான் போகுது.. தரம்ன்னு ஒண்ணு சொல்ல முடியலை.. இதையெல்லாம் மனசுல வைச்சு இப்ப இருக்குற இயக்குநர்கள் தங்களோட படைப்புகளை கொண்டு வரணும்..” என்றார்..
கூடவே, “வா வாத்தியாரே ஊட்டாண்ட’ என்ற தரம்கெட்ட பாடலையும் நான்தான் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினேன். அதே நேரம்…..” என்றவர் இன்னொரு பாடலின் பெயரைச் சொல்லி “இந்த நல்ல பாடலையும் நான்தான் அறிமுகப்படுத்தினேன்.. இப்ப எந்தப் பாட்டு நிக்குது..?” என்றார்..
அதானே ஸார்.. ‘வா வாத்தியாரே ஊட்டாண்டே’ பாட்டு எனக்கும் சட்டுன்னு ஞாபகத்துல வருது.. ஆனா நீங்க சொன்ன இன்னொரு பாட்டு இப்போ ஞாபகத்துக்கே வர மாட்டேங்குதே..? அப்போ இது யார் தப்பு..? படைப்பாளியின் தவறா.. ரசிப்பவனின் தவறா..? ஒண்ணுமே புரியலை..!