கிச்சா சுதீப், நித்யா மேனன் நடிப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருக்கும் ‘முடிஞ்சா இவன புடி’ படம் நாளை வெளியாக இருந்த சூழலில் ஏற்கெனவே இன்னமும் முடிக்கப்படாமல் இருக்கும் ‘லிங்கா’ பட நஷ்டக் கணக்குடன் இந்தப் படமும் சேர்ந்து கொள்ள இழுபறி ஏற்பட்டுள்ளது.
‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ்தான் இந்த ‘முடிஞ்சா இவன புடி’ படத்திற்கும் மறைமுகமான தயாரிப்பாளர்.
இதனால் இந்தப் படத்தின் ரிலீஸின்போது ‘லிங்கா’ படத்தில் பாக்கியிருக்கும் விநியோக நஷ்டஈட்டு பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று ஏமாந்த விநியோகஸ்தர்கள் காத்திருந்தார்கள்.
வேந்தர் மூவீஸ் மதனுக்கும், மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலனுக்கும் ‘லிங்கா’ படத்திற்காக நஷ்டஈட்டு பணம் தர வேண்டி உள்ளது.
இதற்கிடையில் இந்தப் பிரச்சினையில் நுழைந்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் செயலாளர்களில் ஒருவரான அருள்பதி, ‘லிங்கா’ படத்தின் நஷ்ட ஈட்டுத் தொகையில் இன்னமும் கொடுக்கப்படாமல் இருக்கும் தொகையை என்னிடம் கொடுத்தால்தான் படத்தை திரையிட அனுமதிப்பேன் என்று தான் செல்வாக்காக இருக்கும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சார்பில் பேசியிருக்கிறார்.
“லிங்கா’ படத்தின் நஷ்ட ஈட்டுத் தொகையாக மதனுக்கும் சிங்காரவேலனுக்கும் தர வேண்டிய பணத்தை என்னிடம் தாருங்கள். இல்லாவிட்டால் படத்தை வெளியிடவிடமாட்டோம்…” என்று அருள்பதி மிரட்டுவதாக தயாரிப்பாளர் சூரப்ப பாபு நேற்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
அருள்பதியின் செயலால் கோபமடைந்த விநியோகஸ்தர் சிங்காரவேலன், ‘எனக்கு சேர வேண்டிய பணத்தைக் அருள்பதி திருட்டுத்தனமாக கேட்பதாக’ சென்னை விருகம்பாகம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் சிங்காரவேலன்.
அதில், “லிங்கா’ படத்தின் திருச்சி – தஞ்சாவூர் உரிமையை எங்கள் மெரினா பிக்சர்ஸ் பெற்றிருந்தது. இந்தப் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மூலம் எங்களுக்கு சேர வேண்டிய ரூ 1 கோடியில், 47 லட்சம் முதல் கட்டமாகக் கிடைத்தது. மீதி 53 லட்சம் கிடைப்பது தாமதமானதால் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம்.
வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், எங்கள் அனுமதி பெறாமல், சட்ட நியாயங்களுக்குப் புறம்பாக மீதமிருக்கும் நஷ்ட ஈட்டுப் பணத்தை தன்னிடம் ஒப்படைக்கும்படி தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷை, பிலிம் சேம்பர் செயலாளர் அருள்பதி என்பவர் கட்டப் பஞ்சாயத்து பேசி மிரட்டி வருகிறார்.
இதனால் நாங்கள் பணத்தை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கட்டப் பஞ்சாயத்து பேசி, எங்களுக்கு வரவேண்டிய பணத்தை அபகரிக்க நினைக்கும் அருள்பதி மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்…” என்று கோரியுள்ளார். அருள்பதிக்கும் இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளார் சிங்காரவேலன்.
இதற்கிடையில் நேற்று காலையில் இருந்து மாலைவரையிலும் பஞ்சாயத்து பேசியதில் இறுதியாக ‘முடிஞ்சா இவன புடி’ படத்திற்கெதிரான அனைத்துத் தடைக்கற்களும் நீக்கப்பட்டு படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.














