ராக்லைன் வெங்கடேஷ் வழங்கும் ராம்பாபு புரொடெக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘முடிஞ்சா இவன புடி’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று காலை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் கதாநாயகன் கிச்சா சுதீப், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் சூரப்பா பாபு, இசையமைப்பாளர் டி.இமான், பாடலாசிரியர் மதன் கார்க்கி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். வழக்கம்போல ஹீரோயின் நித்யா மேனன் மிஸ்ஸிங்.
விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “நான் பார்த்து வியந்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் இசை வெளியீட்டு விழாவில், நான் அவர் அருகில் அமர்ந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி.
எனக்குத் தோள் கொடுத்து பக்கபலமாக இருந்தவர் தனுஷ். அவரை நீண்ட நாட்கள் கழித்து இங்கே சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி.
‘ரெமோ’ படப்பிடிப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்தார். ‘ரெமோ’ படத்தில் நான் பெண் வேடத்தில் நடிக்கையில், அது எனக்கும் பெரிதும் உதவியது. ‘வில்லன்’ படத்தில் அஜித் கடைப்பிடித்த சில விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்து, ‘ரெமோ’ படத்தில் வரும் பெண் வேடத்தை மேலும் மெருகேற்றினார். டப்பிங்கில் பெண் வேடத்துக்கு பேசும்போது இவ்வாறு பேச வேண்டும் என சில விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தார்.
இப்போதைய ரசிகர்கள் ரசிக்கும்வகையிலான மிக சிறந்த படைப்பாக ‘முடிஞ்சா இவன புடி’ நிச்சயம் இருக்கும். படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும்போது நன்றாக தெரிகிறது. நான் மேடைக்கு வரும்போது விஜய்சேதுபதி அண்ணன் என்னைப் பார்த்து ‘சிவா.. நீ சூப்பர் பிகர்’ என்றார். மதன் கார்க்கியோ என்னை பெண் வேஷம் போட்டுக் கொண்டே வந்திருக்கலாம்.. என்றார். அந்த அளவுக்கு ரெமோ படத்தின் எனது பெண் வேடம் அனைவரையும் கவர்ந்திருப்பதில் எனக்கு பெரிதும் மகிழ்ச்சிதான்..” என்றார்.
அடுத்து பேசிய நடிகர் விஜய்சேதுபதி, “‘முடிஞ்சா இவன புடி’ ட்ரைலர் நிஜமாகவே அருமையாக உள்ளது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் எப்போதும் இயக்குநர்களில் ஜாம்பவான்தான். அவர் சிறந்த நடிகரும்கூட.. நான் சிவா நடித்த ‘ரெமோ’ படத்தின் முன்னோட்டத்தையும் பார்த்தேன். நிஜமாகவே மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார். அந்தப் படத்தையும் நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..” என்றார்.
விழாவில் நடிகர் தனுஷ் பேசியது, “எனக்கு கிச்சா சுதீப்பை மிகவும் பிடிக்கும். ‘நான் ஈ’ படத்தில் அவரின் நடிப்பை கண்டு வியந்தேன். நான் எந்த ஒரு நடிகருக்கும் போன் செய்து அவர்கள் நடிப்பைப் பற்றிப் பேசியதில்லை. ஆனால் ‘நான் ஈ’ படம் பார்த்துவிட்டு, கிச்சா சுதீப்புக்கு போன் செய்து என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
‘நான் ஈ’ படத்தை பார்த்த மாபெரும் இயக்குநர் பாலு மகேந்திரா ‘சரியான தேர்வு குழு அமைந்தால் சுதீபுக்கு நிச்சயம் நேஷனல் அவார்ட் கிடைக்கும். நான் அந்த தேர்வு குழுவில் இருந்தால் நிச்சயம் சுதீப்புக்கு தேசிய விருது கொடுத்திருப்பேன்’ என்றார். அதை நான் அவரிடம் சொல்வதற்கு சரியான இடம் இதுதான் என்று நினைக்கிறேன்.
எனக்கு சில நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை உண்டு. சிவாவுடன் நடித்துவிட்டேன். விஜய் சேதுபதியுடனும் நடித்துவிட்டேன். மிக விரைவில் மீண்டும் நாங்கள் இனைந்து நடிக்கவுள்ளோம். ஆனால் எனக்கு கிச்சா சுதீப்புடன் நடிக்க வேண்டும் என்ற ஆசைதான் அதிகம் உள்ளது. அதுவும் விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்..” என்றார்.










